“மிருக ஜாதியிலே புலி, மானை கொல்லுது. மனுச ஜாதியில மான் தானே புலிய கொல்லுது”
– மருதநாட்டு இளவரசி திரைப்படத்தில் கதாநாயகன் எம்ஜிஆர் கதாநாயகி வி.என்.ஜானகியிடம் பேசுகிற காதல் வசனம் இது. 1950ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு கதை- வசனம் கலைஞர்.
இந்த 3 பேருமே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்கள். இப்போதைய முதலமைச்சர் நடித்து 2007ஆம் ஆண்டு வெளியான படம் போக்கிரி.
அதில், டோலு டோலுதான் அடிக்கிறா.. என்கிற பாடலின் நடுவில், ‘புலி மானை வேட்டையாடும் இடம் காட்டில்… மான் புலியை வேட்டையாடும் இடம் கட்டில்’ என்று பாடலாசிரியர் பா.விஜய் எழுதியிருப்பார்.

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ – இது கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியில் இடம் பெற்றிருக்கும் முத்தாய்ப்பான வரிகள்.
கமல் நடித்த தசாவதாரம் படத்தில், ‘ஓஹோ சனம்’ என்ற பாட்டில், ‘வீழ்வது நாமாயினும் வாழ்வது நாடாகட்டும்’ என்று கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருப்பார்.
அரை நூற்றாண்டு கழித்தும் தலைமுறைகளை ஈர்க்கும் தமிழாற்றல் கலைஞருக்குரியது.
“என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?”
“ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை” -பண்ணையாருக்கும் தொழிலாளிக்கும் இடையிலான ‘நாம்’ பட வசனம் இது.
‘பராசக்தி’ படத்தில், பணத்தையெல்லாம் இழந்த கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரோட்டோரமாய் படுத்துத் தூங்கும்போது ஒரு போலீஸ்காரர் வந்து, தட்டி எழுப்புவார்.
“டேய்.. நீ பிக்பாக்கெட்டா?”
“இல்லை.. empty பாக்கெட்”
“ஏண்டா.. முழிக்கிறே?”

“தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?” – இதுபோல அந்தப் படம் முழுவதும் நிறைந்திருந்தன ‘பளிச்’ வசனங்கள். அதுபோன்ற வசனங்களைத்தான் இன்று ‘பஞ்ச் டயலாக்’ என்று சவுண்ட் எஃபெக்ட் கொடுத்து முறுக்கேற்றுகிறார்கள். ‘பராசக்தி’யைப் படைத்த கலைஞரோ சர்வசாதாரணமாக இத்தகைய வசனங்களை அள்ளித் தெளித்திருப்பார்.
“அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?” – இது 28 வயது கலைஞர்.
“ராமர் எந்த இன்ஜினியரிங் காலேஜில் படித்தார்” – இது 82 வயது கலைஞர்.
“அரண்மனை நாயே.. அடக்கடா வாயை…” – மந்திரிக்குமாரி படத்தில்!
‘பொறுத்தது போதும்…பொங்கியெழு’
‘தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்” – மனோகரா வசனம்.
“ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”.
“தென்றலை தீண்டியதில்லை.. தீயைத் தாண்டி இருக்கிறேன்”
“ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது’‘
‘கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது’ – இவை அனைத்தும் பராசக்தி.
வசனக் கவிதைகள் வெளிவரத் தொடங்கி, புதுக் கவிதைகளாக வளர்ந்த காலத்தில், கவிதை போன்ற வசனங்களை எழுதி, திரைப்படங்களின் மூலம் பாமரர்களிடமும் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தொடரும்
கோவி.லெனின்







Comments are closed, but trackbacks and pingbacks are open.