அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜயனுக்கு என்ன நடந்தது?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கியமான நெறியாளர்களில் ஒருவர் விஜயன்; சார்பில்லாமல், எல்லோர்க்கும் உரிய இடம் அளிக்கும் வகையில் அவர் நடத்தும் விவாதங்களுக்காக தனக்கென்று கண்ணியமான ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்டவர்; தமிழ்ச் செயல்பாட்டாளர் – நல்ல பேச்சாளர்…

இவ்வளவு அடையாளங்கள் கொண்ட ஒருவர் மீதுதான் மிக மோசமான ஒரு வன்முறையை நிகழ்த்தியுள்ளது தமிழக காவல் துறை.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திருநாவுக்கரசு என்பவர் கருத்துக்கணிப்புகள் நடத்திவந்தவர்; தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகராக விவாதங்களில் பங்கேற்றுவந்தவர். இதுதான் இரு வாரங்கள் முன்பு வரை அவரைப் பற்றி உலகம் அறிந்த விஷயம். எல்லா தொலைக்காட்சிகளுக்கும் விவாத நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்ததுபோல, ‘புதிய தலைமுறை’ நிகழ்ச்சிகளுக்கும் வந்து சென்றார்.

பத்திரிகையாளர் விஜயன்
பத்திரிகையாளர் விஜயன்

யாவரும் கேளீர்

இப்படி வரும் எல்லா விருந்தினர்களுடன் எப்படி ஒரு தொழில்நிமித்த உறவு பத்திரிகையாளர்களுக்கு இருக்குமோ அப்படியான ஓர் உறவே திருநாவுக்கரசுடன் விஜயனுக்கும் இருந்திருக்கிறது. அவ்வப்போது தன்னுடைய கருத்துகள், கணிப்புகளை விஜயனின் வாட்ஸப்புக்கும் அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு.

தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை அப்படி ஒரு நாள் விஜயனுக்கு அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு. அப்படியா, என்ன நடக்கிறது என்று கேட்டிருக்கிறார் விஜயன். இதை அன்றைய தினமே, நேர்பட பேசு நிகழ்ச்சிக்கான கலந்தாலோசனைக் கூட்டத்திலும்  எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார் விஜயன். “என்னமோ நடக்குது சார்” என்றார்.

தவெக ஆட்சி உருவான நாள் முதல் இத்தகு பேச்சுகள் நாலாபக்கமும் சிறகடிப்பதால்,  யாருமே இதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் திருநாவுக்கரசு கைதுசெய்யப்பட்டார். “என்னமோ நடக்கிறது” என்று அன்றைக்கும் பேசிக்கொண்டோம்.

இத்தகு சூழலில்தான் நேற்று முன்தினம், இந்த வழக்கு தொடர்பாக சாட்சியாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று விஜயனுக்கு சம்மன் கொடுத்தது காவல் துறை. கையோடு அலுவலக கவனத்துக்கு கொண்டுவந்தார் விஜயன். இத்தகு சாட்சி விசாரணை அந்த வழக்குக்கு அவசியமானதாக இருக்கக் கூடும் என்று சொல்லி முழு ஒத்துழைப்பையும் நல்க அலுவலகத்தில் முடிவெடுத்தோம்.

சம்மனை வாங்கிக்கொண்ட விஜயன், அன்றைக்கு திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சியைக்கூட ரத்துசெய்துவிட்டு, இரவே போலீஸாரை சந்தித்தார். உடன் அலுவலக நண்பர்கள், வழக்கறிஞர் சென்றிருந்தனர். திருநாவுக்கரசுடனான வாட்ஸப் உரையாடல்கள் எல்லாவற்றையும் சொன்னதோடு, காவல் துறையினரிடம் வாட்ஸப் செய்திகளையும் காட்டியிருக்கிறார். இரவு 12 மணி வரை நடந்த விசாரணையின் முடிவில் விஜயனிடம் வேறு விஷயங்கள் என்ற முடிவுக்கு வந்த விசாரணை அதிகாரி நீங்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லிவிட்டார்.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

இதுவரையிலான விஷயங்கள் எல்லாமே சட்டபூர்மானவை; போலீஸ் தரப்பில் அவர்களுடைய சந்தேகத்தைப் பூர்த்திசெய்துகொள்ள, துப்பு துலக்க சாட்சிகளை விசாரிக்கும் தேவை இருக்கிறது. அது நியாயமானது, எல்லாம் சரி. இதற்கு பின்னர்தான் ஆரம்பிக்கிறது கோளாறு.

வீடு திரும்பிக்கொண்டிருந்த விஜயனை அந்த நள்ளிரவில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை மீண்டும் அதே கேள்விகளால் துளைத்துவிட்டு, அவருடைய செல்பேசியை பறித்துக்கொள்கிறார்கள்; மீண்டும் மறுநாள் காலை 11 மணிக்கு வரச் சொல்கிறார்கள். மறுநாள் 11 மணிக்கே சென்றவரை இரவு 7 மணி வரை விசாரணை என்ற பெயரில் வெறுமனே உட்காரவைத்திருக்கிறார்கள்; இதனூடாக இந்த விஷயம் வெளியே வருகிறது; அரசியல் கட்சி தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் எதிர்வினை ஆற்றுகின்றனர். விளைவாக, விஜயனை விடுவிக்கிறார்கள்; ஆனால், மோசமான ஒரு செய்திக்குறிப்பை வெளியிடுகிறார்கள். “ஆட்சேபகரமான வகையில் குறுந்தகவல் அனுப்பி குற்றச்சதியின்போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்” என்று  விஜயனைக் குறிப்பிடுகிறது அந்தச் செய்தி அறிக்கை.

  1. சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வரும், இதுநாள் வரை கண்ணியமான வகையில் செயல்பட்டுவந்திருக்கும் ஒரு பத்திரிகையாளர் மீது பெரும் அசிங்கத்தை இதன் மூலம் வீசியிருக்கிறது காவல் துறை. ஒருவருடைய ஆளுமையையும் மதிப்பையும் முற்றிலுமாக குலைக்கும் செயல்பாடு இது. ஒரு மனிதரின் சமூக மதிப்பும் கண்ணியமும் அவரது வாழ்வாதாரத்தின் ஒரு பகுதி. முறையான ஆதாரங்கள் இன்றி, ஒரு பத்திரிகையாளர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திக்குறிப்பானது, ஒருவரின் ஆளுமையையே சிதைக்க வல்ல மனிதவுரிமை தாக்குதல். மிக நுட்பமான மொழியில் உருவாக்கப்பட்டுள்ள அவதூறு. வாசிப்பவரை கற்பனையின் எந்த எல்லைக்கும் தள்ளும் கூர்மொழித் தாக்குதல்.
  2. தவெக ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடக்கிறது என்பதை ஆளும் கட்சி அமைச்சர்கள் திரும்ப திரும்ப பேசிவருகின்றனர்; இந்த ஆட்சி ஆறு மாதம் நீடிக்காது என்று திமுக, அதிமுக இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் வாரத்துக்கு இரு முறை பேசிக்கொண்டிருக்கின்றனர். எல்லா பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்திகள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்க ஏதோ யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை இருவரும் பேசிக்கொண்டதான குற்ற தொனியை ‘ஆட்சேபகரமான குறுந்தகவல்’ என்ற வரையறை மூலம் எப்படி உருவாக்குகிறது தமிழக காவல் துறை?
  3. பத்திரிகையாளர் என்றால், வீரப்பனுடனும் பேச வேண்டும்; தேவாரத்துடனும் பேச வேண்டும்; தாவுத் இப்ராஹிம் தரப்புடனும் தொடர்பில் இருக்க வேண்டும், ஐபி அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களுக்கு கற்பிக்கப்படும் பாலபாடம். ஜனநாயகத்தில், குற்றவாளிகளுடனேயே உரையாடும் சுதந்திரம் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது; ஆனால், இந்த உரையாடல் நடந்த காலகட்டத்தில் இந்த திருநாவுக்கரசு, எந்தக் குற்றத்தோடும் சம்பந்தப்பட்டு அறியப்பட்டவரோ, குற்ற வரலாறு கொண்டவரோ அல்ல; அப்படியிருக்க அவருடன் அக்காலகட்டத்தில் உரையாடிய ஒருவர் மீது, ‘குற்றச் சதியின்போது தொடர்ச்சியான தொடர்பில் இருந்துள்ளார்’ என்று அவதூறு கட்டுவது எத்தகு கொடுஞ்செயல்? சாமானிய மனிதர்கள் மீதான இத்தகு ஆளுமைச் சிதைவும், அச்சுறுத்தல் வலைவீச்சும் உள்ளபடி மோசமான ஒரு கொடுமை. இதை அரசுசார் அமைப்புகளே செய்வது மிகவும் அவமானகரமானது.

விஜயன் எனும் தனிநபர் சார்ந்த விவகாரம் மட்டும் அல்ல இது; பத்திரிகை சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, தனிமனித கண்ணியம் – மதிப்பு, அதிகார சமநிலை – பொறுப்புடைமை என்று பல விஷயங்கள் மீதான தாக்குதல். சாட்சிகளைப் பயமுறுத்தும் போக்கு, பத்திரிகையாளர்கள் மத்தியில், சுய தணிக்கை முறையைத் திணிக்கும் அச்சுறுத்தல், அரசின் அங்கங்களே அதிகாரப்பூர்வமாக அவதூறுகள் பரப்புதலை இயல்பாக்குதல் என்று பல தீவிரமான உள்ளடக்குகளைக் கொண்டிருக்கிறது காவல் துறையின் செயல்பாடு.

எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல; விசாரணைக்கு அழைக்கலாம்; உண்மையாகவே தவறேதும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கைகளை  எடுக்கலாம்; ஆனால், எதுவும் சட்டப்படி நடக்க வேண்டும். சாட்சிக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளரை ஒரு குற்றவாளி போன்று சித்திரிக்கும் காவல் துறையின் போக்கு கடுமையான கண்டனத்துக்குரியது; நடத்தைசார் வன்முறை; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.

தமிழக காவல் துறை தொடர்பில் அகில இந்திய அளவில் உருவாகிவரும் சித்திரம் உண்மையில் மிகுந்த கவலைக்குரியது. தென்னகத்திலேயே அதிகமான காவல் மரணங்கள் நடக்கும் மாநிலம், அதிகம் என்கவுன்டர்கள் நடக்கும் மாநிலம், கருத்துரிமையை ஒடுக்க குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்தும் மாநிலம், சித்திரவதை கலாச்சாரம் கொண்ட காவல் துறையைக் கொண்ட மாநிலம்… இப்படிப்பட்ட சித்திரம் தமிழ்நாட்டு அரசின் மீதான மதிப்பீட்டையும் சேர்த்தே தீர்மானிக்கும்; குலைக்கும்.

காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், காவல் துறையை சீர்திருத்த தக்க உயரிய பொறுப்பில் அமர்ந்துள்ள உயர் அதிகாரிகள்.. யாவருமே நம் காவல் துறையை மறுசீரமைப்பது தொடர்பில் தீவிரமாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு அத்துமீறல் தொடர்பிலும் சம்பந்தப்பட்டோர் மீது தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதும், எல்லா நிலைகளிலும் பொறுப்புணர்வின் கீழ் துறையைக் கொண்டுவருவதுமே அதற்கான முதல் படி!

சமஸ்,  ஆசிரியர்

புதியதலைமுறை தொலைக்காட்சி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.