கரூர் பலி – 41 பெரம்பலூர் பலி – 7 அரசின் அநீதி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஆகஸ்டு – 11 ஆம் தேதி மாலை 4 மணி. பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு எதிரே இருந்த அந்த வீதி பரபரப்பாக இருந்தது. பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவர்கள், பணி முடித்து பயணப்பட்ட தொழிலாளர்கள், பல்வேறு தொழில் நிமித்தமாக வந்தவர் போனவர்களின் நடமாட்டளால் நிறைந்திருந்தது. யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில், அங்கிருந்த அருணாச்சலம் டீக்கடையிலிருந்த வணிக கேஸ் சிலிண்டர் வெடித்து தீ நாலாபுறமும் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் 4 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயமுற்றார்கள். டீக்கடை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின.

“வடை சட்டியில் பத்து லிட்டர் ஆயில் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கேஸ் சிலிண்டர் வெடிக்க, கொதிக்கும் எண்ணையோடு தீயும் சேர்ந்து நாலாபுறமும் பரவியதுதான் இவ்வளவு சேதத்துக்கும் காரணம்” என்கிறார், அந்த விபத்தில் சிக்கி காயமுற்ற பெரம்பலூரைச் சேர்ந்த ஜம் ஜம் ஏ.எஸ். சாதிக் பாஷா.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பெருந்துயரம் !

30% தீக்காயத்தை தாண்டிவிட்டாலே, உயிர்பிழைப்பது கடினம் என்று சொல்லப்படும் நிலையில் படுகாயமுற்ற 16 பேருக்கும் 40%-க்கும் மேலான தீக்காயம் என்பது பெருந்துயரம். இந்த செய்தி அச்சிலேறும் வரையில், மணிகண்டன், தினேஷ், சகாதேவன், ஆறுமுகம், புவனேஸ்வரி, விஜயக்குமார், சிவக்குமார் ஆகிய ஏழுபேர் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். எஞ்சிய 9 பேரும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.

உயிரிழந்தவா்கள்
உயிரிழந்தவா்கள்

“இந்த விபத்துல சிக்கி செத்தவங்க எல்லாமே ஏழை பாழைங்கதான். டீ மாஸ்டர், டீக்கடையில கிளாஸ் கழுவுனவங்க, போண்டா வடை போட்ட பெண் தொழிலாளி, டீக்குடிக்க வந்த டிரைவர், கேபிள்டிவி ஆபரேட்டர்னு வேலை செஞ்சவங்க. பாவம் பள்ளிக்கூடம் முடிஞ்சி ஸ்கூல் பையோட போன 14 வயசு சிறுமி மித்ராவும் அநியாயமாக சிக்கிட்டா. கூட படிக்கிற பசங்க கையில கிடைக்கிறது மருத்துவ செலவுக்காக கொடுத்துருக்காங்க. அந்த சிறுமியோட உறவினர்களா சேர்ந்து சோசியல் மீடியாவுல போட்டு இலட்சக்கணக்கில் வசூல் செய்து ஆஸ்பத்திரிக்கு கட்டிட்டாங்க. கடைசியா இறந்துபோன சிவக்குமார் வீட்ல  சொத்த அடமானம் வச்சி 15 இலட்சம் வரையில் கட்டியிருக்காங்க. ஆனாலும் காப்பாத்த முடியல. இந்த இழப்புகளுக்கெல்லாம் யார் பொறுப்பெடுத்துக்கிறது. ஆக்டிங் டிரைவரா மணிகண்டனை நல்லா தெரியும். எப்படியும் மாசம் 25,000 சம்பாதிப்பாரு. இனி அவங்க குடும்பத்துக்கு அந்த காசை யார் கொடுப்பா?” என கேள்வி எழுப்புகிறார், சமூக ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன்.

விபத்துக்கு யார் பொறுப்பு?

விபத்துகள் என்றாலே, எதிர்பாராமல் நடைபெறுவதுதான். என்னதான் எதிர்பாராமல் நடைபெற்றுவிட்டது என்று சொன்னாலும் அதில் ஏதேனும் ஒரு அலட்சியம், கவனக்குறைவு என்றொரு விசயம் கட்டாயம் இருக்கும். பெரம்பலூர் டீக்கடை விபத்தை பொறுத்தமட்டில், காஸ் சிலிண்டரின் அடிப்பாகத்தில் ஏற்பட்ட காஸ் கசிவுதான் விபத்துக்கு காரணம் என்கிறார்கள்.

காஸ் விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல; வணிக நோக்கில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் காப்பீடு செய்திருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற படிப்பினையை பெற்றுத்தந்திருக்கிறது, பெரம்பலூர் கோர விபத்து.

உயிரிழந்தவா்கள்
உயிரிழந்தவா்கள்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“போலீசாரின் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து தீ விபத்தில் சிக்கி 50 நாட்களுக்குப்பிறகு இறந்துபோன நிகழ்வுகளைக்கூட பார்த்திருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதற்கு எங்களது தரப்பில் என்ன உதவ முடியுமோ அதை நிச்சயம் செய்வோம்.” என்கிறார், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. டாக்டர் வி. லலித் குமார்.

“மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்கட்டமாக 2.10 இலட்சம் கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு வணிகர்கள், கேஸ் விநியோகஸ்தர்கள், போலீசாரை அழைத்து கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டிருக்காங்க.” என்கிறார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சொர்ணராஜ்.

நிலைகுலைந்த குடும்பங்கள்:

போனது ஒற்றை உசிராக இருந்தாலும், அந்த ஒற்றை உயிரை நம்பியும் வாழ்ந்து வந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அல்லவா நிலைகுலைய வைத்திருக்கிறது. வெறும் 2.10 இலட்சம் எந்த வகையில் அதற்கு ஈடாகிவிட முடியும்?

வயிற்றில் ஒன்றையும் கையில் மூன்று பிள்ளைகளையும் ஏந்தியபடி நீதிகேட்கும் டிரைவர் மணிகண்டனின் மனைவியின் கண்ணீருக்கு இந்த அரசின் பதில் என்ன? தினமும் 300 சம்பளத்தில் அதே டீக்கடையில் கிளாஸ் கழுவிக்கொண்டிருந்த தொழிலாளியின் குடும்பத்திற்கான பதில் என்ன? சொத்தை அடமானம் வைத்து ஆஸ்பத்திரியில் கட்டிய 15 இலட்சத்தோடு; குடும்பத்திற்கான ஒற்றை ஆதாரத்தையும் இழந்துவாடும் சிவக்குமாரின் குடும்பத்தை இனி யார் கரையேற்றுவது?

எழும் கேள்விகள் :

சாலையோரம் நடந்து செல்லும்போது, ஏதேனும் வாகனம் மோதி இறந்துவிட்டால்கூட சம்பந்தபட்ட காப்பீடு நிறுவனத்திலிருந்து இழப்பீட்டை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெரம்பலூர் விவகாரத்தில் அதற்கும்கூட வழியில்லை.

இந்த விபத்துக்கு சம்பந்தபட்ட டீக்கடை ஓனரை குறை சொல்கிறார்கள். கேஸ் கம்பெனியை பொறுப்பாக்க வேண்டும் என்கிறார்கள். இவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா? மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகளின் பங்கு என்ன? மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? பெரம்பலூர் நகராட்சியின் பங்கு என்ன? சங்கிலித் தொடர்போல ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்திற்கு எதிராகவும் நீள்கிறது இறந்துபோனவர்களின் சுட்டுவிரல்.

கரூரில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தேர்தல் பரப்புரையில் பங்கேற்று உயிரிழந்த 48 பேரின் குடும்பங்களுக்கு ஓடோடி உதவி செய்த அரசியல் கட்சிகள் பெரம்பலூர் சம்பவத்தில் பலியானோர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பது எத்துனை துயரமானது?

கரூர் விவகாரத்தில் பல்வேறு வகையில், 45 இலட்சம் ரூபாய் வரையில் நிதியுதவி வழங்கிய பின்னரும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசு, பெரம்பலூர் விவகாரத்தில் வெறும் முதற்கட்ட நிவாரணத்தோடு நிறுத்திக்கொண்டதை எப்படி புரிந்து கொள்வது?

வழக்குப்பதிவு செய்வதோடு என் கடமை முடிந்தது என்று போலீசாரும்; முதற்கட்ட நிவாரணம் வழங்கியதோடு என் கடமை முடிந்தது என்று மாவட்ட நிர்வாகமும் ஒதுங்கிக்கொள்ளும் போக்கும்; கரூர் விவகாரத்தில் காட்டிய கருணை பெரம்பலூர் விவகாரத்தில் இல்லாமல் போன அரசின் பாரபட்சம் அவலமானது மட்டுமல்ல; அவர்களுக்கு இழைத்த அநீதியும்கூட!

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.