கல்லூரியில் சினிமாக்காரர்களுக்கு என்ன வேலை?
தமிழகத்தில் சமீக காலமாக, கல்லூரி வளாகங்களில் சினிமா தொடர்பான நிகழ்வுகள் நடைபெறுவது ஒரு புது ட்ரெண்டாகி வருகிறது. ஒரு காலத்தில் பள்ளி – கல்லூரியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் திட்டமிடுவார்கள். அதிலும் குறிப்பாக, சினிமா பாடல்களைக்கூட, இதுபோன்ற மேடைகளில் ஒலிபரப்புவதை தவிர்ப்பார்கள். நாட்டுப்புற பாடல்கள், தேசபக்தி பாடல்களுக்கான நடனங்களாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
ஆனால், இன்றோ இரட்டை அர்த்தங்களை கொண்ட சினிமா பாடல்கள் சர்வசாதாரணமாக கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் ஒலிக்கிறது. அறுவெறுப்பான நடன அசைவுகளை கொண்ட பாடல்களுக்கு குழு நடனமாக ஒட்டுமொத்த கல்லூரியே சேர்ந்தாடுகிறது. மேடையில் தோன்றி பாடும் பிரபல பாடகர் – பாடகிகளோடு சேர்ந்து மாணவிகளும் பாடலை பின்தொடர்கிறார்கள்.
சென்னையில் உள்ள ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரியில், உலக சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக என்று டைட்டில் கார்டு போடாத குறையாக ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்றார். இதே கல்லூரியில் நடைபெற்ற அடுத்தடுத்த நிகழ்வுகளில், நடிகர் சூரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடன இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில், ஹிப்ஹாப் தமிழா ஆதி பங்கேற்றார். அதே கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில் நடிகர் சிபிபுவனசந்திரன் மற்றும் நடிகை கேதிகா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள்.
இதையெல்லாம்விட, கொஞ்சம் மாற்றி யோசித்த சத்யபாமா பல்கலைகழகம் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக நடிகர் சிலம்பரசனை அழைத்து ஒரு கலாச்சார விழாவையே நடத்தியிருக்கிறது. மற்றொருவிழாவில், நடிகை ஸ்ரீலீலா சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கிறார்.
தலைநகர் சென்னையில்தான் இந்த கூத்துக்கள் என்றில்லை, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான். திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் நடைபெற்ற நேரலை இசை நிகழ்ச்சியில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றார். சின்னத்திரை பிரபலங்கள் ரியோராஜ், அன்புதாசன் ஆகியோரும் பங்கேற்றிருக்கிறார்கள். கோவை குமரகுரு கல்லூரி நாகப்பட்டினம் ஈ.ஜி.எஸ். கல்லூரி, என இந்த பட்டியல் விரிகிறது.
அதிலும் ஒரு படி முன்னேறி, புதிய சினிமா திரைப்படங்களுக்கான பாடல் வெளியீடு புரோமோஷன் விழாக்களைக்கூட கல்லூரி வளாகத்தில் நடத்த தொடங்கியிருக்கிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய போக்காக மாறியிருக்கிறது.
கடந்த 2017 இல் வெளியான ‘இருவர் ஒன்றானால்’ என்ற திரைப்படம் ஒரு முழுமையான கேம்பஸ் காதல் கதை என்பதால், படத்தின் பெரும்பகுதியை கல்லூரியிலேயே படமாக்கியதோடு அல்லாமல், அதே சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்களது இசை வெளியீட்டு விழாவையும் அதுவும் மாணவர்கள் முன்னிலையிலேயே நடத்தினார்கள்.
நடப்பு ஆண்டில் (2026) ‘கருப்பு’ என்ற திரைப்படம் மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களம் கொண்ட இத்திரைப்படத்தின் விளம்பர மற்றும் இசை வெளியீட்டு விழாவை கோயம்புத்தூரில் கதிர் பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே நடத்தியிருக்கிறார்கள். நடிகர் சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் இப்படி ஒரு டிரண்ட்டை பிரபலப்படுத்தியது, 2019 இல் சென்னை தாம்பரம் சாய் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாதான். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, மிகப்பிரம்மாண்டமான விழாவாக அதுவும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பிகில் படத்திற்கான புரோமேஷன் விழாவா? நடிகர் விஜயின் அரசியல் நுழைவுக்கான புரோமேஷன் விழாவா? என்ற கேள்வியை அப்போதே அந்த விழா எழுப்பியிருந்தது. அதற்கேற்ப, அவ்விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டிக்கதை எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான அச்சாரமாகவும் அமைந்திருந்தது.
பிகில் – திரைப்படம் வசூலை அள்ளியதோ இல்லையோ? விஜய் அரசியலுக்குள் கால் எடுத்து வைத்த கையோடு முதல்வர் சிம்மாசனத்திலும் அமர்ந்துவிட்டார். அன்று கல்லூரி வளாகத்தில் தலைவனின் நடிப்புக்காக பிகில் ஊதிய இளைஞர்கள் கூட்டம்; இன்று வீதியில் இறங்கி தலைவனின் ஆட்சி நிலைக்க பிகில் ஊதிக் கொண்டிருக்கிறது.
சினிமா நடிகர்களை “கூத்தாடிகள்” என்ற அடைமொழியோடு, அருவெறுப்பாக ஒதுக்கி வைத்த காலமும் ஒன்றிருந்தது. இன்றோ, அப்படிப்பட்டவர்களைத்தான் தங்களது முன்மாதிரி தலைவர்களாக வரித்துக் கொள்ளும் காலமாக மாறிவிட்டது. பாடப்புத்தகங்களைத் தாண்டி, சுயமாக சிந்திக்கும் திறனையும், சுயமாக முடிவெடுக்கும் திறனையும், சமூகத்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் வளர்த்தெடுக்கும் நோக்கிலான, முன்னெடுப்புகள் மறைந்து சினிமா கவர்ச்சிக்குள் மாணவர்களை மூழ்கடிக்கும் – அவர்களது சுய சிந்தனையை மழுங்கடிக்கும் செயலுக்கு பேராசிரியர்கள் பெருமக்களே துணை போவது எத்துனை அவலமானது?
சினிமா கலைஞர்களின் திறமைகளை, அவர்களது சாதனைகளை சினிமா தியேட்டரிலோ, ஓ.டி.டி. பிளாட்பார்ம்களிலோ கண்டு ரசித்துக் கொள்ளட்டும். அது அவர்களின் படைப்புச் சுதந்திரம். ரசிகர்களாக அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், கல்லூரி வளாகத்தை வணிக சினிமா நோக்கத்துக்கு திறந்துவிடுவதை எப்படி அனுமதிக்க முடியும்? அவர்களின் மலிவான சினிமா மோகத்துக்கு நேர்ந்துவிட மாணவர்கள் என்ன, பொலிக்காளைகளா? இல்லை, அவர்களின் அரசியல் அடியாட்களா? கல்லூரியில் சினிமாக்காரர்களுக்கு என்ன வேலை?
— இளங்கதிர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.