அங்குசம் பார்வையில் ‘ஆடு ஜீவிதம்’ !
உலகின் சிறந்த பத்து படங்களின் பட்டியலில் இனி தவறாது இடம்பிடிக்கப் போகும் அற்புதமான படம்.
அங்குசம் பார்வையில் ‘ஆடு ஜீவிதம்’ !
தயாரிப்பு: விஷுவல் ரொமான்ஸ். தமிழ்நாடு ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்ஷன்: ஏ.பிளஸ்ஸி. நடிகர்—நடிகைகள்: பிருத்விராஜ் சுகுமாறன், அமலாபால், கே.ஆர்.கோகுல், ஜிம்மி ஜீன்லுயிஸ், தலிப் அல்-பஸி, ரிக் அபி (அரபு நடிகர்கள்). இசை: ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு: கே.எஸ்.சுனில், எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத், சவுண்ட் டிசைனர்: ரசூல் பூக்குட்டி. தமிழ்ப்பதிப்பு: ஆர்.பி.பிலிம்ஸ். பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.
மலையாள நாவலாசிரியர் பென்யான் எழுதிய நஜீம் என்பவரின் உண்மைக் கதை தான் இந்த ‘ஆடு ஜீவிதம்’. குடும்ப வறுமையிலிருந்து மீள இந்த நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் போய், அங்கே சிக்கிச் சீரழிந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, ஊர் திரும்பும் வறியோர்களின் வலி மிகுந்த வாழ்க்கையைத்தான் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து திரைப்படமாக்கி, நம்மை உலுக்கியெடுத்துவிட்டார் டைரக்டர் பிளஸ்ஸி.
மூன்று மணி நேரப்படத்தில் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் வெயில் சுட்டெரிக்கும், குளிர் வாட்டியெடுக்கும் பாலைவனத்தில் தான் காட்சிகள் நகர்கின்றன. ஆனாலும் நம்மை வேறெங்கும் நகரவிடமால், நமது பார்வையை திரையிலிருந்து திசை திருப்பவிடாமல் நம்மை ஆளுமை செய்கிறார்கள் டைரக்ட்ர் பிளஸ்ஸியும் நிஜக்கதையின் நாயகனாக திரையில் வாழ்ந்த பிருத்விராஜ் சுகுமாறனும்.
படம் முழுக்க பாலைவனத்தில் மட்டுமல்ல, அனைவரும் மனதிலும் வாழ்கிறார் பிருத்விராஜ் சுகுமாறன். அதிலும் இடைவேளைக்குப் பின் அவரின் நடிப்பு ரொம்ப…ரொம்ப…ரொம்ப… பிரமிப்பு. மூன்று வருடங்களில் ஆளே உருக்குலைந்து, நடக்கவும் பேசவும் ஜீவனில்லாமல் பாலைவன மணலில் வலது கால் வளைந்து அவர் நடப்பது, பார்வைக்குறைப்பாட்டால் கண்களைச் சிமிட்டி சிமிட்டிப் பார்ப்பது, என மனுசன் மகாநடிகனாக, மாபெரும் அர்ப்பணிப்புமிக்க கலைஞனாக மிளிர்கிறார்ர் பிருத்விராஜ்.
அதிலும் அந்தத் தார்ப்பாய் உடையைக் கழட்டிப் போட்டுவிட்டு எலும்புகள் தெரியும் உடம்பு, வறுமைக் கோடுகள் தெரியும் ஒட்டி ஒடுங்கிய வயிறு இந்தக் கோலத்தில் பிருத்வியைப் பார்த்ததும் நமக்குத் தூக்கிவாரிப்போட்டது. உடம்பு நடுக்கம் நிற்கவே சில நிமிடங்களானது. பிருத்வியும் அவரது நண்பனும் தப்பித்துப் போக உதவும் கேரக்டரில் வருகிறார் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன்லுயிஸ். படத்தின் கடைசி அரைமணி நேரத்திற்கு முன்பு வந்தாலும் படம் முழுவதும் வந்த சிலிர்ப்பை ஏற்படுத்திவிட்டார். அவரின் கண்ணீர் பாலைவனத்தில் சிந்தும் சில நிமிட சீன், படத்தின் உச்சம்.
அரேபியில் பேசும்போது சில இடங்களில் சப் டைட்டில் இருக்கும்.சில இடங்களில் இருக்காது. நஜீப் மொழி தெரியாது தடுமாறும் போது அவன் எதை புரிந்து கொண்டானோ அதற்கு மட்டுமே சப் டைட்டில் வரும்.நஜீப் மொழி புரியாமல் தடுமாறும் இடங்களில் நாமும் அந்த தடுமாற்றத்தை உணரவேண்டும் என்றுதான் வேண்டும் என்றே சில இடங்களில் சப்டைட்டிலை தவிர்த்து இருக்கிறார்கள்.
பிளஸ்ஸி+ பிருத்வி + கேமராமேன் சுனில் ஆகியோரின் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, இவற்றிற்கு உயிர் கொடுத்தவர் என்றால் அது இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் தான். பிருத்வி, ஜீன்லுயிஸ், கோகுல் மூவரும் தப்பி ஓடும் காட்சியில் கோகுலின் கண்களுக்கு கானல் நீர் தெரியும் போது, பாலைவனப்புயல் தாக்கும் போது, இந்த இடங்களில் பின்னணி இசையால் நம் இதயத்தை பிசைந்துவிட்டார் ரஹ்மான். அதே போல் “பெரியோனே……ரஹ்மானே…….” பாடலைக் கேட்டாலே நம்மை என்னவோ செய்கிறது. அதை வார்த்தையால் சொல்லத் தெரியவில்லை.
கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் இந்தக் கதையுடன் பயணித்ததன் பலனை பிளஸ்ஸிக்கும் பிருத்விக்கும் வழங்கி கெளரவிப்பது நல்ல சினிமா ரசிகன் ஒவ்வொருவனின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றியுமிருக்கிறார்கள். உலகின் சிறந்த பத்து படங்களின் பட்டியலில் இனி தவறாது இடம்பிடிக்கப் போகும் அற்புதமான படம்.
இப்படிப்பட்ட ஆகச் சிறந்த சினிமாவை தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ணிய ரெட் ஜெயண்ட் மூவிஸுக்கு ஒரு ராயல் சல்யூட்.
மதுரை மாறன்