மேட்டா ரூங் ராட். இந்தப் பெயரை 1973ல் தமிழ் ரசிகர்களால் சரியாக உச்சரிக்கக் கூட முடியாது. யாருடைய பெயர் இது என்பதும் தெரியாது. ஆனால், இந்தப் பெயருக்குரியவரை ரசிகர்கள் எல்லாருக்கும் தெரியும். அன்றைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தற்போது டி.வி.யிலும் யூ-டியூபிலும் பழைய பாடல் காட்சிகளைப் பார்க்கிற இன்றைய ரசிகர்களுக்கும் கூட மேட்டா ரூங் ராட் என்பவரைத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் எனவும், 1973க்கு முன் வெளியான எந்தத் தமிழ்ப் படத்தையும் விட அதிக வசூலான படம் என்ற சாதனையையும் படைத்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ’ என்ற எவர்க்ரீன் டூயட் பாடலுக்கு எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடியவர்தான் தாய்லாந்து நடிகை மேட்டா ரூங் ராட்.
உலகம் சுற்றும் வாலிபன் படம் எம்ஜியார் பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர் தயாரித்த சொந்தப் படம். தயாரிப்பு மட்டுமல்ல, படத்தின் இயக்குநரும் அவர்தான். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை சிங்கபூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான் எனப் பயணிக்கும். இரட்டை வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆருக்கு லதா, மஞ்சுளா, சந்திரகலா என்று மூன்று கதாநாயகிகள். அத்துடன் கௌரவ நடிகையாக மேட்டா ரூங் ராட் நடித்திருப்பார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற மிதக்கும் மார்க்கெட்டில், படகில் பழங்கள் விற்பவராக அவருடைய அறிமுகக் காட்சி அமைந்திருக்கும். மேத்தா என்பதுதான் அவரது கதாபாத்திரப் பெயர். கொஞ்சு தமிழில் சில வார்த்தைகளைப் பேசுவார். அதைக் கேட்டு, “நம்ம தமிழ் எவ்வளவு இனிமையா இருக்கு பார்த்தியா?” என்று அருகில் உள்ள நாகேஷிடம் எம்.ஜி.ஆர். சொல்வார். திரைககதையின்படி முக்கியமான ரகசியம் ஒன்று மேத்தாவின் தந்தையிடம் இருக்கும். அண்ணன் எம்.ஜி.ஆர். கொடுத்து வைத்திருக்கும் அந்த ரகசியக் குறிப்பை வாங்குவதற்காகத்தான் தம்பி எம்.ஜி.ஆர் தாய்லாந்து நாட்டிற்கு வந்திருப்பார்.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு அண்ணன் தந்த ரகசியக் குறிப்பைத் தம்பியிடம் கொடுக்கும் நடிகையின் தந்தை, இங்கேயே தங்கிவிட்டு காலையில் தங்கலாம் என்று சொல்வார். அந்த இரவில் எம்.ஜி.ஆர் மீது மையல் கொண்டு நடிகை காணும கனவு பாட்டுத்தான், ‘பச்சைக்கிளி முத்துச்சரம்..’. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்நாதனின் துள்ள வைக்கும் டியூனும், டி.எம்.எஸ்-பி.சுசீலாவின் குரலும், எம்.ஜி.ஆர்-மேட்டா ருங் ரட்டாவின் அசைவுகளுடன் இணைந்து ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளும்.
கனவுப் பாடல் முடிந்து, பகலும் விடிந்து, பாங்காக் நகரில் துஷிதானி என்ற ஸ்டார் ஹோட்டலுக்கு எம்.ஜி.ஆர் வந்துவிடுவார். அங்கேதான் அவர் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த சந்திரகலா தங்கியிருப்பார். அந்த ஹோட்டலைத் தேடி வருவார் மேட்டா. முதல் நாள் தன் கனவில் டூயட் பாடிய எம்.ஜி.ஆருக்கு திருமணமாகிவிட்டது என்ற விவரம் அப்போதுதான் அவருக்குத் தெரியும். படத்தில் அதுவரை குழந்தைத் தனமாகவும் இளமைத் துள்ளலுடனும் காணப்பட்ட மேட்டா கண்கலங்கி நிற்பார். எம்.ஜி.ஆர் அவரை ஆறுதல்படுத்தி, “நம்ம ரெண்டு பேரையும் ஆண்டவன் சந்திக்க வச்சதுக்கு காரணம், எனக்கு தங்கை இல்லாத குறையைப் போக்கத்தான்” என்று சொல்வார். அத்துடன், படத்தில் மேட்டா ரூங் ரட்டின் கௌவரவத் தோற்றம் நிறைவுபெறும்.
ஒரு பாட்டு, ஓரிரு காட்சிகள் இவ்வளவுதான் தமிழில் அவர் நடித்தது. ஆனால், என்றும் நினைவில் நிற்கும் பாடலாக அது அமைந்துவிட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு வயது 55. மேட்டா ருங் ரட் வயது 30. 1942ல் பிறந்த மேட்டா ருங் ரட், நவம்பர் 3 -2026ல் தனது 83 வயதில் காலமாகிவிட்டார்.

தாய்லாந்து படங்களில் மேட்டா ரூங் ரட் முத்திரை பதித்தவர். ஆசியாவின் கருப்பு முத்து என்ற பட்டமும் அவருக்கு உண்டு. 1962 இல் வெளியான “Youthful Recklessness” என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான புகழ்பெற்ற ‘கோல்டன் டால்’ (Golden Doll Award) விருதை வென்றதன் மூலம் ரசிகர்களின் பெரும் ஆதவைப் பெற்றார். “Nong Bua Daeng” (1973),”Phra Rot-Meri” (1981) போன்ற படங்கள் இவருக்குப் புகழ் சேர்த்தன. நாயகி, வில்லி என எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அவர் சிறப்பாக நடித்தார்.
தமிழில் ஒரு படத்தில் நடித்ததுடன், ஜெர்மன், அமெரிக்கா மற்றும் ஜப்பானிய நாட்டுத் படங்கள் என 180 திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
திறமையான கலைஞர்களுக்கு மரணத்திற்குப் பிறகும் வாழ்வு உண்டு.
— கோவி.லெனின்






Comments are closed, but trackbacks and pingbacks are open.