இருமேனியின் சரித்திரச் சண்டை !
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் ! பாகம் – 03
கடந்த தொடரில் இருமேனி என்ற சொல்லின் புதிர் குறித்தும் அதன் வெவ்வேறு அர்த்தங்கள் குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த தொடரில் அலசுவோம்.
3.3 சிவபெருமானின் திருமேனி இருமேனி
இந்து சமுதாயப் பெருமக்களின் பிரதானக் கடவுளாகிய சிவபெருமானின் மேனியில் பாதி அவரது மனைவி பார்வதி இருப்பதாக இந்து மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, ஆண் கடவுள் தன் மனைவிக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்துச் சமமாகத் தன் மனைவியை மதித்தார் என்று தனது மக்களுக்கு உணர்த்துவதற்காக என்று பெரியோர்கள் விளக்கம் தருவதுண்டு, இருவரும் சேர்ந்து இருப்பதை “ஒருமேனி” என்றும் இருவரும் பாதி பாதியாக வெளிப்படுவதை இருமேனியென்றும் கூறலாம். ஒரு மேனியாக இருந்த சிவபெருமான் எமது ஊர் கடலோரத்திலுள்ள “கல் ஊரணிக்கு” அருகில் இருமேனியாக பிரிந்து உலாவந்ததாகவும், அதிலிருந்து அப்பகுதிக்கு இருமேனி என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் ஏர்வாடியில் குடியேறியிருக்கும் இருமேனியைச் சார்ந்த மறைந்த உ.மி.சீ.இ. சகாப்தீன் கூறியதாகச் சேலத்தில் குடியிருக்கும் பூக்கட்டி ஹாஜா என்னிடம் கூறினார்.
3.4 இருமேனியின் சரித்திரச் சண்டை
நான் பிறப்பதற்கு முன் அதாவது 1956-க்கு முன் இருமேனி மக்கள் மேற்குத் தெரு, கிழக்குத் தெரு என்று பிளவுபட்டிருந்ததாகவும், பின் பிளவு முற்றி, சண்டையாக உருவெடுத்து, கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதில் பெண்களும் கலந்துகொண்டு, சுடு தண்ணீருடன் மிளகாய் பொடிகளைக் கலந்து மாடி வீடுகளிலிருந்து எதிரிகள் மீது ஊற்றியதாகவும் பெரியோர்கள் கூறியதைக் கேட்டு இருக்கிறேன்.
மேற்குத் தெரு, கிழக்குத் தெரு என்பது தெருவை மட்டும் குறிப்பிடவில்லை. மேற்கு பகுதி, கிழக்கு பகுதி என்பதே சரி. இதுபோல், இருமேனியில் என்றும் இரண்டு கோஷ்டியினர் இருந்து கொண்டே இருப்பார்களாம். எப்போதுமே இரண்டு கோஷ்டியினர் அல்லது இரண்டு மேனி கொண்ட மக்கள் இருந்து கொண்டே இருப்பதால் அவர்கள் வாழ்ந்த ஊரை இருமேனி என்று அழைத்திருக்கலாம் என்பது சிலரின் எண்ணம். ஆனால் அதுவும் உண்மை என்று தோன்றவில்லை. ஏனென்றால் இருமேனி என்ற ஊர் தொடங்கி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமயம்தான் இருகோஷ்டியினர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் இந்தக் காரணமும் சரி என்று தோன்றவில்லை.
3.5 இருமேனி விளைச்சல்
சில ஆண்டுகளுக்கு முன் தினத்தந்தி பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார் இருமேனியின் இளங்கவிஞர் மலேசியாவில் வாழும் செய்யது உஸ்மான். அதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த செருங்க நல்லூர் மற்றும் கருங்க நல்லூர் பகுதியில், “இருமேனி” நெல் விளைச்சல் கிடைத்ததால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்ற செய்தியை நான் படித்தேன். முதன்முதலில் “இருமேனி” என்ற வார்த்தையை அச்சிட்டு, தமிழக முழுவதும் உலாவந்ததைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். நான் தேடிய இருமேனியின் தோற்றம் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தேன்.
திருநெல்வேலி பகுதியில் நிலங்களை அளப்பதற்கு “ஏக்கரையோ” அல்லது “ஹெக்டரையோ” பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக “குருனி” என்ற அளவைதான் பயன்படுத்துவார்களாம். எங்களது பகுதியில் “குருக்கம்” என்றும் நிலங்களை அளப்பதுண்டு. ஒரு குருனி 8 சென்ட்டிற்கு சமம். 12 குருனி 96 சென்ட்டிற்கு சமம், அதாவது ஒரு ஏக்கருக்கு 4 சென்ட் குறைவு. பொதுவாக 12 குருனி நிலத்திற்கு 30 கிலோ நெல் விதைத்தால் ஒருமேனி விளைச்சல் கிடைக்குமாம். ஒரு மேனி விளைச்சல் என்பது 12 கொட்டை அல்லது 1800 கிலோ நெல்விளைச்சல். 12 கொட்டை தரும் ஒருமேனி விளைச்சலே சந்தோஷம் தரும் விஷயம். ஆனால் அந்த வருடம், இருமேனி விளைச்சல் (24 கொட்டை அல்லது 3600 கிலோ) பெற்று விவசாயிகள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
இருமேனி என்ற பெயருடன் குறிப்பிடப்பட்டிருந்ததால், நானும் எமது ஊருக்கு இதே சூழ்நிலையில் இருமேனி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று நம்பினேன். ஒரு கட்டுரையிலும் குறிப்பிட்டு எழுதியும் இருந்தேன். பின் நன்றாக யோசித்துப் பார்த்தபோது, எமது ஊர் மக்களின் நெல் வயல்கள் மானவாரி நிலங்கள். தண்ணீர் கிடைப்பது அரிது. எங்களது வயல்களில் ஒருமேனி விளைச்சல் கிடைப்பதே அபூர்வம். எப்படி இருமேனி விளைச்சல் பெறமுடியும் சிந்தித்து இதையும் ஒதுக்கிவிட்டேன்.
இருமேனி குறித்து ஞானியின் கண்ணோட்டம் குறித்தும், கடல் சங்குடன் இருமேனியுடனான தொடர்பு குறித்தும் அடுத்த தொடரில் உரையாடுவோம்.
தொடரும் …





Comments are closed, but trackbacks and pingbacks are open.