துறையூர் செங்காட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவி தற்கொலை ! தொடரும் போலீஸ் விசாரணை !
துறையூர் செங்காட்டுப்பட்டி அரசு பள்ளி மாணவி தற்கொலை ! தொடரும் போலீஸ் விசாரணை !
பொதுவில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்… போக்சோவில் ஆசிரியர்கள் கைது… என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில், திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த செங்காட்டுப்பட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(எந்த சூழலிலும் தற்கொலை தீர்வாகிவிடாது. எதிர்பாராத சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழ் மொழியிலேயே தகுந்த ஆலோசனை வழங்குவதற்கு தமிழக சுகாதார சேவை பிரிவு தயாராக இருக்கிறது. அதன் உதவி மையத்தை – 104 என்ற எண்ணில் எந்நேரமும் அழைக்கலாம்.)
செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் என்பவரது மகள் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று (பிப் 10) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றவர் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளி மாணவியை தேட ஆரம்பித்தனர்.
அப்பொழுது ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி மூக்கன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே மாணவியின் காலணிகள் கிடப்பதை கண்டு மாணவி கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி மாணவியின் உடலை சடலமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் பள்ளி மாணவி சாவிற்கு யார் காரணம் பள்ளியில் ஏதேனும் பாலியல் தொல்லையா? அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இறந்து போன மாணவி உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுமதித்து உள்ளனர்.
சம்பவம் குறித்து முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் நேரில் விசாரணை செய்து வருகிறார்.