பனியிலும் வெயிலிலும் வாடி வதங்கும் கோவிலுக்கு சொந்தமான வாயில்லா ஜீவன்கள் ! பக்தர்கள் வேதனை
திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரையில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோவிலான ஸ்ரீ சம்பத்கெளரி உடனுறை நந்திரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் தெற்கு கோபுர வாசலின் மேற்கில் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் வில்வமரம் வேப்பமரம் உள்ளிட்ட சிவனுக்கு உகந்த மரங்கள் உள்ளன.

இப்பகுதியில் கடந்த சில வருடங்களாக கோவிலுக்கு நேர்ந்து விடப்படும் மாடுகள் கட்டி பராமரித்து வந்த நிலையில் இந்த மாடுகளுக்கு பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் வழிபாடு, அமாவாசை உள்ளிட்ட தினங்களிலும் , கோவிலுக்கு வரும் போதும் கோவில் மாடுகளை வழிபாடு செய்து அதற்கு அகத்திக்கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சமீப காலமாக ஒரு சில நபர்கள் நந்தவனத்தில் மாடுகளை கட்டக்கூடாது என்றும் அப்பகுதியில் கட்டியிருந்த மாடுகளை அங்கிருந்து வெளியேற்றி, கோவில் மதில் சுவர் ஓரமாக பனியிலும், வெயிலிலும் வாடி வதங்கும் அளவிற்கு மாடுகளை கட்டி வைத்துள்ளது பக்தர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தற்போது கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் கடும் வெயிலில் வாயில்லா ஜீவன்கள் படும் வேதனைகளை கண்டு பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் மூங்கில் தெப்பக்குளம் அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலேயே கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அந்த இடத்தில் கோசாலை அமைத்து கோவில் மாடுகளை பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் தனிநபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நந்தவனத்தை மீட்டு மீண்டும் முன்பு போலவே கோவில் மாடுகளை நந்தவனத்தில் கட்டி பராமரிக்க வேண்டும் எனவும், இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலையில் காசி விஸ்வநாதர் கோவில் நிலத்தில் கோவில் நிர்வாகம் மூலம் கோசாலை அமைத்து கோவில் மாடுகளை பராமரித்து வாயில்லா ஜீவன்களை காக்க வேண்டும் என அறநிலைத்துறை அதிகாரிகளுக்குசமூக ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.