100 நாள் விஜய் ஆட்சி… மக்கள் திருப்தியா? அதிருப்தியா?
”100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற தலைப்பில் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரங்களை செய்யத் தொடங்கியிருக்கிறது, த.வெ.க. அரசு. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை; போதைப்பொருள் ஒடுக்க 65 சிறப்பு அதிரடிப்படைகள்; தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; கிராமப்புற மறுமலர்ச்சிக்கு 6000 கோடி ஒதுக்கீடு; வெற்றி வீடு கட்டம் திட்டத்துக்கு 3500 கோடி ஒதுக்கீடு; 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்; விவசாயிகளுக்கு 6000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ. அளவிலேயே திட்ட அனுமதி என நூறு நாள் சாதனைகளை பட்டியலிடுகிறது த.வெ.க. அரசு.
மக்கள் என்ன சொல்கிறார்கள்? த.வெ.க. அரசின் நூறுநாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு மக்களை சந்தித்தது, அங்குசம். ”த.வெ.க. வுக்கு ஓட்டுப் போட்டவங்க முட்டுக் கொடுப்பாங்க. வெட்கம் விட்டு வெளிய சொல்ல மாட்டாங்க. மாசம் 2500 தாரேன்னாங்களே தந்தாங்களா? சிலிண்டர் என்னாச்சு?”னு வெடிக்கிறார், தெருவோர பூக்கடை பெண் வியாபாரி ஒருவர்.
”நடுத்தர வர்க்கத்துக்குத்தான் ரொம்ப கஷ்டம். கரண்ட் பில் ஓவர். மாசம் 300 கட்டிட்டு இருந்தேன். இப்போ 550 கட்டியிருக்கேன். இதுதான் மாற்றம். இதுல அடிக்கடி கரண்ட் வேற கட் ஆகுது.”, ”தண்ணீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. திமுகவை குறை சொன்னாங்க. ஸ்கூல்ல பேப்பரை காப்பி அடிக்கிற மாதிரி திட்டங்களை காப்பி அடிக்கிறாங்க.” என்கிறார்கள், குடும்ப பெண்கள்.
“பாட்டிலுக்கு பத்து ரூபாய்னு பாடுனாரு. இப்ப வரைக்கும் பத்து ரூபாய் கொடுத்துட்டுதானே இருக்கேன்.” இது ஒரு குடிமகனின் கவலை. “கரெப்ஷன் குறைஞ்சிருக்கு. அதிகாரிகள் இலஞ்சம் வாங்க பயப்படுறாங்க.”, “மற்ற ப்ரோகிராம்லா விட சட்டசபை லைவ் நல்லா இருக்கு.” இது இளைஞர்களின் குரல்.
கடந்த ”திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருட்களின் புழக்கம் கட்டுங்கடங்காமல் போய்விட்டது” என்பதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் த.வெ.க. முன்வைத்த பிரதான குற்றச்சாட்டுகள். ஆனால், ஆட்சி மாற்றம் நடந்தபிறகான 100 நாட்களில், முன்னைக்காட்டிலும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் கொலைகள் அதிகரித்திருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. மாறாக, போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் சொன்னதற்காக, கோவை கல்லூரி மாணவன் அமுதன் போதைவெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக்கூட, முன்பகை கொலை என்று அப்பட்டமாக மழுப்பி பேசி அம்பலப்பட்டு நிற்கிறது த.வெ.க. அரசு.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அத்தனையும் பெயர் மாற்றம் செய்து தொடர்வதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியபோது, அறிஞர் அண்ணாவே அப்படி செய்திருக்கிறார், கலைஞர் ஆட்சியில் அப்படி செய்திருக்கிறார் என்று விளக்கம் கொடுக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
“முந்தைய ஆட்சியில் போதையை ஒழிக்க ஒன்றும் செய்யவில்லை என்றவர்கள்; போதை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றியதாக போலீசாருக்கு எப்படி பதக்கங்களை வழங்கினீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டினார், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின். அதற்கும் பதிலில்லை.
“விவசாயக்கடன் தள்ளுபடி விவகாரத்தில், தேர்தல் சமயத்தில் சொன்னது ஒன்று. ஆட்சிக்கு வந்தபிறகு அறிவித்தது ஒன்று” என்பதாக சுட்டிகாட்டியபோதும், கஜானாவை துடைத்து எடுத்து சென்றுவிட்டார்கள். இருப்பதை வைத்து இதைத்தான் செய்ய முடியும் என்பதாக விளக்கம் அளிக்கிறார்கள்.
காவிரி ஆற்று நீர் சிக்கலிலும் ”திமுகவை போல, கடிதம் எழுதிக்கொண்டு இருக்க மாட்டோம்” என்றவர்கள்; பிரதமருக்கு கடிதம் எழுதியதையே சாதனையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக, எதற்கெல்லாம் திமுக அரசின் மீது குற்றஞ்சாட்டினார்களோ? அதையேத்தான் தற்போது நீங்களும் செய்து வருகிறீர்களே? நீங்கள் சொன்ன ”மாற்றம்” எங்கே? என்று கேள்வி எழுப்பினால், அதெல்லாம் 50 வருடங்களாக ஊறிப்போன விவகாரம். வெறும் நூறு நாளில் மாற்றிவிட முடியுமா? என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள்.
த.வெ.க.வினரின் இத்தகைய விளக்கம் எப்படி இருக்கிறது தெரியுமா? நட்புக்காக திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில், ”ஊரையே அணிதிரட்டி அழைத்துச் சென்று, ”மலையை தூக்கி வையுங்கள். நான் சுமந்து காட்டுகிறேன்” என்பதற்கும்; தற்போதைய த.வெ.க.வினரின் பதிலுரைக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்கள்?
”மக்கள் பணத்தை தொட வேண்டிய அவசியமில்லை. தொடவும் விடமாட்டேன். தொட்டவனையும் விடமாட்டேன்” என்று பதவியேற்பு விழாவில் சபதமிட்டார் முதல்வர் விஜய். முந்தைய ஆட்சியில் பழம் தின்று கொட்டைப்போட்ட, ஊழல் புகாரில் சிக்கி வழக்கை எதிர்கொள்ளும், செங்கோட்டையன் தொடங்கி விஜயபாஸ்கர்கள் வரையில் எல்லோரையும் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு ஊழல் பற்றி பேசும் அருகதை இருக்கிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பிவிட்டார்கள். முதல் ஆளாக ஓடிவந்து உதவிக்கரம் நீட்டிய காங்கிரஸ் கட்சியினருக்கான அன்புப்பரிசுதான் ”தகைசால் விருதா?” என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
தன்னுடன் படத்தில் கூட நடித்தவருக்கு அமைச்சர் பதவி. தனது ஜனநாயகன் படத்துக்கு பணம் போட்ட கே. வெங்கட நாராயணாவுக்கு அரசு பதவி. மற்றொரு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி. உடன்வலம் வந்த உதவியாளர் ஜெகதீஷ்-க்கு அரசு பதவி. கட்சியின் கொ.ப.செ.வாக வலம் வந்த லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவி. சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷாவுக்கு உறவினர்கள் வரிசையில் வி.ஐ.பி. இருக்கை. இதற்கெல்லாம் இதுவரையில் பதிலில்லை.
முதல்வரின் திடீர் அலுவலக இடமாற்றத்துக்கும்; அதற்காக டெண்டர் விடப்பட்ட விவகாரத்துக்கும் பதிலில்லை. அமைச்சர் பேரம் பேசிய ஆடியோ ஆதாரம் இருக்கிறது என்று சவால் விட்ட அண்ணாமலைக்கு எதிராக சிறு முனுமுனுப்புக்கூட இதுவரை இல்லை. அவதூறாக பேசிவிட்டார் என்று உதயநிதியை கைது செய்ய துடித்தவர்கள், ஆபாசத்தின் உச்சமாகவும் கீழ்த்தரமாகவும் பேசிய நயினார் நாகேந்திரனுக்கு எதிராக இதுவரை மூச்சே விடவில்லை. இதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது?
காக்கைச்சிறகினிலே திரைப்படத்தில், ”கடவுளை காட்டுகிறேன்” என்பதாக பெரும் கும்பலையே அழைத்துச் சென்று, ”எல்லோரும் கண்ணத்தில் போட்டபடி, இல்லாத கடவுளை கண்டதுபோல கையெடுத்து கும்பிட” வைத்த வடிவேலுவின், கதையாகத்தான் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள் இவ்வளவுக்குப்பிறகும் த.வெ.க.வுக்கு முட்டுக்கொடுத்து வரும் ”நடுநிலையாளர்கள்”!
— மாஸ்டர் ஆதவன்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.