திமுக தயவில் த.வெ.க. ஆட்சி – கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு!
தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். திமுகவின் தோழமைக் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கிட வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்களால், மக்களின், மக்களுக்காக என்பதே மக்களாட்சி.
தேர்தல் முடிவுகளை கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுவதே மக்களாட்சி மாண்புகளை உயர்த்திப் பிடிக்க உதவும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் இருந்து தேர்தல் முடிவுகளை அணுகி, ஆட்சியில் யார் அமர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
மக்களாட்சியில் எண்ணிக்கைதான் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், தொகுதி எண் 185 – திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒருவர் 83375 வாக்குகள் பெற்றார், அடுத்து வந்தவர் 83374 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு தான் வித்தியாசம். அந்த ஒரு வாக்கு கூடுதலாக பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போன்ற சம்பவம் கடந்த காலங்களில நடந்துள்ளது. நீதிமன்றத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு அதே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மக்களாட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் தெளிவாக சித்திக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். சமமான கற்றல் வாய்ப்புடன் முறையான பள்ளிக் கல்வி அனைவருக்கும் உறுதி செய்வது மட்டுமே மக்களாட்சியை வலுப்படுத்த உதவும்.
இன்றையச் சூழலில், எண்ணிக்கை மட்டுமே அளவு கோல். யார் என்பது முக்கியமல்ல, யாருக்கு கூடுதல் இடங்கள் என்பது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.
ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவகர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைத்தவுடன், மக்களாட்சி மீது இந்திய மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு, பல்வேறு சூழ்ச்சிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்டத்திற்கு ஆளுநர் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை ஒப்புதல் வழங்காமல், மக்கள் தேர்ந்தெடுத்தாலும், எது சட்டமாக வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானப்போம் என்று பகிரங்கமாக கூறினார்கள்.
இனி வாக்களிப்பது பயனற்றது என்ற சிந்தனையை மக்கள் மனங்களில் விதைக்கப் பார்த்தார்கள்.
வாக்குச் சீட்டின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் குழப்பமான சூழல் உருவாகும், அந்த குழப்பத்தை பயன்படுத்தி, ஒரு சர்வாதிகாரி ஆட்சியை கைப்பற்றும் சூழலை உருவாக்குவதே இவர்களின் செயல் திட்டம் என்பதை உணர முடிகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்தது மக்களாட்சி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதை நிரூபித்தது.

ஒரு கட்சிக்கு 108, மற்றொரு கட்சிக்கு 59, அடுத்தக் கட்சிக்கு 47 என்ற அளவில் மூன்று கட்சிகள் வாக்குகள் பெற்றுள்ளன, இவற்றின் கூட்டணியில் இருந்த கட்சிகளில் சில ஒற்றை இலக்கில் போட்டியிட்டு ஒற்றை இலக்கில் இடங்களை வென்றுள்ள.
மக்களாட்சி மாண்புகளின் அடிப்படையில் 108 இடங்கள் பெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும்.
அந்த கட்சிக்கு அதிகப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா? இல்லையா? என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்ற பிறகு, சட்ட மன்றம் அதை தீர்மானிக்கும்.
சட்டமன்றம் (Legislature), செயலாட்சி (Executive) இரண்டிற்கும் தனித்தனி பொறுப்புகள் உண்டு. சட்டமன்றம் தீர்மானிக்க வேண்டியதை செயலாட்சி தீர்மானிக்க இயலாது. அவ்வாறு செய்ய முற்படுவது மக்களாட்சிக்கு எதிரான செயல்.
1996 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் பாஜக 161 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அன்றைய குடியரசுத் தலைவர் திரு. சங்கர் தயாள் சர்மா, அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜக மக்களவைக் கட்சித் தலைவர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்து, நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க கால அவகாசம் கொடுத்தார்.
1996 மே 16 பதவியேற்ற திரு. வாஜ்பாய் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே, மே 28 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய வரலாற்றில் மிகக் குறுகிய காலம், அதாவது, 13 நாட்கள் மட்டுமே பாஜக பதவியில் இருந்தது.
1996ல் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து, அன்றைய குடியரசுத் தலைவர் பெரும் தவறு செய்துவிட்டார். பாஜகவிற்கு அப்படி ஒரு வாய்ப்பை அன்றைய குடியரசுத் தலைவர் கொடுத்து இருக்கக் கூடாது என்று, இன்றைய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கருதுகிறாரா? என்பதை தெளிவுபட கூற வேண்டும். தேசிய முன்னணியும் ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட சூழலிலும், வாஜ்பாய் அவர்கள் அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அத்தகையச் சூழல் இல்லை. தனிப் பெரும்பாண்மை பெற்றுள்ள காரணத்தால் தவெக மட்டுமே ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது.
ஆட்சி அமைக்கும் அளவில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறாமல் போனதை மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.
எதனால் இவ்வாறு நிகழ்ந்தது என்பதை உணர்ந்துக் கொள்ள மக்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது.
அனைவரின் அணுகுமுறையையும் சீர்தூக்கிப் பார்த்து, அடுத்த தேர்தலில் மிகுந்த எச்சரிக்கையுடன், தங்களின் இறையாண்மைப் பொறுப்பை உணர்ந்து மக்கள் செயல்படுவார்கள். அதற்குரிய கால அவகாசத்தை மக்களுக்கு வழங்குவது அவசியமாகும்.
“ஆட்சி அமைந்து ஆறுமாத காலம் பார்க்கலாம். ஆட்சியை மதிப்பிட்டு முடிவெடுப்போம்” என்று அடுத்த பெரிய எண்ணிக்கையைப் பெற்ற திமுகவின் தலைவர் கூறியது மே மாதம் 7ம் நாளிதழ்களில் பெரிய அளவில் செய்தியாக வெளிவந்தது.
இந்த செய்தி, திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. தான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், முடிவுகள் வெளியான அடுத்த இரண்டு நாட்களில் தொகுதி மக்களைப் பார்த்தது, தனது கட்சியினருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் உற்சாகம் தரும் அளவில், தேர்தல் பணிகளுக்கான பாராட்டையும், நன்றியினையும் தெரிவித்தது, இவை அனைத்தும் அவரின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. சமகாலத்தில் இந்திய தலைவர்களில் மிகச் சிறந்த ஆளுமையாக திரு. மு. க. ஸ்டாலின் திகழ்கிறார் என்று பல தரப்பட்டவர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். அரசியல் வரலாற்றில், ஆட்சியை பிடிக்க முடியாத ஒரு தலைவர் இந்த அளவு பாராட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையில், திமுக தலைவர் அவர்களுக்கு உருவாகி இருக்கும் பெரும் மதிப்பை குறைக்கும் வகையில், அவரே விரும்பாத அரசியல் நகர்வுகளை யாரோ செய்ய முற்படுகின்றனரா? என்ற சந்தேகம் எழத் தொடங்கி உள்ளது.
திரைத் துறையில் பெரிதும் மதிக்கப்படும் திரை நட்சத்திரம் திமுக தலைவரைத் சந்தித்துப் பேசுகிறார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.” என்ற தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
திரை நட்சத்திரத்தின் சந்திப்பும், தீர்மானத்தின் வாசகமும் திமுக வேறு ஏதோ திட்டத்தை ஆலோசிக்கிறதா? என்ற ஐயத்தை உருவாக்கி உள்ளது.
கொள்கை தெளிவில்லாமல் தவெக தேர்தலை சந்தித்துள்ளது. மக்களின் ஒரு பகுதியினரை, ஏதோ எதிர்பார்ப்பு, தவெகவிற்கு வாக்களிக்க வைத்துள்ளது.
அதன் தலைவர் மற்றும் அவருடன் இருக்கும் சிலரின் நடவடிக்கைகள் பெரும் பகுதி மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது உண்மை.
இவை அனைத்தையும் கடந்து, மக்களாட்சியில் மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர். அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது அரசியல் கட்சிகளின் கடமை.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராசர் படங்களை முன்னிறுத்தியே மக்களின் வாக்குகளை தவெக பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
தவெக பெற்ற வாக்குகள் பாஜகவை நிராகரிக்கும் வாக்குகள். மிகக் குறிப்பாக, பாஜகவின் மிகவும் ஆபத்தான தேர்தல் வாக்குறுதிகளை நிராகரிக்கும் வாக்குகள். கடந்த தேர்தலில் ‘நான்கு’ என்ற எண்ணிக்கை, இந்த தேர்தலில் ‘ஒன்று’ என்ற அளவில், அதுவும் அதிமுக தலைமையிலான கூட்டணியின் பலத்தால் கிடைத்தது என்பதே உண்மை.
இத்தகைய சூழ்நிலையில், மக்களாட்சி கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பது மிகவும் அவசியமானதாகும்.
கோட்பாட்டின் அடிப்படையில் இல்லாமல், தனி மனித சாகசத்தை நம்பி மட்டுமே பெரும் வெற்றி பெற்ற கட்சிகள் மிகவிரைவில் அம்பலப்பட்டு போனார்கள். அவர்கள் வாழ்நாளிலே அடுத்தடுத்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள் என்பதை உணர்ந்து, இன்றையத் தேதியில் பெரும்பாண்மை பெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்கவும், மக்களை பிளவுபடுத்தும் மதவாத நாசகர சக்திகளின் சூழ்ச்சியில் இருந்து தமிழ்நாடு காப்பாற்றப்படவும், வலுவான எதிர் கட்சியாக திமுக செயல்பட்டு, அதன் தோழமைக் கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதும் மக்களாட்சி மாண்புகளை உயர்த்திப் பிடிக்க உதவும்.
தேர்தலில், பாஜகவை நிராகரித்து, திமுகவிற்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு தனது அறிக்கை மூலம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுத்தது.

பாஜகவை மக்கள் நிராகரித்து உள்ளனர். அடுத்த வரும் தேர்தல்களில் உண்மைகளைப் புரிந்து வாக்களிக்க மக்களுடன் உரையாடலை தொடர்ந்து நிகழ்த்துவோம்.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தது ஒரு கட்சிதான், அதற்கு அடுத்து அதிக எண்ணிக்கையை வைத்திருக்கும் கட்சி, எதிர்கட்சியாக அமர்வதாக அறிவித்துள்ளது. இதற்கு பிறகும், ஆளுநர் எண்ணிக்கையை கேட்பது, ஏதோ சூழ்ச்சியை அரங்கேற்ற வாய்ப்புகளை ஆளுநர் தருகிறாரா? என்ற பெரும் கேள்வியை எழுப்புகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, மக்களின் வாக்கிற்கு மதிப்பளித்து, தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். திமுகவின் தோழமைக் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கிட வேண்டும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராசர் முன்வைத்த கோட்பாடுகளுக்கு எதிராக அரசின் நிர்வாகம் செயல்பட்டால், தனக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப் பெறுவார்கள் என்பதை உணர்நது தவெக செயல்பட வேண்டும்.
பல்வேறு வடிவங்களில், குழப்பத்தையும், மோதல்களையும் உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர் கட்சியின் துணையுடன் முறியடிக்க அமையவிருக்கும் அரசு முன்வர வேண்டும்.
தற்பெருமைக்கும், ஆணவத்திற்கும் இடம் தராமல், மக்களாட்சி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதே மற்ற கட்சிகள் தனக்கு ஆதரவு அளித்துள்ளன என்பதை தவெக உணர்ந்து ஆட்சியை நடத்திட முன்வர வேண்டும்.
சட்ட மன்றம் தனது பணியை செய்யட்டும் என்ற அடிப்படையில், தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சி என்ற காரணத்தால், தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்பதை உணர்ந்து ஆளுநர் நடந்துக் கொள்வதே இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஆள்கிறது என்பதன் வெளிப்பாடாக அமையும்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை








Comments are closed, but trackbacks and pingbacks are open.