அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழகத்தின் திருப்புமுனை : திருச்சி தேர்தல்களம் சொல்வது என்ன ?

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழக அரசியலில் திருச்சி எப்போதுமே திருப்புமுனை மாவட்டமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் திமுக நடத்திய மாநாடு மட்டுமல்ல; புதியதாக கட்சித்தொடங்கிய த.வெ.க. விஜய் முதன்முதலாக அரசியல் பிரச்சாரத்தை தொடங்கியதும் திருச்சியிலிருந்துதான். அவர் போட்டியிடும் தொகுதிகளுள் ஒன்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி கிழக்கு தொகுதிதான். அந்த அளவுக்கு திருச்சி தமிழக அரசியலில் ஒரு முக்கியத்துமான இடத்தை இன்றளவும் தக்க வைத்திருக்கிறது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், துறையூர் (தனி), இலால்குடி, முசிறி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திருச்சி மேற்கு :

திமுக சார்பாக மூன்றாவது முறையாக கே.என்.நேரு போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் அமமுக சார்பில் தொட்டியம் ராஜசேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் புவனேஷ்வரியும்; த.வெ.க. சார்பில் ஜி.ராமமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

திருச்சி கிழக்கு மற்றும் திருச்சி மேற்கு ஆகிய இரு தொகுதிகளும் 2008 தொகுதி மறுவரையின் போது புதியதாக உருவான தொகுதிகள். இதற்கு முன்னர் திருச்சி 1, 2 என்பதாக இருந்த தொகுதிகள். தொகுதி வரையரைக்கு பின்னர் நடைபெற்ற 2011 தேர்தலில் அதிமுக சார்பில் மரியம்பிச்சை வென்று அமைச்சர் பதவி ஏற்க சென்னை சென்ற சமயத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதி வென்ற தொகுதி. அதன்பிறகு, 2016, மற்றும் 2021 ஆகிய இரு முறையும் தொடர்ந்து திமுக சார்பில் அக்கட்சியின் முதன்மை செயலரும் திருச்சியின் அசைக்க முடியாத சக்திகளுள் ஒருவருமாக திகழும் கே.என்.நேருவின் கைவசம் இருக்கிறது.

கே.என்.நேருதிமுக வுடன் மல்லுக்கட்டுவது அமமுகதான். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ராஜசேகர் இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொட்டியம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது அமமுகவில் ஐக்கியமாகி வேட்பாளராகியிருக்கிறார். கே.என்.நேருவுக்கு எதிராக, துணிச்சலான கருத்துகளை பேசி, தேர்தல் பிரச்சாரத்தில் நேருக்கு கடும் சவாலை கொடுத்தும் வருகிறார். ஆனாலும், தான் உள்ளிட்டு திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளின் வெற்றிக்காக பாடுபடும் கே.என்.நேரு தனது சொந்த தொகுதிக்கான பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டித்தான் வருகிறார். கடுமையாக போராடி வென்றாக வேண்டிய இக்கட்டில் இருக்கிறார், கே.என்.நேரு.

திருச்சி கிழக்கு :

2008 தொகுதி மறுசீரமைப்புக்குப்பிறகு, தொடர்ந்து இரண்டு முறை அதிமுக வசமிருந்த தொகுதியை 2021 இல் மீட்டு தற்போது வரை தன் வசம் வைத்திருக்கும் முனைவர் இனிகோ இருதயராஜ் மீண்டும் களம் காணுகிறார். த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதி. அதிமுக சார்பில் ஜி.ராஜசேகரன், நாம்தமிழர்கட்சி சார்பில் மருத்துவர் வி.கிருஷ்ணசாமி உள்ளிட்டு 20 வேட்பாளர்கள் களத்திலிருக்கிறார்கள்.

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

திமுக – த.வெ.க.வுக்கும் இடையில்தான் நேரடி போட்டி. தனது சொந்த சாதி ஓட்டுக்கள் கணிசமாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலும், புதியதாக இந்த தொகுதியில் சேர்க்கப்பட்ட 60,000 உறுப்பினர்களை மலையாகவும் நம்பித்தான் விஜய் இந்த தொகுதியை டிக் செய்திருந்தார். ஆனால், சிட்டிங் எம்.எல்.ஏ.வின் தொகுதி சார்ந்த களப்பணிகள் அவருக்கு சாதகமாக இருக்கிறது. கட்சித்தலைமையே அவருக்கே மீண்டும் சீட்டு கொடுப்பதா என்று யோசித்த வேளையிலும், தொகுதியின் ஃபீல்டு ரிப்போர்ட்தான் அவரது களப்பணிகள்தான் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பையே பெற்றுத்தந்தது என்ற நிலையில், வெற்றி நிச்சயம் என்ற நிலையிலும் பிரச்சாரத்தை தொய்வின்றி தொடர்ந்து வருகிறார், முனைவர் இனிகோ இருதயராஜ்.

விஜய்
விஜய்

சிறுபான்மையர் நிறைந்த தொகுதி. குறிப்பாக, கிறிஸ்துவ வெள்ளாளர் சாதியினரின் மனங்களை கவர்வது யார்? என்ற கேள்வி இத்தொகுதிக்கான வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதாக இருக்கிறது. இந்த புள்ளியிலிருந்துதான், த.வெ.க.வின் ஜோசப் விஜய் இந்த தொகுதியை குறிவைத்திருக்கிறார். கிறிஸ்துவ பாதிரியார்கள் சிலரும் பின்னணியில் பெரும் செல்வாக்கை செலுத்திவரும் தொகுதியாகவும் இருக்கிறது என்கிறார்கள். போராடி சீட்டை பெற்றது போலவே, மிகவும் போராடித்தான் வெல்ல வேண்டியிருக்கிறது என்ற நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார், இனிகோ இருதயராஜ்.

ஸ்ரீரங்கம் :

1952 முதலாக இன்றுவரையில் 16 தேர்தல்களையும் எதிர்கொண்ட பழமையான தொகுதிகளுள் ஒன்று. அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்த தொகுதி. ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதி. திமுக சார்பில் துரைராஜ்; அதிமுக – ஆர்.மனோகரன்; நாம் தமிழர் கட்சி – தர்மராஜ்; த.வெ.க. – ரமேஷ் ஆகியோர் உள்ளிட்டு 21 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

அதிமுக 9 முறை வென்ற தொகுதி. 1996 மற்றும் 2021 ஆகிய இரண்டுமுறை மட்டுமே, திமுக வென்றிருக்கிறது. சில காரணங்களால் சிட்டிங் எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தாலும், சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகள் திமுகவுக்கு சாதகமான அம்சமாகவே நீடிக்கிறது. திமுக வேட்பாளராக களம் காணும் துரைராஜ், அந்தநல்லூர் ஒன்றிய சேர்மனாக பத்தாண்டு காலம் இருந்தவர். கே.என்.நேருவுக்கு நெருக்கமானவராக கட்சி வட்டாரத்தில் அறியப்படுபவர். அவருக்கு எதிரான வழக்குகள், குற்றச்சாட்டுகள் இருப்பினும் அவையெல்லாம் கட்சியின் நலனுக்காக அவர் மல்லுக்கட்டியவை என்கிறார்கள். எப்படியும் அமைச்சரின் வியூகத்தில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

மனோகரன்
மனோகரன்

அதிமுக தரப்பில் களமிறங்கியுள்ள ஆர்.மனோகரன் ஏற்கெனவே திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர். 1886 இலேயே ஸ்ரீரங்கம் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். 1996 இல் ஸ்ரீரங்கம் மாநகராட்சி வரம்பில் வந்தபோது கவுன்சிலராக இருந்தவர். கட்சியின் மாவட்ட செயலராக இருந்தவர். 2016 இல் திருச்சி மேற்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஸ்ரீரங்கத்தில் ஜெ.வுக்காக களப்பணி ஆற்றியதற்கான பரிசாக, தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டவர். 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தோடும் மண்ணின் மைந்தராகவும் களத்தில் திமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறார்.

நாதக சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் 25 வயது பட்டதாரி இளைஞர் தர்மராஜ், புதுக்கோட்டையை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொகுதியிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறார். த.வெ.க. சார்பில் களமிறங்கியுள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பு அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், பூர்வீகம் ஸ்ரீரங்கம் என்பதால், அக்ரஹார வீதியில் வீடு வீடாக சென்று ”நான் உங்க ஆத்துப் பிள்ளை” என்ற செண்டிமெண்டோடு காபி அருந்தியபடியே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

திமுகவின் துரைராஜுக்கும் அதிமுகவின் மனோகரனுக்கும்தான் போட்டி நிலவுகிறது. எப்படியும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆசியோடு துரைராஜ் கரையேறிவிடுவார் என்றே சொல்கிறார்கள்.

திருவெறும்பூர் :

திருச்சி மாவட்டத்தின் நட்சத்திர தொகுதிகளுள் ஒன்று. திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. ப.குமார்; நாம்தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்; த.வெ.க.சார்பில் விஜயகுமார் (எ) நவல்பட்டு விஜி உள்ளிட்டு 26 பேர் களத்தில் இருக்கிறார்கள். விஜயகுமார் என்ற பெயரில் 3 பேரும்; குமார் என்ற பெயரில் 3 பேரும் போட்டியில் இருக்கிறார்கள்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இதுவரை இந்த தொகுதியில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தேர்தல்களில், 6 முறை திமுக, 4 முறை அதிமுக, காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சிபிஎம் பாப்பா உமாநாத் ஒருமுறை, திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் ஒருமுறை, திமுக வேட்பாளரை எதிர்த்து தேமுதிக ஒருமுறை வென்றிருக்கிறார்கள். தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இதே தொகுதியில் 2016, 2021 இல் தொடர்ந்து இரண்டு முறை வென்றவர். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

ப.குமார்
ப.குமார்

அதிமுகவின் ப.குமார், 2009  மற்றும் 2014 ஆகிய இரண்டுமுறையும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். அதிமுகவின் மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 2021 தேர்தலிலும் இதே திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து நின்று தோல்வியை தழுவியவர் தற்போது மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.

திமுகவில் திருவெறும்பூர் வட்டாரத்தில் தனிப்பட்ட செல்வாக்கை கொண்டவராக கருதப்படும் நவல்பட்டு விஜி, திமுகவிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளராகியிருக்கிறார். அவரது தனிப்பட்ட செல்வாக்கு, த.வெ.க. தொண்டர்களின் ஆதரவு, சொந்த சாதி ஓட்டு என கணிசமான அளவு ஓட்டுகள் சிதறுவது, திமுகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

நாதக ராஜேஷ்
நாதக ராஜேஷ்

நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷும் இந்த தொகுதியில் தனக்கான தனிப்பட்ட செல்வாக்கை கொண்டவர்தான் என்கிறார்கள். இதையெல்லாம் மீறி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சட்டமன்ற செயல்பாடுகள்; தொகுதி மக்களுடன் தொடர்ந்து இயல்பாக பழகிவருவது; கட்சித் தொண்டர்களை அரவணைத்து செல்வது மற்றும் தொகுதிக்கு அவர் செயல்படுத்திய நலத்திட்டங்களோடு, தேமுதிக தொண்டர்களின் களப்பிரச்சாரமும் அவருக்கு கை கொடுக்கும் என்றே சொல்கிறார்கள்.

மண்ணச்சநல்லூர் :

திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. எஸ்.கதிரவன்; அதிமுக சார்பில் ஆர்.வி.பரதன்; நாதக சார்பில் தேன்மொழி; த.வெ.க. சார்பில் சரவணன் உள்ளிட்டு, மொத்தம் 13 பேர் களத்தில் இருக்கிறார்கள். 2008 தொகுதி சீரமைப்புக்குப் பிறகு, 2011 இல்தான் இத்தொகுதி உருவானது. 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு முறையும் தொடர்ந்து அதிமுக வசமிருந்த தொகுதியை, 2021 இல் இளம் அறிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்ட சீ.கதிரவன் திமுகவின் தொகுதியாக மாற்றியிருக்கிறார். அதை தக்க வைக்க மீண்டும் அவரே களமிறங்கியிருக்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த தொகுதியில் கணிசமான முத்தரையர்களின் வாக்குகளை குறிவைத்து, அதிமுக சார்பில், சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஆர்.வி. பரதன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.வி என்றழைக்கப்படும் ஆர்.விஸ்வநாதன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தரையர் நிறைந்த தொகுதியில், ரெட்டியார் சாதியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

கதிரவன்திமுக சீ.கதிரவன் தரப்பில், தேர்தலுக்கு முன்னதாகவே கிராமங்கள் தோறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தியவர், தற்போது தேர்தல் சமயத்திலும் கிராமந்தோறும் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தி வருகிறார். கிட்னி திருடன் என்பதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனம் தொடங்கி எல்லாவற்றுக்கும் நேரடியாகவே சவால் விட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு தான் கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் பட்டியலிடும் அவர், தொகுதி மக்களுக்கு தான் நடத்தும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதியை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டி ஓட்டுக்கேட்டுவருகிறார். சாதி வேண்டுமா? வளர்ச்சி வேண்டுமா? என்ற கேள்வியோடு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். இந்த தொகுதியை பொருத்தமட்டில், திமுக – அதிமுக இருமுனைப்போட்டிதான். சிட்டிங் எம்.எல்.ஏ., தொகுதிக்கு செய்திருக்கிறார். தொகுதி மக்களோடும், கட்சி நிர்வாகிகளோடும் நல்ல தொடர்பிலிருக்கிறார் என்பதும்; கடந்த 5 ஆண்டுகால அவரது தொகுதி சார்ந்த செயல்பாடுகளும் கதிரவனை முன்னிலையில் வைத்திருக்கிறது.

இலால்குடி :

திமுக சார்பில் பாரிவள்ளல்; அதிமுக சார்பில் லீமா ரோஸ்; த.வெ.க. சார்பில் கு.ப.கிருஷ்ணன்; நாதக சார்பில் நே.மதன்; சுயேட்சையாக மன்சூர் அலிகான் உள்ளிட்டு 24 பேர் களத்திலிருக்கிறார்கள்.

அடிப்படையில் விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் நிறைந்த தொகுதியான இலால்குடியில், காவிரி, கொள்ளிட கரையோர கிராமங்களில் நெல்லும், வானம் பார்த்த பூமியான புள்ளம்பாடி ஒன்றியத்தில் பருத்தி, மக்காச்சோளம் பிரதான விவசாயமாக இருந்து வருகிறது. உடையார், ரெட்டியார், முத்துராஜா, மூப்பனார் மற்றும் பட்டியல் சாதியினர் நிறைந்த தொகுதி.

லீமா ரோஸ் மார்ட்டின் - லால்குடி தொகுதி
லீமா ரோஸ் மார்ட்டின் – லால்குடி தொகுதி

தொடர்ந்து 10 முறை தி.மு.க. வென்ற தொகுதி. 2006 முதல் 2021 வரை தொடர்ந்து நான்கு முறை திமுக சார்பில் அ.சௌந்தரபாண்டியன் வென்ற தொகுதி. வெற்றி நம் பக்கம்தான் என்ற உற்சாகத்தில், திமுக சார்பில் தொழிலதிபர் த.பாரிவள்ளல் களமிறங்கியிருக்கிறார். கே.என்.நேருவை எதிர்த்து வெற்றி பெற்ற தொகுதியின் ஒரே பெண் வேட்பாளரான காங்கிரசு கட்சியின் லோகாம்பாளுக்கு அடுத்து, இதே தொகுதியில் களம் காணும் இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு, உடையார் சொந்தங்களின் ஓட்டுகளை குறிவைத்து அ.தி.மு.க.வின் லீமா ரோஸ் களமிறங்கியிருக்கிறார். ஏறத்தாழ 6000 கோடி ரூபாயை மொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பாக கொண்டிருக்கும், தமிழகத்தின் நெ-1 பணக்கார வேட்பாளர் என்ற அடையாளத்தோடு, அ.தி.மு.க.வின் லீமா ரோஸ் மார்ட்டின் களம் காணும் தொகுதியாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிட்டது.

முன்னாள் அமைச்சர், மூத்த அரசியல்வாதி என்ற அனுபவத்தோடு த.வெ.க. சார்பில் கு.ப.கிருஷ்ணன் களத்தில் இருக்கிறார். வெற்றியோ, தோல்வியோ மோதி பார்த்துவிட வேண்டியதுதான் என்ற வைராக்கியத்தில் நா.த.க. சார்பில் இளம் வழக்கறிஞர் நே.மதன் களத்தில் இருக்கிறார். சினிமாவில் வில்லனாகவே அடையாளப்படுத்தப்பட்ட, நடிகர் மன்சூர் அலிகான் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதோ ஒரு தேர்தலில் பங்கேற்று காமெடியனாகவே மாறி பட்டையை கிளப்பி வருகிறார். இந்தமுறை இலால்குடியை அவர் தேர்வு செய்திருக்கிறார்.

கு.ப.கிருஷ்ணன்
கு.ப.கிருஷ்ணன்

தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் அரசியல் வியூகமும் திமுக தொண்டர்களின் களப்பணியும் தன்னை எப்படியும் கரை சேர்த்துவிடும் என்ற தெம்பில் திமுக சார்பில் த.பாரிவள்ளல் களத்தில் குதித்திருந்தாலும், அதிமுக தரப்பில் லீமாரோஸ் மார்ட்டின் களமிறக்கப்பட்டிருப்பதன் காரணமாக, மிக எளிதாக வென்றுவிடலாம் என்ற திமுகவின் கனவை சற்றே தொந்தரவு செய்திருக்கிறது என்பதே உண்மை. களப்பணிகளோடு, கொஞ்சம் கைக்காசை செலவும் செய்தால்தான் வெற்றிக்கனியை தட்டிப்பறிக்க முடியும் என்ற நிலையில்தான் இலால்குடி தொகுதியின் கள நிலவரங்கள் அமைந்திருக்கின்றன.

துறையூர் (தனி) :

தொடர்ந்து இரண்டு முறை திமுக வசம் இருந்த இந்த தொகுதி இந்தமுறை கூட்டணி கட்சியான காங்கிரஸ் வசம் சென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் லெனின் பிரசாத்; அதிமுக தரப்பில் சரோஜா; த.வெ.க தரப்பில் ரவிசங்கர்; நா.த.க தரப்பில் கௌசல்யா உள்ளிட்டு 15 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

லெனின் பிரசாத்
லெனின் பிரசாத்

2008 தொகுதி மறுசீரமைப்புக்குப்பிறகு உருவான தொகுதி என்பதால், இதுவரை எதிர்கொண்ட மூன்று தேர்தல்களில், முதல்முறை அதிமுக வென்றிருந்த நிலையில், 2016 மற்றும் 2021 இல் தொடர்ந்து இரண்டுமுறை திமுக ஸ்டாலின்குமார் வசம் இருந்த தொகுதி தற்போது காங்கிரசுக்கு கைமாறியிருக்கிறது.

சொந்தக் கட்சியிலேயே வேறு யாருக்கேனும் கொடுத்திருந்தால்கூட பரவாயில்லை, கூட்டணி கட்சிக்கு தொகுதியை  கைமாற்றிவிட்டதாக கூறி, சிட்டிங் எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும் சுணக்கமும் இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்ததிலேயே சர்ச்சை எழுந்தது. இந்த தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர்கள் சாதியினர் கணிசமாக இருப்பதால், அந்த சாதியை சேர்ந்தவருக்கான முக்கியத்துவம் மறுக்கப்பட்டதாகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஸ்டாலின்குமார்
ஸ்டாலின்குமார்

காங்கிரஸ் தரப்பில், கோஷ்டி பூசல்களை கடந்து வேலை களத்தில் வேலை செய்வதெல்லாம் சிக்கலுக்குரியதாக இருக்கிறது என்கிறார்கள். கே.என். நேருவின் மகன் அருண்நேருவின் பாராளுமன்ற தொகுதிக்குள் வரும் தொகுதி என்பதாலும், திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிக்கனியை கட்சித்தலைமையிடம் சமர்பித்தாக வேண்டுமென்ற வைராக்கியம் காரணமாகவும் எப்படியும் கூட்டணி கட்சி வேட்பாளரை கே.என்.நேரு கரை சேர்த்துவிடுவார் என்ற தெம்பிலிருக்கிறார்கள் கதர் சட்டைக் காரர்கள்.

மணப்பாறை :

திமுக தரப்பில் அப்துல் சமது; அதிமுக தரப்பில் பி.விஜயக்குமார்; நா.த.க தரப்பில் அருணகிரி; த.வெ.க. தரப்பில் கதிரவன் உள்ளிட்டு 18 பேர் களத்திலிருக்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்புக்குப்பிறகு உருவான இத்தொகுதி. இதற்கு முன்னர் மருங்காபுரி தொகுதியாக இருந்த சமயத்திலிருந்து இதுவரையில் 8 முறை அதிமுக வென்றிருக்கிறது. பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினரும் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் பரவலாக வசித்து வந்த போதிலும், கவுண்டர் மற்றும் முத்தரையர் சமூகங்களை சேர்ந்தவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வந்திருக்கிறது.  கடந்த கால வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், சாதி மற்றும் மதத்தை முன்வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக, திருப்புமுனையாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கு அதுவும் கூட்டணி கட்சியான ம.ம.க.வுக்கு 2021 இல் ஒதுக்கி வெற்றி பெற வைத்த தொகுதி என்ற தனிச்சிறப்பு இத்தொகுதிக்குரியது.

டாக்டா் விஜயகுமார்
டாக்டா் விஜயகுமார்

அதிமுக தரப்பில், கடந்த 1 வருடத்திற்கு முன்பு அதிமுகவிற்கு வந்து விராலிமலை விஜயபாஸ்கர் துணையோடு மாநில மருத்துவர் அணியின் துணை செயலாளராக பதவியை பெற்றவரான மருத்துவர் விஜயகுமார் வேட்பாளராகியிருக்கிறார். மணப்பாறை பகுதியில் குமரன் மருத்துவமனை என்ற பெயரில், ஏரியாவிற்குள் பெயர் பெற்ற மருத்துவமனையின் உரிமையாளர்தான் விஜயகுமார். ஏரியாவில் திமுகவின் அடையாளமாக, அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவராக இருந்த மருத்துவர் விஜயகுமாரை அதிமுகவில் சீட்டு வாங்கி தர ஏன் துடிக்கிறார் விராலிமலை விஜயபாஸ்கர் என்று அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், மேலிடத்து செல்வாக்கில் துணிந்து களத்தில் இறங்கியிருக்கிறார் மருத்துவர் விஜயகுமார். விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வரையில் பலரும் களத்திற்கு வந்து செல்கிறார்கள். அவ்வளவு ஏன், எடப்பாடியே இந்த தொகுதியில் சிறப்பு பிரச்சாரத்தை நடத்திவிட்டு சென்றிருக்கிறார்.

திமுக கூட்டணியில், தேமுதிக தரப்பில் எதிர்பார்த்த தொகுதிகளுள் இதுவும் ஒன்றாக இருந்தது. தேமுதிகவின் மாவட்ட செயலர் பாரதிதாசன், தனது மாமனாரும் திமுக மாத்தூர் ஒன்றியசெயலாளருமான மாத்தூர் கருப்பையாவின் உதவியோடு எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்தான், மீண்டும் ம.ம.க.வுக்கு திமுக தலைமை ஒதுக்கியது. ஆனாலும், தேமுதிக தொண்டர்கள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு நேரடி அரசியலுக்கான களம் தயாரான நிலையில், திமுகவின் முரசொலியில் இன்ப வெற்றி அறிவிப்பாக வெளியாகும் வகையில் கூட்டணிக்கட்சித் தோழர்களோடு வெற்றிக்கான முரசை ஓங்கித் தட்டிவருகிறார்கள்.

முசிறி :

திமுக தரப்பில் கருணைராஜா; அதிமுக தரப்பில் யோகநாதன்; நாதக  தரப்பில் பாக்யலெட்சுமி;  த.வெ.க. தரப்பில் விக்னேஷ் உள்ளிட்டு 11 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளுள் ஒன்று முசிறி. இதுவரை அதிமுக – 8 முறை; திமுக – 5 முறை – காங்கிரஸ் – 2 முறை வென்ற தொகுதி. கடைசியாக, தொடர்ந்து இரண்டுமுறை அதிமுக வசம் இருந்த தொகுதியை, 2021 இல் திமுக வசமாக்கி எம்.எல்.ஏ. ஆனவர் காடுவெட்டி தியாகராஜன். திருச்சி மாவட்டத்தின் 9 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவராக இருந்துவிட்டு போனார் என்ற அளவுக்கே இவரது சட்டமன்ற பணிகளை மதிப்பிடுகிறார்கள்.

கருணைராஜா
கருணைராஜா

இதே தொகுதியில் கடந்த 2006 இல் திமுகவின் வேட்பாளராக வென்ற திருச்சி என்.செல்வராஜின் மகன்தான், தற்போது திமுக தரப்பு வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் கருணைராஜா. இவரது அப்பா என்.செல்வராஜ், 1987 – 1993 வரையில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளராக இருந்தவர். 1980 இல் திருச்சி எம்.பி.யாக இருந்தவர். 1994-இல் வைகோவுடன் மதிமுகவுக்கு சென்றவர் பின்னர் 1996 இல் திமுகவுக்கு திரும்பி 2006 இல் இதே முசிறி எம்.எல்.ஏ. ஆனவர். 2011 இல் மண்ணச்சநல்லூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016 இல் மீண்டும் தனக்கு திமுக சீட் வழங்கவில்லை என்று அதிமுகவுக்கு போனவர், அரசியலில் பெரிய அளவுக்கு சோபிக்காமல் 2019 இல் இறந்தும்போனார். இன்னும் சொல்லப்போனால், திருச்சியின் அசைக்க முடியாத அடையாளமாக உருவெடுத்திருக்கும் கே.என்.நேருவுக்கான களத்தை அமைத்துக்கொடுத்ததே செல்வராஜ்தான். அந்த நன்றிக்கு பரிகாரமாகத்தான் மேலிடத்தில் பேசி, அவரது மகனுக்கு வாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறார்.

அதிமுக தரப்பில் களம் காணும் யோகநாதன், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். சில பல வழக்குகளில் சிக்கியவர். உச்சநீதிமன்றத்தால் கிரிமினல் வழக்கு ஒன்றில் ஒருவருட தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் என்பதெல்லாம் இவருக்கு எதிரான அம்சங்களாக இருக்கிறது.

கே.என்.நேருவின் ஆசியோடு களமிறக்கப்பட்டிருக்கும் கருணைராஜாவை, திமுக கழகத் தோழர்களின் உதவியோடு எப்படியும் எம்.எல்.ஏ. ஆக்கிவிடுவார்கள் என்றே நம்பியிருக்கிறார்கள்.

—   அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.