”முப்பது வருசத்துக்கும் மேல, பஸ்டாண்ட் வியாபாரத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள். எங்களது கோரிக்கையை அரசு கணிவோடு அணுக வேண்டும்.” என்பதாக கண்ணீரோடு கோரிக்கை விடுக்கிறார்கள், திருச்சி மாவட்டம் இலால்குடி காமராஜர் பேருந்து நிலைய வியாபாரிகள் நலச்சங்கத்தினர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள 11 தாலுகாவில் ஒன்று இலால்குடி. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சுமார் நாற்பது வருடங்களாக இயங்கிவந்த காமராஜர் பேருந்து நிலையத்தை நிரந்தரமாக மூடிவிட்டு, அங்கிருந்து சற்றேறக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பூவாளூர் சாலையில் புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 31.89 கோடி செலவில், 5.32 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இப்புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 120 கடைகளும் இடம்பெற்றிருக்கின்றன.
“காமராஜர் பேருந்து நிலையத்தை கடந்த 20 வருடங்களுக்கு முன்புதான் புதுப்பித்தார்கள். நகராட்சி அலுவலகத்தையும் கட்டினார்கள். இப்பேருந்து நிலையத்தை நம்பி சுமார் 55 கடைகள் இயங்கி வந்தன. ஒவ்வொரு கடைக்கும் 1.5 இலட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறோம். தற்போது வரையில் மாதம் வாடகை 8000 முதல் 8500 வரையில் கட்டி வருகிறோம். ஒரு மாதம்கூட வாடகை பாக்கியில்லாமல் கட்டியிருக்கிறோம். வாடகை பாக்கியில்லாத நகராட்சி என்ற பெயர் எடுத்திருக்கிறது இலால்குடி நகராட்சி.
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, அவசரம் அவசரமாக பணிகள் முழுமையடைவதற்கு முன்பாகவே புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்துவிட்டார்கள். இங்கிருந்து 1 கி.மீ தூரம் நடந்து போக வேண்டும். கைக்குழந்தையுடன், கைச்சுமையுடன் வரும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். யாரும் புதிய பேருந்து நிலையத்துக்கு போவதில்லை. ரவுண்டானா அருகிலேயே இறங்கி ஏறுகின்றனர். இதனால், ரவுண்டானா அருகில் உள்ள கடைகாரர்களுக்கும் பயணிகளுக்கும் அன்றாடம் வீண் விவாதங்கள் சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. கடை வீதியெல்லாம் இங்கே இருக்கும்போது, யார் புதிய பேருந்து நிலையத்துக்கு அவ்வளவுதூரம் அதுவும் நடந்து செல்வார்கள்?” என்பதாக கேள்வி எழுப்புகிறார், பெயர் வெளியிட விரும்பாத வியாபாரி ஒருவர்.
“மக்கள் பயன்பாட்டுக்காக புதிய பேருந்துநிலையம் கட்டியதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால், இந்த வியாபாரத்தை நம்பி வாழும் நூறு குடும்பங்களை அழித்துதான் இதை செய்ய வேண்டுமா? பழைய பேருந்து நிலையம் அருகில்தான் கடைவீதி இருக்கிறது. கிராமங்களிலிருந்து பயணிக்கும் பயணிகள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு பேருந்தை பிடிக்க வசதியாக இருந்தது. பக்கம் பக்கமாக மூன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது. எப்படி பார்த்தாலும் 3000-க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வந்து செல்கிறார்கள். வாங்க வேண்டிய பொருளையெல்லாம் இங்கே வாங்கிவிட்டு யாராச்சும் ஒருகிலோமீட்டர் தூரம் நடந்து பஸ் பிடிப்பாங்களா? பழைய பஸ்டாண்டோட அமைப்பே அவ்வளவு சௌகரியமானது. பஸ்ஸ விட்டு இறங்கி தேவையானதை வாங்கிட்டு அதே பஸ்ல கூட ஊருக்குத் திரும்பிடலாம். ஆனால், இப்போ கட்டியிருக்க புது பஸ்டாண்ட்ல கடையோட அமைப்பே பார்வையாக இல்லை. ஏர்போர்ட் மாதிரி கட்டியிருக்காங்க. ஒண்ணுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள பஸ் ஊருக்கு போயி சேர்ந்திடும்.” என்கிறார், மற்றொரு வியாபாரி.
“புதுசா பஸ்டாண்ட் வர்றப்ப இப்படியெல்லாம் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்னு சொல்றாங்க. சரிதான். இல்லைனு சொல்லல. ஆனா, அதுக்கு இன்னும் பத்து வருஷம் பிடிக்கும். அதுவரைக்கும் பழைய மாதிரி எல்லா பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கும் வந்து செல்லும்னு அறிவிக்கனும். இல்லையா, இங்கிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு போற மாதிரியாவது பேருந்து சேவை தொடங்கனும்” என்கிறார்கள்.
” எல்லா பஸ்ஸூம் உள்ள வந்துட்டு போகனும்னுகூட சொல்லலை. ஏன்னா, இப்பவே, அரியலூர், ஜெயங்கொண்டம், அன்பில் வழியா போற பஸ் எல்லாமே ரவுண்டானாவோடதான் வந்து போயிட்டு இருக்குது. புதிய பேருந்து நிலையத்துக்கு போறது கிடையாது. அப்படியிருக்கப்ப, குறைந்தபட்சம் டவுன் பஸ்ஸையாவது பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து போற மாதிரி ஏற்பாடு செய்யனும். இல்லைன்னா, எங்களோடு வாழ்வாதாரம் இத்தோட முடிஞ்சு போயிடும்.” என்கிறார், முப்பது வருடங்களாக கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர்.
வியாபாரிகள் முன்வைக்கும் பிரச்சினைகள் குறித்து, இலால்குடி நகராட்சி ஆணையர் புகழேந்தரியிடம் அங்குசம் சார்பில் பேசினோம். நாம் சொன்னதை பொறுமையாக கேட்டுக் கொண்டவர், “புதிய பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டால் கண்டிப்பாக அங்கிருந்துதான் பேருந்து சேவையை தொடர வேண்டும் என்பது அரசின் உத்தரவு. அதை நாங்கள் மீற முடியாது. பழைய பேருந்து நிலையத்தை பயன்படுத்தக்கூடாது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இதுபோல, புதிய முயற்சிகள் எடுக்கும்போது சில நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அது தவிர்க்க முடியாதது. மற்றபடி, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் கடைகளுக்கான ஏலம் விடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக, சுமார் 40 கடைகள் மட்டுமே டெண்டர் விடப்பட்டு இயங்கி வருகிறது. அரசிடமிருந்து உத்தரவு வந்ததும் எஞ்சிய கடைகளுக்கு முறையாக ஏலம் விடப்படும். அப்போது, பழைய பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளிக்கூடம் திறந்ததும் பள்ளி மாணவர்கள் வந்துவிடுவார்கள். அவர்களுக்கான வியாபாரம் அப்போது வந்துவிடும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை.” என்பதாக தெரிவிக்கிறார் அவர்.
எதிர்கால தேவை மற்றும் தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில், இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவைதான். ஆனாலும், பேருந்து நிலைய வியாபாரத்தையை வாழ்வாதாரமாக கொண்ட நூறு குடும்ப்பங்களின் கண்ணீரை துடைப்பதற்கான வழிவகையையும் அதிகாரிகள் ஏறெடுத்து பார்க்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் பெரும் ஏக்கமாக இருக்கிறது.
– சதா







Comments are closed, but trackbacks and pingbacks are open.