பாலின சமத்துவம் சார்ந்த கதைகளில் போக்குவரத்து குறித்த பழமையான கூறுகளை நாம் உடைத்தெறிவது அவசியம். “ஆண்கள் மட்டும்தான் பெரிய வாகனங்களை ஓட்டுவார்கள்” என்ற பழைய எண்ணத்தை மாற்ற வேண்டும்.
பேருந்து ஓட்டுநராகப் பெண் கதாபாத்திரங்களையும், விமானியாக அல்லது மெட்ரோ ரயில் ஓட்டுநராகப் பெண்களையும் முன்னிறுத்தலாம். அதேபோல், பொம்மைக் கடைகளில் பொம்மைகளைத் தள்ளும் தள்ளுவண்டியை ஆண் கதாபாத்திரமும் மகிழ்ச்சியாக ஓட்டுவதாகக் காட்டலாம்.
ஒரு குடும்பம் சுற்றுலா செல்வதாகக் கதை அமைத்தால், காரை அப்பா மட்டுமே ஓட்டுவதாக அல்லாமல், அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி வண்டி ஓட்டுவதைக் கதையில் இயல்பாகச் சேர்க்கலாம்.

விண்வெளி ராக்கெட் அல்லது பறக்கும் காரை ஒரு சிறுவனும் சிறுமியும் இணைந்து வடிவமைத்து ஓட்டிச் செல்வது போலக் கதை அமைக்கலாம். அங்கே இருவரும் சமமாகச் சேர்ந்து வேலைகளைப் பகிர்ந்துகொள்வதை விவரிக்கலாம்.
தீயணைப்பு வாகனம் அல்லது ஆம்புலன்ஸ் ஓட்டும் சாகசக் கதைகளில் ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் இணைந்து எப்படி புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு உதவினார்கள் என்பதைச் சொல்லலாம்.
மிதிவண்டி போட்டியில் சிறுமியும் சிறுவனும் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சமத்துவத்துடன் எப்படி போட்டியை நிறைவு செய்கிறார்கள் என்பதைச் சொல்லலாம்.
குறிப்பாக, சிறுவர்களுக்கான கதைகளில் அறிவுரை கூறுவது போல கதைகள் இருக்கக்கூடாது. மாறாக, செயல்மூலம் அவர்கள் தானாகப் புரிந்துகொள்ளும் வகையில் கதைப் போக்கு இருக்க வேண்டும்.
குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணமான, சுவாரஸ்யமான சொற்களைப் பயன்படுத்தவும்.
பெண்ணோ ஆணோ, தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த வாகனத்தையும் இயக்கலாம் என்ற சமநிலையை எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி இயல்பாகக் கதையில் கொண்டு வர வேண்டும்.
இந்த முறையில் போக்குவரத்து சார்ந்த கதைகளை எழுதும்போது, எதிர்காலச் சமுதாயத்தில் பாலினப் பாகுபாடற்ற சமத்துவச் சிந்தனை சிறுவர்களிடம் இயற்கையாகவே வளரும்.
— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளா், கதைசொல்லி






Comments are closed, but trackbacks and pingbacks are open.