சிறைத்துறை காவலர்கள், முதல் தலைமைக்காவலர்கள், உதவிசிறை அலுவலர்கள், துணைசிறை அலுவலர்கள், சிறை அலுவலர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், சிறைத்துறை துணைத்தலைவர்கள் என அனைவருமே அரசால் ஏமாற்றப்பட்டு இன்று வரை காவல்துறை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் பெறாமல், அல்லது கேட்க துனிவில்லாமல் மிக குறைந்த ஊதியத்தை பெற்று வருகிறார்கள்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறைக்காவலர்கள் பத்தாண்டு வரையில் மட்டுமே காவல்துறையினருக்கு இணையான ஊதியத்தை பெறுகிறார்கள். பத்தாண்டு பணி முடிக்கும் காவல்துறை காவலர்கள் முதல்நிலைக்காவலர்களாக பதவி உயர்வு பெறும்போது சிறப்பு நிலை ஊதிய உயர்வுடன் பதவி உயர்வு ஊதியமும் சேர்த்து இரண்டு ஊதிய உயர்வு பெறுகிறார்கள். ஆனால், சிறைத்துறையினருக்கோ சிறப்புநிலை ஊதியம் மட்டுமே கிடைக்கிறது. பணியில் சேர்ந்த பதினோறாம் ஆண்டு முதல் ஊதிய முரண் தொடங்கிவிடுகிறது.
காவல்துறையில் 15 ஆண்டுகள் பணிமுடித்தால் தலைமைக்காவலர்கள் பதவியில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ரூ20600/- என்ற அடிப்படை ஊதியம் பெறுகிறார்கள். சிறைத்துறையில் முதல்நிலைக்காவலர் என்ற தரத்தில் ரூ. 19500/- என்ற அடிப்படையில்தான் ஊதியம் பெறும் தகுதியுடையோர் ஆகிறார். அடிப்படையிலேயே ரூபாய் 1100/- வித்தியாசம்.
அடுத்து, காவல்துறையில் 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்யும்போது எஸ். எஸ். ஐ. என்ற பதவியோடு ரூ35400/- என்ற அடிப்படை ஊதியம் பெறுகிறார். சிறைத்துறையிலோ முதல்தலைமைக்காவலர் என்ற பணிதரத்தில் ரூ. 20600/-மட்டுமே பெறுகிறார். இதன் வித்தியாசம் சுமார் 14800/- ரூபாய்.
மேலும், சப் இன்ஸ்பெக்டர் நிலையில் காவல்துறையினருக்கான அடிப்படைஊதியம் ரூபாய் 36900/- இத்தற்கு நிகரான சிறைத்துறையின் உதவிசிறை அலுவலருக்கான அடிப்படை ஊதியம் 35400/-. அதாவது அடிப்படை சம்பளத்திலேயே வித்தியாசம் ரூபாய் 1500/-.
இன்ஸ்பெக்டர் பதவியில் காவல்துறையில் ரூ37700/- இதற்கு நிகராக சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் பெறும் அடிப்படை ஊதியம் ரூ36400/. சிறை அலுவலரின் ஊதியம் மிகக்கொடுமையானது. காவல்துறையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் காவல்துணைகண்காணிப்பாளர் (டி. எஸ். பி) பெறும் அடிப்படை ஊதியம் ரூ 56100/- அதே முறையில் தேர்வு செய்யப்படும் அதே அந்தஸ்து அதிகாரியான சிறை அலுவலர் சிறைத்துறையில் பெறும் ஊதியம் ரூ36900/- வித்தியாசம் அடிப்படைசம்பளத்தில் ரூ. 19200/- ஆகும்.
இப்படி காவல்துறையில் கன்ஃபெர்டு கேடர் டி. பி. எஸ். அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், சிறைத்துறைதுணைத்தலைவர்கள் ஆகியோருக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும். அதற்கான செயற்குறிப்புகளை சிறைத்துறை அதிகாரிகள் அரசுக்கு அனுப்ப வேண்டும்.
சமீபத்தில் நடந்த துறைவாரியான அதிகாரிகள் கூட்டத்திலும், சிறை மானிய கோரிக்கையின் போதும் சிறைப்பணியாளர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற சிறைத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும். நீண்ட காலமாக இந்தசலுகைகளை பெற போராடும் சிறைபணியாளர்களது கோரிக்கையை இந்த புதிய அரசாவது நிறைவேற்ற வேண்டும் என்பதே சிறைப்பணியாளர்களின் ஏக்கமாகவே நீடிக்கிறது.
– கருணாமூர்த்தி






Comments are closed, but trackbacks and pingbacks are open.