கதை சொல்லு கதை கேளு – ராஜலட்சுமி !

சிறார் இலக்கியம் -எழுத்தாளா் அறிமுகம்-9

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ராஜலட்சுமி சிறார் எழுத்தாளர், நாவலாசிரியர், கதை சொல்லி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி. கோவில்பட்டியில் வசிக்கிறார். பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர். கதை சொல்லு கதை கேளு புலனக்குழு மூலமாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்.

இதுவரை 6 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளன. நீர்க்குமிழி சோப், மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம், கடோத்கஜன் ஆகிய சிறார் நூல்கள் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. கதைப் புத்தகத்தின் கதை மற்றும் கனலின் பயணம் ஆகிய சிறார் நூல்கள் ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளன. ‘கனலின் பயணம்’ நூல் 2025ம் ஆண்டுக்கான பெண்ணெழுத்துப் போட்டியில் முதல் பரிசு வென்றது. கேட்-பீட் என்ற சிறார் நூல் வாசிப்பு இயக்க நூலாக புக்ஸ் பார் சில்ரனால் வெளியிடப்பட்டுள்ளது. திசை நாளிதழின் மாயாபஜார் பகுதியில் தொடர்ந்து சிறார் கதைகள் எழுதி வருகிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

  1. தங்களைக் குறித்து கூறுங்கள்?

பெரிய உருவத்தில் இருக்கும் ஒரு சிறிய குழந்தை என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமா?

எப்போதும் குழந்தைகளின் மனநிலையில் இருக்க விரும்பும் ஒருத்தி. அடிபட்டு, அழுது, ஆற்றி, அடுத்த நொடியே அதை மறந்து மகிழ்ச்சியாக இருக்க முயல்பவள். அல்லது, ஒரு பழுத்த சோம்பேறி என்று கூட சொல்லலாம்!

2. சிறார் இலக்கியத்தைத் தாங்கள் தேர்வு செய்ததற்கான காரணம்?

சிறு வயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது கவிதைகளும் எழுதுவேன். தாயான பிறகு, கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதிலிருந்து விடுபடுவதற்காக எழுத ஆரம்பித்தேன். முதலில் நாவல்கள் எழுதினேன்.

என் குழந்தைகள் வளர வளர, அவர்களுக்கான கதைகளை நானே யோசித்துச் சொல்ல ஆரம்பித்தேன். பெரும்பாலும் அந்தக் கதைகள் வீட்டில் நடந்த நிகழ்வுகளிலிருந்தும், எங்களுக்குள் நடந்த உரையாடல்களிலிருந்தும் உருவானவை. என் பிள்ளைகளுக்குச் சொன்ன கதைகளைப் பிற குழந்தைகளுக்காகவும் எழுத ஆரம்பித்தேன். இன்று நான் ஒரு சிறார் எழுத்தாளர்.

சிறார்களை வீட்டில் வைத்திருப்பதால், இது என் தேர்வாக இல்லாமல் வாழ்வாகவே மாறிவிட்டது.

அடம்பிடித்து அழும் குழந்தைகள், நாம் என்ன சமாதானம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அப்போது, “ஒரு மரத்தில ஒரு குருவி இருந்திச்சாம். அதுக்கு ரொம்ப பசிச்சதாம்…” என்று ஒரு கதையை ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்திவிட்டால் போதும். அழுகையை நிறுத்திவிட்டு கதையை கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். தங்கள் அடத்தை மறந்து, “அடுத்து என்ன நடந்தது?” என்று கேட்கத் தொடங்குவார்கள்.

இப்படியாகத்தான் நான் சிறார் எழுத்தாளர் அவதாரம் எடுத்தேன்.

  1. தங்களின் கல்வி மற்றும் பணியைக் குறித்து கூறுங்கள்?

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இரண்டு ஆண்டுகள் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் பிறகு கோவில்பட்டியில் வசித்து வருகிறேன்.

இப்போது என் நேரத்தை குழந்தைகளோடும் கதைகளோடும் செலவிடுகிறேன்.

  1. தற்கால சிறார் இலக்கியம் குறித்து தங்களின் கருத்து?

உலக அளவில் சிறார் இலக்கியத்தில் எவ்வளவோ சோதனை முயற்சிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கான நூல்கள் பெரும் கவனத்தோடும் புதுமையாகவும் தயாரிக்கப்படுகின்றன. ஆங்கில நூல்களுக்கு உலகளவில் இருக்கும் சந்தையும் அதற்குத் துணை செய்கிறது.

தமிழில் அந்த அளவிற்கான சந்தை இல்லை. ஆனால் இப்போது நிறைய எழுத்தாளர்கள் ஆர்வத்தோடு சிறார்களுக்கான கதைகளை எழுத வருகிறார்கள்.

சூழலியல், பாலின சமத்துவம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகள், சாதி மறுப்பு என பல்வேறு தரப்பு குழந்தைகளையும் மனதில் வைத்து கதைகள் எழுதப்படுகின்றன. குழந்தைகளுக்கு பாடம் மட்டுமே எடுக்கும் நன்னெறிக் கதைகள் என்ற நிலையில் இருந்து நகர்ந்து, அவர்களுக்கு வாசிப்பின் இன்பத்தை வழங்கவும், அவர்களின் பக்கமிருந்து உலகைப் பார்க்கவும் முயலும் படைப்புகள் வெளிவருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் சிறார்களுக்கு எழுதவும், புதுமையான கதைகளை உருவாக்கவும் நிறைய இளம் எழுத்தாளர்கள் முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக பெண் எழுத்தாளர்கள். குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான அம்மாக்கள், தங்கள் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளையும் அவர்களுக்குச் சொல்ல நினைக்கும் அறிவியலையும் கதை வடிவில் கொடுக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது சிறார் இலக்கியம் ‘செயல்பாட்டில்’ இருக்கிறது,

  1. தங்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பு குறித்தும், தங்கள் படைப்புகளின் சிறப்புகள் குறித்தும் கூறுங்கள்?

புத்தகமாக வெளியிடுவதற்கு முன்பாக, அமேசான் கிண்டிலில் சில சிறார் நூல்களை மின்னூல்களாக வெளியிட்டிருந்தேன். அதில் யானையின் அறிவு கதை பெரும் வரவேற்பைப் பெற்றது.

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக சமத்துவச் சாரல்கள் என்ற நூல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் மாயாஜாலக் கதையான மாயவனம் வெளியானது.

மாயவனம் கதையின் தொடர்ச்சியாக பூஞ்சிட்டு மின்னிதழில் எழுதிய தொடரின் தொகுப்பு மாயவனத்தில் ஒரு மந்திரப் பயணம் என்ற நூலாக பாரதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஒரு குழந்தை, தன் அம்மா உருவாக்கிய கனவுகளை உருவாக்கும் கடிகாரத்தின் வழியே காட்டிலும், கடலிலும், தொழிற்சாலைகளிலும் பயணம் செய்கிறாள். அவளது சாகசங்களின் வழியாக குழந்தைகளுக்கு சமூகத்தைப் பற்றிய புரிதல் ஏற்படும் விதமாக அக்கதைகள் அமைந்திருந்தன.

நீர்க்குமிழி சோப் புத்தகத்தில் மழலைகளுக்கான புதுமையான கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் பாரதி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது.

கதைப்புத்தகமே ஒரு கதையைச் சொல்லும் கதைப் புத்தகத்தின் கதை நூலும் ஒரு புதுமையான முயற்சியே. இது ஹெர்ஸ்டோரிஸ் விங்ஸ் வெளியீடாக வந்துள்ளது.

சென்ற ஆண்டு பெண்ணெழுத்துப் போட்டியில் விருது பெற்ற கனலின் பயணம், பெண் குழந்தைகள் இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களையும் அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையும் பேசுகிறது.

பீட்-கேட் நூல் வாசிப்பு இயக்க நூலாக பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

என்னுடைய படைப்புகளில் கற்பனை, குழந்தைகளின் உலகம், சமூகப் பார்வை, சமத்துவம், சாகசம் என வெவ்வேறு தளங்களைத் தொட முயற்சி செய்து வருகிறேன்.

  1. சிறுவர்களுக்கான கதைகள் எந்தெந்த பொருண்மையில் இருக்க வேண்டும்?

குழந்தைகளுக்கு இதைத்தான் சொல்ல வேண்டும், இதைச் சொல்லக்கூடாது என்பதில் எல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை.

முடிந்தவரை நேர்மறையான விஷயங்களைச் சொல்ல முயற்சிக்கலாம். இவ்வுலகத்தில் உள்ள எந்தச் செய்தியையும், உலகம் தாண்டியும் பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்த எந்த விஷயத்தையும் குழந்தைகளுக்குப் புரியும் எளிய மொழியில் சொல்ல முடிந்தால் சொல்லலாம்.

சாதியைச் சொல்லலாமா? சொல்லலாம். அது எந்த அளவுக்கு தீமையானது என்பதைச் சொல்லலாம்.

மதத்தைச் சொல்லலாமா? சொல்லலாம். மதத்தால் ‘மதம்’ பிடிக்கும் ஆபத்து இருப்பதையும் சொல்லலாம். இந்தத் தலைப்புகளை எடுக்கும் போது நாம் வாழும் சமூகத்தின் சூழல் எப்படி இருக்கிறது, அது என்னவிதமான எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை அறிந்து கொண்டு எழுதுவது அவசியம்.

எதை எழுதினாலும் அவர்களுக்குப் புரியும் மொழியில், நேர்மறையான முறையில் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்.

  1. சிறுவர்களுக்கு கற்பனைக் கதைகள் தேவையா? எவ்விதக் கதைகள் சிறுவர்களை எளிதில் ஈர்க்கும்?

கதைகள் என்றாலே கற்பனைதானே!

குழந்தைகளுக்கான கதைகளின் பொருண்மையில் இது இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று சட்டதிட்டங்களை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

என்னைப் பொறுத்தவரை, கற்பனை இல்லாமல் குழந்தைகளுக்கான கதை ஒரு செய்தியாக மாறிவிடும்.

மாயாஜாலமும் அதீதக் கற்பனையும் மழலைகளை ஈர்க்கும். தந்திரக் கதைகள், புதிர்க் கதைகள் போன்றவை சிறார்களை ஈர்க்கும். சாகசக் கதைகள் பதின்ம வயதுக் குழந்தைகளை ஈர்க்கும். இது என் புரிதல் மட்டுமே.

எந்த மாதிரியான கதைகள் ஈர்க்கும் என்பது ஒவ்வொரு வாசிப்பாளரின் தனிப்பட்ட ரசனை சார்ந்தது.

  1. கடந்த கால சிறார் இலக்கியத்திற்கும் தற்கால சிறார் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாகத் தாங்கள் கருதுவது?

கடந்த காலத்தில் இருந்த சுதந்திரம் இப்போது இல்லை என்று சொல்லலாமா?

பரமார்த்த குருவும் சீடர்களும் போன்ற மத அமைப்புகளை கேலி செய்யும் கதைகளை இன்று நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அதுபோலவே, சாமிக்கு இருபது கைகள், வெறும் கையை எண்ணெயில் விட்டார் போன்ற அவதாரக் கதைகளையும் அந்த அளவுக்கு எளிதாகப் பரப்ப முடியாது.

வாண்டுமாமாவும் அழ. வள்ளியப்பாவும் எத்தனை விதமாக எழுதியிருக்கிறார்கள்! அதில் பாதியையாவது நாம் தொட முடியுமா என்று வியப்பாக இருக்கும்.

ஆனால் இன்று உலக இலக்கியங்கள் மிக எளிதாக மொழிபெயர்க்கப்பட்டு தாய்மொழியில் கிடைக்கின்றன.

அதே நேரத்தில், நவீன சூழலுக்கும் இப்போதைய இணைய யுகத்திற்கும் தகுந்த கதைகளை நாம் இன்னும் அதிகமாக எழுத வேண்டியுள்ளது.

கணினி யுகம் ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழில் குழந்தைகளுக்கான கணினி உலகக் கதைகள் பெரிதாக வரவில்லை.

இப்போது பெருகி வரும் செயற்கை நுண்ணறிவும், அதனுடன் நாம் சந்திக்கப்போகும் சவால்களும் புதிய கதைகளுக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. எழுத வேண்டிய தலைப்புகளும் அதிகரித்திருக்கின்றன.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

  1. புதிதாக சிறார் இலக்கியம் எழுத வருபவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புதிதாக நாம் எழுத வரும்போது, “இது நன்றாக இருக்கிறது. இதில் உன் கற்பனை அபாரம்” என்று சொல்ல ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

“இதைச் சொல்லக் கூடாது.”

“இப்படி எழுதக் கூடாது.”

“இது கதையே அல்ல.”

“நீ இன்னும் கற்க வேண்டும்.”

போன்ற அறிவுரைகள்தான் அதிகம் கிடைக்கும்.

இன்றைய சமூக வலைதளக் காலத்தில் ஒவ்வொரு கதைக்கும், ஒவ்வொரு வார்த்தைக்கும் பாராட்டோ திட்டோ உடனே ஏதாவது ஒரு எதிர்வினை கிடைத்துவிடுகிறது.

அவற்றையெல்லாம் தாண்டியும் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

ஒரு கதையை எந்த உறுத்தலும் இல்லாமல் என் குழந்தைகளுக்குச் சொல்ல முடிகிறது. அதை அவர்கள் விரும்புகிறார்கள் என்றால் அந்தக் கதை பாஸ்.

கதைகளுக்கான வடிகட்டியாகவோ அல்லது மதிப்பீட்டாளராகவோ குழந்தைகளை வைத்துக்கொள்ளுங்கள். பெரியவர்களை அல்ல.

  1. சிறுவர்கள் ஏன் வாசிக்க வேண்டும்?

ஏனெனில் ஒரு திரை நம் கற்பனையின் முனையை மங்கச் செய்யும்.

“ஒரு பூனை ஓடியது” என்று எழுதினால், என் கற்பனையில் அது வெள்ளையும் செஞ்சாந்தும் கலந்த ஒரு பூனையாக இருக்கலாம்.

உங்கள் கற்பனையில் அது ஒரு கருப்புப் பூனையாக இருக்கலாம்.

இன்னொருவரின் பார்வைக்கு அது சாம்பல் நிறப் பூனையாக இருக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு அது ஒரு புசுபுசு வெள்ளைப் பூனையாக இருக்கலாம்.

ஆனால் திரையில் பூனையைக் காட்ட வேண்டுமென்றால், அதை உருவாக்குபவரின் கற்பனையில் இருக்கும் ஏதேனும் ஒரு நிறத்தில்தான் அந்தப் பூனை இருக்கும். அந்த நிறம் எல்லோருடைய பார்வைக்கும் அதே நிறமாகத்தான் தெரியும்.

நம் பூனை என்ன நிறம் என்று நம் மூளை யோசிக்காதபோது, அது தூசி படிந்து போய்விடும்.

வாசிப்பு நம் மூளைக்கு தொடர்ந்து வேலை கொடுக்கிறது.

தற்கால சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர்வதற்கு பெற்றோர்களும் கல்விக்கூடங்களும் செய்ய வேண்டியவை?

பெற்றோர், பிள்ளைகள் முன் அமர்ந்து வாசித்தாலே பிள்ளைகளும் அதைத் தொடர்வார்கள்.

புத்தகங்களை வாசித்துக் கதைகள் சொல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

கல்வி நிலையங்களில் நடைபெறும் போட்டிகளில் வாசிப்புப் போட்டி, கதை சொல்லும் போட்டி, கதை எழுதும் போட்டி போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

வெற்றிக் கோப்பைகள் தரும் இடத்தில், அவற்றிற்குப் பதிலாகத் தேர்ந்தெடுத்த புத்தகங்களை வழங்கலாம்.

நம் பெற்றோரும் பெரும்பாலும் ஆங்கில நூல்களை வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கவே விரும்புகிறார்கள். தமிழில் நூல்கள் வாங்கினாலும், மீண்டும் நம் மண்ணுக்கும் நம் கதைக்கும் சம்பந்தமே இல்லாத பீர்பால் கதைகள், அக்பர் கதைகள் என்று நகர்கிறோம்.

தாய்மொழியில் இந்த வருடம் புதிதாக எழுதப்பட்ட நூல்கள் எவை என்று தேடுங்கள்.

புத்தக அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் கதைச் சுருக்கத்தை வாசியுங்கள். அதன் பிறகு பிள்ளைகளுக்குத் தேர்ந்தெடுங்கள்.

தானே தேர்ந்தெடுக்கும் வயது வந்துவிட்ட பிள்ளைகளுக்கு, அவர்களையே தேர்ந்தெடுக்க விடுங்கள். அவர்களே தேர்ந்தெடுத்து வாசிக்கட்டும்.

  1. தற்கால பெற்றோர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

நம் ஆயிரத்தெட்டு வேலைகளுக்கு மத்தியில், கைபேசியில் நிற்காமல் ஓடும் ரீல்ஸ்களுக்கு இடையிலும் நாம் பெற்றோர்தான்.

நம் பிள்ளைகளுக்கு நாம் செலுத்த வேண்டிய கவனத்தைத் தவறவிடக் கூடாது.

முடிந்தவரை பிள்ளைகளின் கைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது நல்லது.

அவர்களுக்கு ஒரு திரையைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு புத்தகத்தைக் கொடுப்போம். அதைவிட முக்கியமாக, சில நேரங்களில் அந்தப் புத்தகத்தை அவர்களோடு சேர்ந்து வாசிப்போம்.

  1. குழந்தைகளுக்காக எழுதுவதற்கும் பெரியவர்களுக்காக எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்?

என்னைப் பொறுத்தவரை, பெரியவர்களுக்காக எழுத ஒரு கரு இருந்தால் போதும். கதையின் மையம் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால், கதை அதுவாக வளர்ந்துகொண்டே போகும். வார்த்தை எண்ணிக்கை பற்றி அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. மனதில் இருப்பதை எழுதுவதற்கு இத்தனை கட்டுப்பாடுகளுக்குள் யோசிக்க வேண்டியதில்லை.

ஆனால் சிறார்களுக்கு எழுதும்போது வார்த்தை எண்ணிக்கை, வாக்கிய அமைப்பு என அனைத்தையும் கவனிக்க வேண்டும். கதைக்கரு இருந்தால் மட்டும் போதாது. அதை எந்த அளவுக்கு எளிமையாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எளிமைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில், கதையில் இருக்க வேண்டிய சுவாரஸ்யமும் குறையக்கூடாது.

சொற்களில் நிறைய அக்கறை வேண்டும். ஒரு நீளமான நாவல் எழுதுவதைவிட அதிக கவனமும் பொறுப்புணர்வும் ஒரு சிறார் கதைக்கு கொடுக்கப்பட வேண்டும்.

  1. நீங்கள் குழந்தைகளுக்காக எழுதுகிறீர்களா, அல்லது குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொண்டு எழுதுகிறீர்களா?

குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்வதை குழந்தைகளுக்காக எழுதுகிறேன்.

பெரும்பாலான கதைகள் குழந்தைகளின் “ஏன்?”, “என்ன?” என்ற கேள்விகளில் இருந்துதான் வருகின்றன. அல்லது நான் அவர்களுக்குச் சொல்ல விரும்பும் ஒரு செய்தியை, கதையின் ஊடாகச் சொல்ல முயல்கிறேன்.

  1. குழந்தைகளுக்கான இலக்கியம் குழந்தைகளுக்காக மட்டும்தானா? பெரியவர்களும் வாசிக்க வேண்டுமா?

குழந்தைகளுக்கான இலக்கியம் குழந்தைகளுக்காகத்தான். ஆனால் அதை வளர்ந்த குழந்தைகள் வாசிப்பதில் தவறேதும் இல்லை.

குறிப்பாக குழந்தைகளுக்குப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பெற்றோர்களும் ஆசிரியர்களும், தாங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க நினைக்கும் நூல்களை முதலில் வாசித்துப் பார்ப்பது நல்லது.

எனக்குத் தெரிந்த சில தோழர்கள், முதலில் சிறார் நூல்களை வாங்கி அவர்களே வாசிக்கிறார்கள். அதில் ஏதேனும் பிற்போக்கான கருத்துகள் இருந்தால் அவற்றைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

முற்போக்கான அல்லது அறிவியல் கண்ணோட்டத்தோடு கூடிய நூல்களை வாங்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

நம் பிள்ளைகளுக்கு என்ன வாசிக்கக் கொடுக்கிறோம் என்பதில் கவனம் இருப்பதும் நல்லதுதானே!

  1. ஒரு குழந்தைக்காக எழுதும்போது, அந்தக் குழந்தையை நீங்கள் எப்படி மனதில் உருவாக்கிக் கொள்கிறீர்கள்?

அந்தக் குழந்தையே நான்தான் என்பதாகத்தான்!

நான் குழந்தையாக இருந்தால் என்ன கேட்க விரும்புவேன்? எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்கும்? என்ற கண்ணோட்டத்தில்தான் கதைகள் பிறக்கும்.

பின்னர் அவற்றை என் குழந்தைகளுக்குச் சொல்வேன். கதைகளில் அவர்கள் கேட்கும் சந்தேகங்களிலிருந்தும் கேள்விகளிலிருந்தும் கதை மீண்டும் மெருகேறும்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.