பணம் கேட்ட மின்வாரிய அதிகாரிகள்? பழுதடைந்த மின் கம்பத்தால் பரபரப்பு!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், மதுராபுரி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகரில் வசித்து வரும் அன்னலட்சுமி என்பவர், தனது வீட்டின் வாசலில் உள்ள பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றித் தருமாறு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று பலமுறை மனு அளித்ததுடன், மின்வாரிய மக்கள் குறைதீர் கூட்டத்திலும் புகார் மனு வழங்கியதாக கூறினார். இருப்பினும், இதுவரை அந்த பழுதடைந்த மின் கம்பம் மாற்றப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மேலும், மின் கம்பத்தை மாற்ற ரூ.50 ஆயிரம் செலவாகும் எனவும் , அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே பணியை மேற்கொள்ள முடியும் என்று சில அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும், தினக்கூலி தொழிலாளியான தன்னால் அவ்வளவு தொகையை வழங்க முடியாது என்று தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தினமும் வேலைக்குச் செல்வதற்கும், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கும் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். காற்று மற்றும் மழைக்காலங்களில் பழுதடைந்த மின் கம்பம் காரணமாக அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், பழைய கம்பத்திற்கு மாற்றாக புதிய மின் கம்பம் ஏற்கனவே அன்னலட்சுமி வீட்டிற்கு அருகில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பணம் செலுத்தாத காரணத்தினால் இதுவரை அதை பொருத்தாமல் காலதாமதம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அன்னலட்சுமி மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.