புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் சாசன நெருக்கடி ! எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆவேசம் !
16-வது புதுச்சேரி சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக அதிமுக மூத்த தலைவரும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. அன்பழகன் நியமிக்கப்பட்டார். மே 18, 2026 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் பணியை இவர் மேற்கொண்டார். அதன்பின் அறிவிக்கப்பட வேண்டிய பேரவைத் தலைவருக்கான தேர்தல் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.
இது குறித்துப் புதுச்சேரி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவர் திமுகவைச் சார்ந்த ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ தற்காலிகப் பேரவைத்தலைவர் உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து முடித்தவுடன், பேரவைத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கவேண்டும். இதுநாள் வரை அறிவிக்கப்படாமல் தற்காலிகப் பேரவைத்தலைவரே நீடித்து வருகிறார். ஏறத்தாழ 3 மாதக் காலம் என்ற நீண்டகாலத்திற்குத் தற்காலிகப் பேரவைத்தலைவர் பொறுப்பில் இருப்பது இதுவே முறையாகும்.
வரும் 24 ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது துணைநிலை ஆளுநர் உரையோடு கூட்டத் தொடர் தொடங்கும். பின்னர் முதல் அமைச்சர் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில், துணைநிலை ஆளுநர் பேரவைக்கு வரும்போது அவரை வரவேற்பது நிரந்தரப் பேரவைத்தலைவராக இருக்கவேண்டும். புதுச்சேரியின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது நிரந்தரப் பேரவைத்தலைவர் இருக்கவேண்டும் என்பது எங்களின் கருத்தாகும்.
சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பு பேரவைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். ஒரிரு நாள் அவகாசத்தில் பேரவைத் தலைவர் தேர்தலை மிக எளிமையாக நடத்திவிடலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரப் பேரவைத்தலைவரைத் தேர்வு செய்யாமல் தற்காலிகப் பேரவைத் தலைவரை வைத்துப் பேரவையை நடத்தும் முயற்சியை அரசு கைவிடவேண்டும். அப்படி நடத்த முற்பட்டால், திமுக தலைமையிடம் உரிய வழிகாட்டுதலைப் பெற்று, புதுச்சேரி மாநிலத் திமுக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் நிரந்தரப் பேரவைத்தலைவர்தான் பேரவையை நடத்தவேண்டும் என்ற கருத்து குறித்து அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி என்னவெனில், “ சட்டப்பூர்வக் கடமை: (Government of Union Territories Act, 1963) புதுச்சேரி போன்ற சட்டமன்றம் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களுக்கு 1963ஆம் ஆண்டின் ஒன்றியப் பிரதேசங்கள் சட்டம் (Section-7) பொருந்தும். பிரிவு 7(1)-இன்படி, புதிய சட்டமன்றம் கூடியவுடன், “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில்” (as soon as may be) தனது உறுப்பினர்களிலிருந்து இருவரை முறையே சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மாநிலச் சட்டமன்றங்களுக்கான அரசியல் சாசனப் பிரிவு Article 178-க்கு இணையான விதியாகும்.
தற்காலிகச் சபாநாயகரின் வரம்பு: தற்காலிகச் சபாநாயகர் பதவி என்பது அரசியல் சாசனப்படி ஒரு இடைக்கால ஏற்பாடு மட்டுமே. புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, நிரந்தரச் சபாநாயகருக்கான தேர்தலை நடத்துவது என்ற இரண்டு முதன்மைப் பணிகளுக்காக மட்டுமே துணைநிலை ஆளுநரால் தற்காலிகச் சபாநாயகர் நியமிக்கப்படுகிறார். சபைக்கான நிரந்தரச் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே தற்காலிகச் சபாநாயகரின் பதவி தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.
வழக்கமான அவையை நடத்த முடியாத நிலை சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள், மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு, கொறடா உத்தரவு மீறல் தொடர்பான முடிவுகள் (10ஆவது அட்டவணை – கட்சித் தாவல் தடைச் சட்டம்) போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரச் சபாநாயகர் அவசியம். தற்காலிகச் சபாநாயகரை மட்டுமே வைத்துக்கொண்டு சட்டமன்றக் கூட்டத் தொடரைக் காலவரையின்றி நடத்த முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அமைந்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இணைந்த கூட்டணி ஆட்சியில் அரசியில் சாசனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடிக்கு புதுச்சேரி அரசும், மாநில துணைநிலை ஆளுநரும் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே புதுச்சேரி மாநிலத் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– ஆதவன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.