இந்த காலத்திலும் இப்படி ஒரு கோரிக்கையா ?
அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய வி.சி.க. எம்.எல்.ஏ. ஜோதிமணி, ”தான் 280 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சட்டமன்றத்திற்கு வருகிறேன். பஸ், ரயில் பயணப்படி இருந்தாலும் வாடகை காரில் சட்டமன்றத்திற்கு வருகிறேன். கார் வாடகையைக் கூட கொடுக்க முடியாத நிலை இருக்கிறது” என்று கூறினார். அது மட்டுமல்ல தன்னுடைய காட்டுமன்னார்கோயில் தொகுதி 40 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. தொகுதி மக்களை போய் பார்ப்பதற்கும் மக்கள் பணி செய்வதற்கும் கூட, வாகன வசதி இல்லை. ஒரு தனிச் செயலாளரை வைத்துக்கொண்டு அவருக்கு ஊதியம் வழங்கும் அளவிற்கு பணம் இல்லை.” என்று பேசினார். லஞ்சம் இல்லாமல் ஊழல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கை சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த எவர் ஒருவரும் கவுன்சிலர் சேர்மன் ஆனாலே ஒரே வாரத்தில் புது கார் புது வாகனம் வாங்கி விடுவார்கள்.
இவர் ஏதோ எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் திடீரென எம்.எல். ஏ. ஆனவர் அல்ல. இவருடைய தந்தை எல்.இளையபெருமாள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார். இரண்டு முறை எம்.பி. ஆக இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி அமைத்த இளைய பெருமாள் கமிட்டியின் தலைவர் அவர் தான். தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஒருவர் எம்.எல்.ஏ., எம்.பி. ஆக இருக்கிறார் என்றால் அடுத்து வரும் தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுவார் என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஜோதி மணியின் சூழல் அப்படி அல்ல. இளைய பெருமாளும் இன்றைய தலைவன் போல இல்லாமல் நேர்மையாகவே இருந்தார். அதனால்தான் ஜோதிமணி எம்.எல்.ஏ. ஆன பிறகும் வாகன வசதி செய்து தர கேட்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கும் நிலையிலே இன்னும் இருக்கிறார்.
– யாரோ






Comments are closed, but trackbacks and pingbacks are open.