மண்ணச்சநல்லூருக்கு என்னெல்லாம் செய்திருக்கிறேன் … நீண்ட பட்டியலிட்ட எம்.எல்.ஏ. கதிரவன் !
திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கியிருக்கும் எம்.எல்.ஏ. கதிரவன், நாள்தோறும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் – தொண்டர்கள் சூழ சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏப்ரல்-10 அன்று மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் திருப்பைஞ்ஞீலி, வாழ்மால்பாளையம், குருவம்பட்டி, சிறுகாம்பூர், கிளியநல்லூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது, தொகுதி மக்களிடையே உரையாடும்போது, “உங்கள் வீட்டுப்பிள்ளை கதிரவனாகிய எனக்கு இந்த முறையும் நீங்கள் உங்கள் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாமுமான ஆட்சி தொடர இந்த முறையும் எனக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில், மாநகரத்திற்கு இணையாகத் தரமானச் சாலைகள், வடிகால் வசதிகள், பேவர் பிளாக் சாலைகள், ரேஷன் கடைகள், சத்துணவு, அங்கன்வாடி மையங்கள், பஸ் நிறுத்தங்கள், பள்ளிக் கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள், குடிநீர் திட்டங்கள் என ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன்.
திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தரை மேல் நீர்த்தேக்க தொட்டி, தனி நபர் புதிய பைப் லைன் அமைத்தல், சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள், பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், கழிவுநீர் வடிகால் என 11 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்துக் கொடுத்துள்ளேன். மேலூர் மூவராயன் பாளையம், கீழூர் மூவராயன் பாளையம், கீழூர் மேலூர் வாழ்மால் பாளையம், தெற்கியூர் வாழ்மால்பாளையம் போன்ற பகுதிகளில் 3 கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலைகள், குடிநீர் வசதிகள், தார் சாலை, புதியப் பைப் லைன், மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டிகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். கிளியநல்லூர் ஊராட்சியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வசதி, பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, கழிவுநீர் வடிகால் வசதி, சிறிய பாலங்கள் என பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றித் தந்துள்ளேன்.” என்பதாக, கடந்த ஐந்தாண்டு காலத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
மேலும், ஆளும் திமுக அரசின் நலத்திட்டங்களையும் தொகுதி மக்களிடம் கொண்டு சென்றது குறித்து பேசியவர், “திமுக அரசின், பெண்களுக்கானத் திட்டங்கள், மாணவ, மாணவிகளுக்கானத் திட்டங்கள், முதியோர்களுக்கானத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிக்கானத் திட்டங்கள், விவசாயிகளுக்கானத் திட்டங்கள் என அத்தனைத் திட்டங்களும் உங்களது ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் சாத்தியமாக்கியது மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களாகிய நீங்கள் தான். ” என்பதாக நெகிழ்வோடு குறிப்பிட்டவர், மக்கள் நலன் சார்ந்த ஆட்சி தொடர மீண்டும் தனக்கே வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதாக மக்கள் வெள்ளத்தினூடாக கோரிக்கை விடுத்தார், எம்.எல்.ஏ. கதிரவன்.
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.