திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா, ஆண்டாள் ராம்குமார், மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர். முன்னதாக கூட்டம் ஆரம்பித்ததும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட வாரிசுதாரர் பணி நியமனம் தற்போது நடக்கும் ஆட்சியில் மீண்டும் நிறைவேற்றப்படுமா? என்ற வாசகங்கள் எழுதிய பதாகையுடன் கூட்ட அரங்கிற்குள் வந்து, பதாகையை ஏந்தி நின்றார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது இது, வரம்பு மீறிய செயல், அவைக்குள் பதாகை ஏந்தி வரக்கூடாது என்று மேயர் கூறியதை தொடர்ந்து அவர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். அதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் ராமதாஸ் எனது வார்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள், மூன்று ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் பிரச்சனைக்கு நடவடிக்கை இல்லை. அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் என மேயரின் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேயர் அன்பழகன்;-
இப்போது 55 வது வார்டு பகுதியில் நட்சத்திர டேங்க் கட்டப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் சப்ளை செய்ய சோதனை முயற்சி நடந்து வருகிறது.
ஒவ்வொரு கட்டமாகத்தான் நீரை ஏற்றி பரிசோதனை செய்ய முடியும். இன்று மீண்டும் கூடுதலாக தண்ணீர் இயக்கப்பட்டு சப்ளை செய்யப்படும்.
முத்துச்செல்வன் (திமுக):
பெரம்பூரில் தனது சொந்த தொகுதியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கை கொடுக்காமல் முதல்வர் அவமதித்துள்ளார். இதனை கண்டித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ஜவகர் (காங்கிரஸ்):
மாமன்றத்துக்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் பேசுங்கள் உடனே இருக்கைகளில் அமர்ந்திருந்த திமுக கவுன்சர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து காங்கிரஸ் கவுன்சிலர் ஜவகருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ந.பிரபாகரன் பேசும்போது, இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர் கை கொடுக்காமல் தவிர்த்தது தவறுதான். மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றலாம்.
கமால் முஸ்தபா (திமுக) :
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்துக்கு முன்பாக ஆகாயத் தாமரைகள் அகற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாகி வருகிறது. வழக்கம்போல் தூர்வாரி ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஜாமலை விஜய் (திமுக) :
இரண்டு ஆண்டுகளாக வாட்டர் டேங்க் தூய்மைப்படுத்தப்பட கேட்டும், இதுவரை தூய்மைப்படுத்தவில்லை. குடிநீர் பிரச்சினை உள்ளது அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு விளக்குகளை பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை மேனுவல் போட்டு பல ஆண்டுகள் ஆகி கிறது. அதை மறுபடியும் சீரமைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒருவர் இருசக்கர வாகனத்தில் விழுந்து விட்டார். அதனால் பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது வார்டில் தூய்மை பணியாளர்கள் எட்டு பேர் தான் உள்ளனர். இதனால் தூய்மை பணியை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
சீதாலட்சுமி முருகானந்தம் (திமுக )
எனது 45 வது வார்டுக்கு உட்பட்ட காவேரி நகர் , திருமலை நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வரவில்லை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் செந்தில் (திமுக):
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் திறந்த வெளி பூங்கா ஒன்று உள்ளது இதில் வயதானவர்கள் நடை பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் உள்ள பல்வேறு உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக 25 நாட்களுக்கு முன்பாக புகார் அளித்தேன் அப்போது ஆணையர் உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்தார் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பர்மா காலணியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியும் நான்கு நாட்களாகியும் ஜேசிபி எந்திரம் வரவில்லை.
கேட்டால் இன்சூரன்ஸ் கட்டவில்லை என்று சொல்கிறார்கள். உடனடி தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
சாதிக் பாட்ஷா (திமுக):
கம்பரசம்பேட்டையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கண்ணீர் வரத்து குறைகிறது. ஆகவே மின்வெட்டை சீர் செய்ய வேண்டும்.
தண்ணீர் திறப்பு நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாக பெரிய கடைவீதியில் மழை நீர் வடிகால் சாக்கடைகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர் முடிவில் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







Comments are closed, but trackbacks and pingbacks are open.