அங்குசம் பார்வையில் ‘ஒன்ஸ்மோர்’
தயாரிப்பு: ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ யுவராஜ் கணேசன், டைரக்டர்: விக்னேஷ் ஸ்ரீகாந்த், ஆர்டிஸ்ட்: அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, சித்ரா லட்சுமணன், ரமா ராஜேந்திரன், தேவதர்ஷினி சேத்தன், ஜென்சன் திவாகர், ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன், இசை: ஹேஷம் அப்துல் வஹாப், எடிட்டிங்: நாஷ், பிஆர்ஓ: யுவராஜ்
காலேஜில் தனது சீனியரான ரகுவரனை[அர்ஜுன் தாஸ்] எட்டு வருடங்களுக்குப் பிறகு, சென்னை வேளச்சேரி பஸ்ஸ்டாப்பில் சந்திக்கிறார் அஞ்சலி[ அதிதி ஷங்கர்]. காரில் போகும் போது, தனது காதலை ரகுவிடம் சொல்கிறார் அஞ்சலி. முதலில் மறுக்கிறார் ரகு. மீண்டும் வற்புறுத்துகிறார் அஞ்சலி. இதனால் அஞ்சலியை சமாளிப்பதற்காக, ”உங்க அம்மா-அப்பாவுடன் வீட்டுக்கு வா, பேசலாம்” என சமாளிக்கிறார் ரகு. அஞ்சலியோ மறுநாளே அம்மா-அப்பாவுடன் ரகுவின் அக்கா[அனுஷா பிரபு] வீட்டுக்குச் செல்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ரகுவை தன் வயப்படுத்திவிடுகிறார். இந்த நிலையில் தான் அஞ்சலியின் பிறந்த நாள் பார்ட்டியில், அஞ்சலியின் எக்ஸ் லவ்வருடன் தகராறாகி, அஞ்சலியிடமிருந்து பிரிகிறான் ரகு.
அஞ்சலியை ரகு வெறுப்பதற்கு காரணம் என்ன? என்னவா இருக்கும், ரகுவுக்கு ஒரு காதலி இருந்திருப்பாள், அவள் இவனை ரிஜெக்ட் பண்ணியிருப்பாள். இதுவாத்தானே இருக்கும்னு நீங்க நினைச்சா அது ரொம்ப கரெக்ட். ஆனால் அதை அழகியலுடனும் மென்மையான காதல் உணர்வுடனும் சொல்லியிருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் ஸ்ரீகாந்த்.
அர்ஜுன் தாஸ் தன்னை ஒதுக்க நினைத்தாலும், வாண்டடாகப் போய் லவ் பண்ணும் அதிதியின் க்யூட் & ஸ்வீட் & ஸ்மார்ட் பெர்ஃபாமென்ஸ் ரசனைக்குரிய கவிதை ரகம். அதிலும் ”இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்கான் மாப்பிள்ளை”ன்னு தனது தாத்தா சொன்னதை அர்ஜுன் தாஸிடமே சொல்லி, “என்னோட குரங்கு எப்படி வேணும்னாலும் இருக்கும்னு சொல்லிட்டேன்” எனச் சொல்லி கலகலவென சிரிக்கும் சீன், கூல்டிரிங்ஸ் ஆர்டர் பண்ணிவிட்டு, “உன்னை எனக்குப் பிடிச்சதுனால நான் உனக்கு ரெஸ்பெக்ட் கொடுக்குற மாதிரி, என்னை உனக்குப் பிடிக்கலேன்னாலும் நீ என்னோட லவ்வுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கணும்” இந்த இரண்டு சீன்கள், அதிதியின் க்யூட் & ஸ்வீட் பெர்ஃபாமென்ஸுக்கு சின்ன சாம்பிள் தான். முதல் பாதி முழுக்க அதிதியின் அழகு முகமும் எக்ஸ்பிரஸனும் நம் மனதில் மயிலிறகால் தடவுவது போல் இதமாக உள்ளது.
கரடுமுரடான, லைட்டான ஆண்டி ஹீரோவாகவே வந்து கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், இதில் லவ்வர் பாயாகவும் லவ்வை வெறுப்பவராகவும் ரெண்டு டைமன்ஷனில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார். சைக்கியாட்ரிஸ்ட் தேவதர்ஷினி சேத்தனிடம் தனது ஃப்ளாஷ் பேக்கைச் சொல்லிவிட்டு இறுக்கமான முகத்துடன் வரும் சீன்களில் நன்றாகவே நடித்திருக்கிறார். அர்ஜுன் தாஸின் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் தேவதர்ஷினியின் நம்பிக்கை வார்த்தை ட்ரீட்மெண்ட் நல்ல ஐடியா டைரக்டரே…. அர்ஜுன் தாஸின் கரகர காந்தக்குரல் ஓகே தான். என்ன ஒண்ணு நாலு வரி வசனம் பேசுனா, இரண்டு வரி புரியமாட்டேங்குது.
கேரளாவில் காலேஜில் படிக்கும் போது இந்திராவை [ சோனா ஒலிக்கல்] காதலிக்கிறார் அர்ஜுன் தாஸ். மிலிட்டரியில் இருக்கும் தனது அப்பா கொடுத்த மோதிரக் கதையை அர்ஜுன் தாஸிடம் அந்த இந்திரா சொல்வதெல்லாம் கொஞ்சம் இழுவை தான் என்றாலும் ஓகே தான். அதுக்காக அர்ஜுன் தாஸ் தனது கழுத்தில் போட்ட செயின் காணாமல் போனதால், அவரை ரிஜெக்ட் பண்ணியதாக, பிற்பகுதி சீனில் சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் டைரக்டரே… அழகுப்பதுமையான சோனா ஒலிக்கல், நன்றாகவே நடித்திருக்கிறார். தனது அப்பா கொடுத்த மோதிரக் கதையைச் சொல்லி முடித்து கண்ணீர் சிந்தும் போது, பரவாயில்ல, இந்தப் புள்ள பாஸாகிரும்னு தோணும். [ அந்த சீனில் கேமரா ஆங்கிள் ரொம்ப அபாரம்]
டைரக்டர் விக்னேஷ் ஸ்ரீகாந்தின் ரசனையான காட்சிகளை மேலும் ரசனைக்குரியதாக்கியிருக்கிறார் மியூசிக் டைரக்டர் ஹேஷம் அப்துல் வஹாப். சின்னச் சின்ன மெலோடிகளை அங்கங்கே போட்டு, வசனமே இல்லாத சீன்களை மிக அருமையாக ஃபில்-அப் பண்ணியிருக்கிறார். பாடல்களில் பெரிய ஆறுதல் என்னன்னா… இசைக்கருவிகளின் ஒலியை குறைத்து பின்னணிப் பாடகர்-பாடகிகளின் ஒலியை தெளிவாகக் கேட்க வைத்தது தான். சென்னையைவிட கேரளாவில் தான் கேமராமேன் அரவிந்த் விஸ்வநாதனுக்கு அதிகமான வேலை.
அர்ஜுன் தாஸின் அம்மாவாக ரமா ராஜேந்திரன், அக்காவாக அனுஷா பிரபு, மச்சானாக டிராவிட் செல்வம், அதிதியின் அப்பாவாக சித்ரா லட்சுமணன், அர்ஜுன் தாஸின் நண்பர்களாக வருபவர்கள் என அனைவருமே தங்களுக்கான வேலையை கரெக்டாக செய்திருக்கிறார்கள்.
அது சரி, டைரக்டரே… சென்னையில் இல்லாத காலேஜா? அர்ஜுன் தாஸும் அதிதி ஷங்கரும் கேரளா காலேஜுக்கு ஏன் போனார்கள்? இதான் நமக்கு விளங்கவேயில்லை.
அங்குசம் பார்வையில் ‘ஒன்ஸ்மோர்’ 50/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.