எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா தமிழ் வழியில் நடத்த கோரிக்கை!
திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை பண்பாட்டு மக்கள் பேரியக்கத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பாட்டாளி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
திருச்சி மாநகரம் திருவெறும்பூரில் அமைந்திருக்கும் சிவத்தலங்களில் ஒன்றான எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வருகிற ஏழாம் தேதி நடைபெறுகிறது. திருநாவுக்கரசர் வழிபட்ட தலமான, காவிரி தென்கரையில் அமைந்துள்ள எறும்பீஸ்வரர் ஆலயம் பின்னாளில் திருவரம்பூர் என்று அழைக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் சரியாக பராமரிக்கப்பட்டு வருவதில்லை என கோவிலுக்கு வந்து செல்லும் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஆலயத்தில் உள்ள சுற்றுச்சுவர், தெப்பக்குளம் பராமரிக்கப்படவில்லை.
இந்நிலையில் கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தில் சரியான பாதை இல்லாத நிலையிலும், விழாவிற்கு வருபவர்கள் வாகன நிறுத்துமிடம், குடிநீர், கழிவறைகள் முறையாக அமைக்கப்படாமலும் அவசர அவசரமாக தமிழ்நாடு அரசை திருப்திப்படுத்தும் விதமாக இந்து சமய அறநிலைத்துறை கும்பாபிஷேகத்தை ஏற்பாடு செய்துள்ளது.
ஏறத்தாழ 27 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்தப்படும் என தெரிய வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழிலேயே வழிபாடு நடத்தப்பட வேண்டும்.
வேள்விச்சாலை, கருவறை,கோபுர கலசம் உள்ளிட்ட மூன்று நிலைகளிலும் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலேயே வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்ப்பு எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக எறும்பிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் சமஸ்கிருதத்தில் நடத்தப்படுமானால் தமிழ் அமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் இணைத்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என மக்கள் விடுதலை பண்பாட்டு பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பாட்டாளி அவர்கள் தெரிவித்துள்ளார்.