‘இருமேனி’ என்ற பெயர் உருவாவதற்கு இந்தச் சங்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை, என்பதை கடந்த தொடரில் பார்த்தோம். பிறகு, எப்படி இருமேனி என்ற பெயர் வந்ததை என்பதை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
பொதுவாக ‘ஜாதி சங்கு’ என்று அழைக்கப்படுகிற Turbinella pyrum var.acuta மற்றும் ‘பட்டி’ என்று அழைக்கப்படுகிற Turbinella var.obtusa இந்த இரண்டும் இருமேனி கடலோரப் பகுதியில் சரி சமமாகக் கிடைக்கிறது. இரண்டு ஒருமேனி சங்கு ஒரே இடத்தில் கிடைக்கப்பெறுவதால் அந்தக் கடலோரப் பகுதியை ‘இருமேனி’ சங்கு கிடைக்கும் பகுதி என்று அழைத்திருக்கலாம். இந்த இரண்டு முக்கிய வகையான சங்குகள் இருமேனி கடலோரத்தில் மட்டுமே கிடைக்கிறது என்ற செய்தி சங்கு தொழிலில் பலகாலம் அனுபவம் பெற்றவரும், கீழக்கரையில் பிறந்து தற்போது சென்னையில் வாழும் KAMS. உமர் சாகிப் மூலம் வந்த தகவல் இது. பொதுவாக ஜாதி வகை (var.acuta) சங்குகள் ஆதம் பாலத்தின் தெற்கில் மன்னார் வளைகுடா பகுதியிலும், பட்டி வகை சங்குகள் (Var.obtusa) ஆதம் பாலத்தின் வடக்கு பகுதியில், பாக்ஜலசந்தியிலிருந்து சென்னை, கோதாவரி ஆற்று முகத்துவாரம் வரைக்கும் கிடைப்பதாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தியாவில் சங்கு ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்கிய Hornel, 1915ஆம் ஆண்டு மிக நுணுக்கமான ஆராய்ச்சியில் ஆதம் பாலத்தின் வடக்கு பகுதியின் சிறிய தூரம் var.acuta (ஜாதி) பரவலாகப் பாம்பன் தீவு, மன்னார் தீவு இந்த இரண்டிற்கும் இடையில் அமைந்திருக்கும் ஆதம் பாலத்தை ஒட்டிப் பாக் ஜலசந்திக்குள் ஊடுருவி இருக்கிறது. அதனால் அதை ஒட்டியுள்ள இருமேனி, பாம்பன், தங்கச்சி மடம், இராமேஸ்வரம் பகுதியில் ‘ஜாதி’ மற்றும் ‘பட்டி’ வகைகள் கலந்து கிடைப்பதாகக் கூறுகிறார். ஆகவே, இரண்டு முக்கியமான சங்கு வகைகள் இங்குக் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. அதனால் இருமேனி என்கிற பெயர் வருவதற்கும் வாய்ப்புண்டு.
இறுதியாக மிகவும் வித்தியாசமான ஒரு வகை சங்கு, ‘இருபிறவி’ என்ற வியாபாரப் பெயரில் பாக் ஜலசந்தியிலுள்ள இருமேனி கடல் பகுதியில் அதிகமாகக் கிடைப்பதாகச் சேதுபதிகளின் வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்துப் புத்தமாக வெளியிட்டுள்ள, தமிழகத்தின் மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர் Dr. கமால் (2015) கூறுகிறார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கில ஆராய்ச்சியாளர் இந்தியாவின் சங்குகள், வகைகள், தொழில்கள், வியாபாரம் போன்றவற்றை வகைப்படுத்தி 18 ஆம் நூற்றாண்டிலே கட்டுரைகள், புத்தங்கள் எழுதி வைத்துள்ளார்கள். அவைகளைச் சேகரித்துப் படிக்கும் போது இந்த ‘இருபிறவி’ சங்கு மண்டபம், இராமேஸ்வரம் பகுதியில் அரிதாகக் கிடைப்பதாகவும் Hornel (2015) எழுதியுள்ளார். அந்த வித்தியாசமான சங்கை அதன் தமிழகத்து அறிஞர்களும் ஆராய்ந்து, அவற்றில் சில வித்தியாசமான குணங்கள் இருந்தால் அவற்றை உட்பிரிவிலிருந்து நீக்கி, அடுத்த வகையான Turbinella pyrum var.irupravi என்று அழைத்து ஐந்து வகைகளை ஆறு வகைகளாக உயர்த்தியும் உள்ளனர் (Nayer & Mahadevan, 1973).
இந்த இருபிறவி சங்கு மண்டபம், இராமேஸ்வரம் பகுதியில் அரிதாகக் கிடைப்பதாகக் குறிப்பிட்டிருந்தாலும் இருமேனி கடலோரப் பகுதியில்தான் அதிகமாகக் கிடைத்துள்ளது. இருபிறவி சங்குகள் அதாவது தரமான, வலுவான ஜாதி சங்குக்கும், தரம் குன்றிய வலுவில்லாத, விலை குறைவான பட்டி சங்குகளுக்கும் இடையில், இந்த இரண்டு முக்கியச் சங்குகளுக்கு இடைப்பட்ட குணம் கொண்ட இருபிறவி சங்குகள் கிடைப்பதாகத் தமிழ்நாடு மீன்வளத் துறை ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. இருபிறவி சங்கு கொஞ்சம் “பட்டி” சங்கு குணங்களும், கொஞ்சம் ஜாதி சங்கின் குணமும் இருப்பதால் அதை இருபிறவி என்று அழைத்து அதை ஆறாவது வகையாக Turbinella pyrum var.irupiravi 6160TQ3I அழைத்தனர்.
இருபிறவியா அல்லது இருமேனியா? என்ற குழப்பத்திற்கான தெளிவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
(தொடரும்)







Comments are closed, but trackbacks and pingbacks are open.