பாவம் என்று பரிதாபம் காட்டினால், இப்படித்தான் செய்வீர்களா? – திருநங்கையின் ஆதங்கம் !
திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையத்தில் திருநங்கை ஒருவர் நம்மளுடைய ஒரு சகோதரியிடம் காசு கேட்ட பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு தகராறு இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. திருநங்கை அந்த சகோதரியை பேருந்துக்குள் சென்று அடிப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். அந்த திருநங்கை பெண்ணென்று பார்க்காமல், தாக்குவது மிகவும் கொடுமையான ஒரு விஷயம். தமிழக அரசோ இல்லை காவல்துறை அதிகாரிகளோ, திருநங்கைகள் மீது ஏதோ ஒரு பரிதாபத்தோடு கண்டுகொள்ளாமல் அவர்களை விட்டு விடுவதால் அந்தப் பரிதாபத்தை இவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சமூக விரோதிகள் என்ற பெயரை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் அனைவரும் பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இன்றைய சூழலில் திருநங்கைகளை கொண்டு பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் காவல்துறையும் ஏன் பயப்படுகிறீர்கள் என்று புரியவில்லை. இந்த உலகத்தில் இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு பெண்களே பாதுகாப்பு கொடுக்காத வேளையில் தமிழக முதல்வர் சிங்கப்பெண் என்ற ஒரு திட்டத்தையும் உருவாக்கினார். சிங்கப் பெண்ணையே இன்று திருநங்கைகள் கை வைக்கும் அளவிற்கு நடந்து கொண்ட இந்த செயல்பாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும், திருச்சி மாவட்ட நிர்வாகமும், திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர்களும், திருச்சி மாவட்ட கோட்டை காவல் நிலைய அதிகாரிகளும் இதனை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் திருநங்கைகளுக்கு எந்த விதத்தில் அறிவுரை கூறப் போகிறார்கள்? எந்த விதத்தில் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
பொதுமக்களிடம் யாசகம் கேட்கும் திருநங்கைகள் அந்த யாசகத்திற்கான ஒரு வழிமுறையோடு அன்போடு பொறுமையோடு இருப்பது இல்லை. அவர்கள் கொடுக்கக் கூடிய சிறிய தொகையும் அவர்கள் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள். திருநங்கைகள் யாரிடமும் கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய தாய் தந்தையே அவர்களை புறக்கணித்து வெளியே துரத்தும் பொழுது, பொது மக்களாகிய மற்றவர்கள் இவர்களுக்கு கொடுத்த உதவ வேண்டும் என்ற கட்டாயம் எந்த இடத்திலும் இல்லை. சட்டமும் இல்லை. பொதுமக்களிடம் திருநங்கைகள் காட்டக்கூடிய கோபத்தையோ, வெறுப்பையோ இது போன்ற செயல்களிலோ, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் முறையாக கேட்டு குடும்பத்தோடு இருக்க வேண்டியதுதானே?
காலை முதல் மாலை வரை சம்பாதிக்கும் காசுகளை என்னதான் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை. தூத்துக்குடியில் இதே போன்று திருநங்கை பேருந்தில் பயணம் செய்பவரிடம் கத்தியை கழுத்தில் வைத்து உடம்பில் பல இடங்களில் கீரியும் அவருடைய செல்போனையும் பறித்து விட்டதாக ஒரு செய்தி.

மனதிற்கு வேதனையாக இருக்கிறது. தமிழக அரசு சிறந்த திருநங்கை என்று பட்டம் வேறு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். திருநங்கைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது ஒட்டுமொத்த திருநங்கைகளை இது பாதிக்கின்றது. தற்போது முதல்வர் இதுபோன்று ஈடுபடும் திருநங்கைகளை என்ன செய்யப் போகிறீர்கள்? இவர்களுக்கான கடுமையான சட்டம் இருக்கிறது. ஆனால், அதை யாரும் முன் வைத்து சட்டத்தின்படி நடந்து கொள்வது இல்லை.
திருநங்கைகளான நாங்களே இது போன்ற தவறை தட்டி கேட்டால், எங்களுக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இந்த திருநங்கைகள் இவர்களை கட்டுப்படுத்துவோர் யாரும் கிடையாது. மிகுந்த மன வேதனையோடு இந்த இரண்டு நாட்கள் என்னுடைய மனம் கணக்கிறது. பல பெரிய திருநங்கைகளுக்கு பலர் அடிமையாகவும் அவர்களுடைய கட்டளையின் பேரில் வசூல் செய்து அவர்களுக்கு ஒரு பங்கும் இவர்களுக்கு மூன்று பங்கும் வைத்துக் கொண்டு அவர்களுடைய ஆதரவை பெரிதாக எடுத்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையில் புகார் அளிக்கும் பட்சத்தில் காவல்துறை முன்பு ஒரு 100-200 திருநங்கைகள் கூடிக்கொண்டு ஒரே சத்தம் போடுவதால், காவல்துறையினரும் அதனை கண்டு அஞ்சுகின்றனர். எதனால் காவல்துறை இவர்களை கண்டு அஞ்சுகிறார்கள்?
கஜோல், திருநங்கை, திருச்சி.







Comments are closed, but trackbacks and pingbacks are open.