சமீபத்தில் வெளியான அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக சர்ச்சையாகியிருக்கிறது. வழக்கு விவகாரம் நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், TRB யின் தேர்வு நடைமுறைகளிலேயே அதன் அடிப்படையிலேயே பல்வேறு குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் கல்வியாளர்கள். பணிக்கான விண்ணப்பபடிவத்தில், ஸ்லெட் / செட் / யு.ஜி.சி. நெட் / பி.எச்.டி. என பல்வேறு படிநிலையிலான கல்வித்தகுதிகள் குறித்து கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் கேட்டுவிட்டு அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்னு சொல்ற மாதிரி, எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து மதிப்பிடுவது எவ்வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகிறார்கள்.
மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், கல்வித்தகுதிக்கு ஏற்றபடி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அதிகபட்சம் 20 வரை வழங்கப்படும் நிலையில், அதுபோன்றதொரு மதிப்பீட்டு முறை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். குறிப்பாக, எழுத்துத்தேர்வு, கல்வித்தகுதிக்கான வெயிட்டேஜ், பணி அனுபவம், நேர்முகத்தேர்வு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மதிப்பீட்டு முறைதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, தமிழக அரசின் அரசாணை எண்: 246, பாட அறிவுக்கு முன்னுரிமை கொடுத்தது. விரிவான விடையளி பகுதியில், 8 கேள்விகளை வழங்கி அதிலிருந்து 5 கேள்விகளை எழுத சொன்னார்கள். ஒவ்வொரு கேள்விகளுக்கும் தலா 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. பத்து வருடம் பணி அனுபவம் கொண்டவரையும்; புதியதாக பி.எச்.டி. படித்து முடித்து விண்ணப்பிப்பவரையும் சமன் செய்யும் வகையில் நேர்காணலுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, நேர்காணலின்போது, பாடம் நடத்தும் திறன், சம்பந்தபட்ட பாடத்தில் அவருக்குள்ள அறிவு, அதனை வெளிப்படுத்தும் திறன், குரல் வளம், மொழித்திறன் உள்ளிட்ட மாணவர்களுக்கு போதித்தலுக்கான அடிப்படையான அம்சங்களில் கவனம் செலுத்தியது.
ஆனால், இத்தகைய அறிவியல்பூர்வமான அணுகுமுறையை அப்படியே சிதைக்கும் வகையில் அரசாணை 230 இருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். பாட அறிவுக்கும் முன்னுரிமை இல்லை; கூடுதல் தகுதிக்கும் மதிப்பில்லை; பணி அனுபவம் – நேர்காணல் அணுகுமுறையிலும் மாற்றம்; மிகக்குறிப்பாக ஒரே கேள்விக்கு அதுவும் 300 வார்த்தைகளில் எழுத வேண்டிய கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்ற மதிப்பீட்டு முறையும்தான் சிக்கலுக்கான அடிப்படை என்கிறார்கள்.
பொறுத்திருந்துதான் பார்ப்போமே. நீதிமன்றத்தில் TRB என்னதான் சொல்கிறது. நீதிமன்றமும் இதில் என்ன முடிவு எடுக்கப்போகிறதென்று?
முழுமையான வீடியோவை காண
தகுதிக்கு இடமில்லை ! பாட அறிவுக்கு முன்னுரிமை இல்லை !
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.