மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான நேரம் இதுதான்… !
தமிழ்நாடு வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு,
வணக்கம். இந்த இதழ் உங்களின் கரங்களில் தவழும்போது, அடுத்த வாரத்தில் 23 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியிருக்கும். ஒரு மனிதனின் பல்வேறு அடிப்படை உரிமைகளில் ஜனநாயகத்தை வலிமை பெறச் செய்ய வாக்களிப்பதும் அடிப்படை உரிமையாகும். தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டால், நமக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள்தான் ஆட்சியில் அமர்வார்கள். நாம் விரும்பாத ஒன்று நம்மை அபகரித்துக்கொள்ளும் ஆபத்து நிகழும். இந்த வகையான ஆபத்து நிகழாத வண்ணம் நாம் அனைவரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று வாக்களிப்போம் என்ற உறுதியினை மேற்கொள்ளவேண்டும்.
அண்மையில் நடந்து முடிந்த கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் புதுச்சேரியில் 91% வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்திய வரலாற்றில் இது முதன்முறை என்றும் சாதனையாகக் கொண்டாடப்படுகின்றது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு 73.63% 2024 மக்களவைத் தேர்தலில் நடைபெற்ற வாக்குப் பதிவு 69.72% என்ற அளவில் இருந்துள்ளது. இந்த எண்ணிக்கை 90% என்பதைத் தாண்டி 95% அளவில் இருக்கவேண்டும். தமிழ்நாடு இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாகத் திகழவேண்டும் என்பதில் தமிழ்நாடு வாக்காளர்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள் இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவுக்குக் கட்சிகள் அதிக அளவில் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணி என்றும் அதிமுக+பாஜக கூட்டணியும் போட்டியிடுகின்றன. யாருடனும் கூட்டணி இல்லாமல் வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றது. புதிதாகத் தொடங்கப்பட்ட தவெக கட்சியும் தனித்தே போட்டியிடுகின்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் மறைந்த ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவை நடத்தியவர்களில் ஒருவராக இருந்த சசிகலா அனைத்திந்தியப் புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்தக் கட்சி, பாமக கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக மருத்துவர் இராமதாசு தொடங்கப்பட்ட அய்யா பாசறை மக்கள் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியிலிருந்து விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சியும் தனித்தே சில தொகுதிகளில் போட்டியிடுகின்றது. பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாவட்டங்களில், தென் மாவட்டங்களில் தேவேந்திரக் குல வேளாளர் வாக்குகளைப் பெற்றிட டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் இயங்கி வரும் புதிய தமிழகம் தனித்தே போட்டியிடுகின்றது. இப்படியான ஒரு சூழ்நிலையைத் தமிழ்நாடு இதுவரை சந்தித்தில்லை என்பதே உண்மை.
அண்மையில் வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவுகளைத் தெரிவிக்காமல், பல்வேறு குழப்பங்களை உள்ளடக்கி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. காரணம் ஆயிரம் கருத்துக்கணிப்புகள் வெளிவந்தாலும் மக்கள் அளிக்கும் தீர்ப்பே யாருக்கு ஆட்சி என்பதைத் தீர்மானிக்கும் வலிமை பெற்றது. ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில், கட்சிகள் வாக்காளர்களுக்கு வைட்டமின் “ப” பட்டுவாடா நடைபெறுவதாகப் பொதுவாகக் குற்றச்சாட்டு எழுகின்றது.
“வாக்களிக்க வாக்காளர் பணம் பெறுவது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்குரியது” என்ற அடிப்படையில், தேர்தல் பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் cVIGIL (சி-விஜில்) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல், பரிசுப் பொருட்கள் அல்லது மது விநியோகம் செய்தல், அனுமதி இன்றிச் சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்ற எந்தவிதமான தேர்தல் விதிமீறல்களாக இருந்தாலும் அவற்றை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்பும் வசதியை கொண்டிருக்கிறது, இந்த செயலி.
”ஜனநாயகத் திருவிழாவில் வாக்களிப்போம்! முறைகேடுகளைத் தவிர்ப்போம்! நமக்கான மக்கள் பிரதிநிதிகளைச் சுதந்திரமாகத் தேர்வு செய்வோம்!” என்ற உறுதியினை ஏற்போம். 100% வாக்குப் பதிவைச் செலுத்தி … மக்கள் அதிகாரம்தான் ஜனநாயகம் என்பதை நிலைநிறுத்துவோம்!
தமிழன்புடன்
ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.