முன்னோக்கிச் சென்ற தேரை பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள், அமைச்சரே !
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. ராஜ்மோகன் அவர்களுக்கு வாழ்த்துகளும் அன்பும்! உங்கள் முன் நிறைய சவால்கள் இருக்கின்றன. கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தோழர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்ந்தெடுக்கப்பட்டபோது என்னைப் போன்றோருக்கெல்லாம் அவ்வளவு பெரிய ஏமாற்றம். காரணம் கல்விதான் இங்கே அனைத்திற்கும் அடிப்படை. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று வேறு எந்த இனத்திலும் பிச்சை எடுத்தாவது படி என்று கூறியிருக்கவில்லை. ஓர் அனுபவமிக்க நபரே கல்வித்துறைக்கு வேண்டுமென்று நாங்களெல்லாம் விரும்பினோம். ஆனால், நடந்தது வேறாக இருந்ததால் எங்களால் எங்களுடைய அச்சத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், அம்மையார் மரணத்திற்குப் பிறகு ஒரு மோசமான நிலையில் தமிழ்நாடு இருந்தது.
அனைத்துத் துறைகளிலும் இதே நிலைமை. எப்படி மீட்டுக் கொண்டுவரப்போகிறார்கள், கல்வித்துறை இன்னும் சவாலாச்சே என்றெல்லாம் எண்ணி அஞ்சி நடுங்கினோம்.

ஆரம்பத்தில் அன்பில் அவர்கள் தடுமாறினாலும் ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு கல்வி சார்ந்த, கல்வித்திட்டம் சார்ந்த, அரசுப்பள்ளிக் குழந்தைகளின் எதிர்கால கனவு சார்ந்த என அனைத்திலும் தூள் கிளப்பினார். அப்படி ஒரு மனநெகிழ்வு எங்களுக்கெல்லாம் அந்த மனிதரின் தெளிவைக் கண்டு. இதையேதான் உங்களிடமும் எதிர்பார்க்கிறோம். இந்த அரசு முழுமையுமே (ஒருவரைத் தவிர).
யாவரும் சட்டமன்றத்திற்கு, திட்டங்களுக்குப் புதியவர்கள். உங்கள் கொள்கைத் தலைவர்கள் கல்வியைச் சார்ந்து என்ன கூறியிருக்கிறார்கள் என்று அலசுங்கள். ஒவ்வொரு குழந்தையின் நிலையிலிருந்தும் யோசியுங்கள். ஒவ்வோர் ஆசிரியரின் நிலையிலிருந்தும் யோசியுங்கள்.
ஏற்கனவே, அரசுப்பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி சார், சீருடை சார், உணவு சார், உயர்கல்வி சார் என என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை கல்வித்துறை செயலர், இயக்குநர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வழி கேட்டறிக. அதில் செழுமைப்படுத்த / மேம்படுத்த என்னவெல்லாம் முடியுமோ அதை செய்வதற்கு சுணக்கம் காட்ட வேண்டாம். ஆனால், முன்னோக்கிச் சென்ற தேரை எதையும் பின்னோக்கி இழுக்கும் வேலையை யார் சொன்னாலும் செய்யாதீர்கள்.
உங்களைச் சாதியாகப் பார்க்கும் இழிபிறவிகள் முன் கொள்கையாக உருவெடுங்கள். LKG முதல் +2 வரை இருக்கும் குழந்தைகள்தான் எதிர்கால சமூகம். ஒவ்வொரு குழந்தையும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடன் தற்சார்புடனும், சுய மதிப்பீட்டுடனும் வளர, வாழ கல்விதான் பெருந்துணை.
மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டு அறிவியல் மனப்பான்மையில் நடப்பதே சுதந்திர மனிதரின் அடையாளம். அவ்வகையில் ஒவ்வொரு குழந்தைக்கும் பகுத்தறிவிலும், சுயமரியாதையிலும் நீங்கள் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

கடந்த ஆட்சிக்காலங்களில் பள்ளிகளில் வெளியான குழந்தைகளுக்கான சுற்றறிக்கைகளை வாசியுங்கள். ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் சரத்துகளை வாசியுங்கள். NEP 2020 குறித்து கல்வியாளர்களிடம் கலந்துரையாடுங்கள்.
ஆசிரியர்களில் பலர், உடன் பணியாற்றும், ஊதியமளிக்கும் குழந்தைகளையே சாதியாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கான மானுடப் பண்பை வளர்க்கும் விதமாகக் கல்வி உளவியல், குழந்தை உளவியல், மானுட உளவியல் குறித்தான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடுங்கள்.
அன்பில் அவர்களைக் கல்வித்துறை அமைச்சராக போட்டபோது “ஐயோ… போச்சா ?” என அச்சத்தில் தோய்ந்து போனவர்களை, ஐந்தாண்டு முடிவில் அடுத்த முறையும் அன்பில் தான் கல்வியமைச்சராக வரவேண்டும் என்று எண்ண வைத்த அன்பில் போன்று சிறந்த கல்வியமைச்சராக வர, வளர வாழ்த்துகள். என்ன ஒன்று. அவர் கடைசி வரை தன் கையிலிருந்த கயிறை கழட்டவில்லை.நீங்களாவது? சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். புரட்சியாளரையும் தந்தை பெரியாரையும் உடன் வைத்துக்கொள்ளுங்கள்.
— மகாலெட்சுமி








Comments are closed, but trackbacks and pingbacks are open.