அதிகரித்த பொருளாதாரக் குற்றங்கள் ! தள்ளாட்டத்தில் வழக்குகள் ! தவிக்கும் முதலீட்டாளர்கள் !
தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தொடர்ந்து பொருளாதாரக்குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற விவகாரங்களில் குற்றமிழைத்தவர்கள் ஜாமீன் பெற்றுக்கொண்டு ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்க, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை போட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களும்; கமிஷனுக்கு ஆசைப்பட்டு சொந்த பந்தத்தையெல்லாம் உள்ளே இழுத்து விட்டவர்களும்தான் நிம்மதி இல்லாமல் நடைபிணமாக தவித்து வருகிறார்கள்.
ஆரூத்ரா, ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, நியோமேக்ஸ் என மாபெரும் மோசடிகளின் பட்டியல் நீள்கிறது. ஆருத்ராவில் மட்டும் 93,000-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள். ஐ.எஃப்.எஸ்.இல் 79,000 பேர்; நியோமேக்ஸில் இப்போதுவரையில் அதிகாரப்பூர்வமாக 65,0000 பேர். மோசடிகளை கணக்கிட்டால், ஆரூத்ரா 2438 கோடிக்கு மேல்; ஐ.எஃப்.எஸ். 6000 கோடிக்கு மேல்; நியோமேக்ஸ் 7000 கோடிகளுக்கும் மேல்.

மோசடிகளின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடும்போது, இத்தகைய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளும் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் அளவுகளை ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்தான்.

ஆரூத்ரா விவகாரத்தில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெறும் 96 கோடி மதிப்புள்ள வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. 93 அசையா சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஐ.எஃப்.எஸ். விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலர் வெளிநாடு தப்பிச்சென்ற நிலையில் அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறார்கள். இதே விவகாரத்தில் 75 கோடி ரூபாயை அறக்கட்டளை நிதியை முறைகேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வனத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 211 கோடி மதிப்புள்ள 791 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. 39 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும், 18 கார்களும், 1.14 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்திலும் இதே கதைதான். இதுவரை வந்திருக்கும் மோசடி புகார்களோ 7000 கோடிகளுக்கும் மேல். கைவசம் இருக்கும் சொத்துக்களின் மதிப்போ உத்தேசமாக 3000 கோடி. பொது ஏலத்தில் எடுக்க எவரும் முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களே, இருக்கும் சொத்தை பகிர்ந்து கொண்டாக வேண்டுமென்ற நிலைதான். முக்கிய ஏஜெண்டுகளை இதுவரையில் கைது செய்யவே இல்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது.
குற்றவாளிகளை பொறுத்தமட்டில், வழக்கில் சிக்கி கைதாகி சிறைக்கு சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வேறு பிசினஸை செய்துகொண்டு ஜாலியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரை பொருத்தமட்டில், போதுமான போலீசார் இல்லாமல் திண்டாடுவதாக குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு நிலையம் கிடையாது. ஒரு டி.எஸ்.பி.க்கு இரண்டு மூன்று மாவட்டங்கள். ஒரு எஸ்.பி.க்கு ஏழு எட்டு மாவட்டங்கள் என்ற நிலைதான் நீடிக்கிறது. சொந்தக்கட்டிடம் கிடையாது. வாகன வசதி கிடையாது. 5-6 மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம். சட்ட ஆலோசகர் கிடையாது. என ஏகப்பட்ட கிடையாதுகளோடுதான் வழக்கை நடத்தி வருகிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறமிருந்தாலும், இதுபோன்ற விவகாரங்களில் வருவாய்த்துறை உள்ளிட்டு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. சொத்துக்களை ஏலம் விட டி.ஆர்.ஓ.வின் தயவு தேவைப்படுகிறது. இத்தகையை நிர்வாக ரீதியான நடைமுறை சிக்கல்களும் இத்தகைய வழக்குகளை விரைந்து முன்நகர்த்தி கொண்டு செல்ல பெரும் தடையாக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒருபக்கம் நடக்க, உயர்நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்து வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிப்பு செய்யும் தந்திரங்களையும் குற்றாவாளிகள் மேற்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
மயிலாப்பூர் இந்து சரஸ்வதி நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கிய தேவநாதனுக்கு ஜாமீனே வழங்காமல் தொடர்ந்து 475 நாட்கள் சிறையில் அடைத்திருந்தார்கள். செய்த மோசடிக்கு நிகராக சொத்துக்களை சமர்ப்பித்தால்தான் ஜாமீன் என்ற கறார் காட்டியது உயர்நீதிமன்றம். அதுபோன்றதொரு கிடுக்கிப்பிடி இதுபோன்ற வழக்குகளில் காட்டப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள்.
இதற்கேற்ப, பொருளாதரக்குற்றப்பிரிவு போலீசாரின் கட்டமைப்பில் போதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக முன் எழுந்திருக்கிறது.
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.