இடைத் தேர்தல் ஒரு பார்வை
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழு தொகுதிகள் காலியாக உள்ளபோதும் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது.
ஏன் இந்தத் தேர்தல்?
சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தவெக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை விட்டு விலகி தவெகவில் இணைந்தனர். இதன் விளைவாகவே இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய முதன்மையான எதிர்க் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆளும் கட்சியான தவெக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இதே தொகுதிகளில் வெற்றி பெற்று ராஜினாமா செய்தவர்களையே மீண்டும் வேட்பாளர்களாகக் களத்தில் இறக்கியுள்ளது.
கடந்தத் தேர்தல் முடிவுகள்
மதுராந்தகம் தொகுதி..
அதிமுக 69284 34.95 சதவீதம்
தவெக 62090 31.32 சதவீதம்
திமுக 59838 30.18 சதவீதம்
நாதக 4950 2.5 சதவீதம்
தாராபுரம் தொகுதி
அதிமுக 81 100 40.56 சதவீதம்
திமுக 64 373 32.20 சதவீதம்
தவெக 46 438 23.23 சதவீதம்
நாதக 6026 3.01 சதவீதம்
இந்த முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அதிகமான செல்வாக்கு இருப்பது தெளிவாகிறது. தமிழ்நாடு முழுவதும் இளைய சமுதாயத்தினரும் திமுகவை விரும்பாதவர்களும் பேரலையாய் தவெக வுக்கு வாக்களித்த போதும் இந்த இரு தொகுதிகளிலும் தவெக வெற்றிபெற இயலவில்லை. மதுராந்தகம் தொகுதியில் மூன்று கட்சிகளும் பெற்றுள்ள வாக்கு சதவீதத்தில் பெரிதான வேறுபாடு இல்லை. தாராபுரம் தொகுதியில் அதிமுக மிக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை தவெக மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தவெகவுக்கு கடும் எதிர்ப்பு
வாக்களித்தப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மதிப்பளிக்கும் எந்த நியாயமானக் காரணமும் இல்லாமல் பதவியை விட்டு விலகிய தோடு உடனடியாக ஆளும் கட்சியில் போய்ச் சேர்ந்தது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சுய நல நடவடிக்கையாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பதவி விலகியவர்களையே மீண்டும் வேட்பாளர்களாகக் களமிறக்கியது தவெகவுக்கு மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது. தேர்தல் பரப்புரைக்கு செல்லும் இடங்களில் தவெக வேட்பாளர்கள் மக்களால் விரட்டப்பட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எனவே இந்த இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லலாம்.
அதிமுகவா?திமுகவா?
மதுராந்தகம் தொகுதியில் திமுகவின் கை ஓங்கியள்ளது என்று அறிய முடிகிறது. பாமகவின் மறைமுக ஆதரவும் திமுகவுக்கு இருக்கிறது. வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் ஏற்கனவே மக்கள் நலப்பணிகளால் அறிமுகமானவர். எனவே அவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மதுராந்தகம் அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் தொகுதி. அதிமுகவுக்கு அதிகமான வாக்கு வங்கி உள்ளது. எனவே திமுகவுக்கு அதிமுக கடும் சவாலாகவே இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாராபுரம் தொகுதியில் சென்ற தேர்தலில் 40 சதவீதத்திற்கு மேல் அதிமுக பெற்றது. தவெக, திமுக ஆகிய இரு பெரும் போட்டியாளர் களையும் வீழ்த்தி அதிமுக வெற்றிக் கனியைப் பறித்தது. எனவே மீண்டும் தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றே கருதப்படுகிறது.
— வழக்கறிஞர் தமிழகன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.