அங்குசம் பார்வையில் ‘கருப்பு’
தயாரிப்பு: ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு. டைரக்டர்: ஆர்.ஜே.பாலாஜி, ஆர்டிஸ்ட்: சூர்யா, த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயாரவி, சுவாஷிகா விஜய், ஷிவதா, வேலராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியன், நமோ நாராயணன்,மன்சூரலிகான், தீபா சங்கர், ஒளிப்பதிவு: ஜி.கே.விஷ்ணு, இசை: சாய் அபயங்கர், எடிட்டிங்: ஆர்.கலைவாணன், ஆர்ட் டைரக்டர்: அருண் வெஞ்சரமூடு. தமிழ்நாடு ரிலீஸ்: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், பிஆர்ஓ: சதீஷ் ( எஸ்-2)
“நீதிமன்றங்களின் மாண்பைக் குலைக்கும் நோக்கம் எங்களுக்கில்லை” –சென்சார் சர்டிபிகேட் போட்டு முடித்ததும் இந்த வாசகங்கள் திரையில் பளிச்சிட்டதுமே… ஆஹா எதோ பெருசா ‘கோர்ட் அட்டாக்’ இருக்கும் போலயே என நமக்குள் பளிச்சிட்டது.
தனது மகளை[அனகா மாயா ரவி] உயிர் பிழைக்க வைக்கும் ஆபரேஷனுக்காக கேரளாவிலிருந்து டிரெய்னில் சென்னைக்கு வருகிறார் இந்திரன்ஸ். பேசின்பிரிட்ஜ் சிக்னலில் நிற்கும் டிரெய்ன் கிளம்ப முக்கால்மணி நேரம் ஆகும் என்பதால், அங்கே இறங்கி ஆட்டோ பிடிக்க முயலும் போது, ஒரு வழிப்பறிக்கும்பல் இந்திரன்ஸின் பெரிய பேக்கை கொள்ளையடித்துவிட்டுச் செல்கிறது. அந்த பேக்கில் 60 பவுன் நகை இருந்ததாக போலீசில் கம்ப்ளெய்ண்ட் பண்ணுகிறார்கள் அப்பாவும் மகளும். அப்போதே லேடி இன்ஸ்பெக்டரின் அடாவடியால் நொந்து போகிறார்கள். சில திருட்டுப் பேர்வழிகளைப் பிடித்து வந்து லாடம் கட்டி நகைகளை மீட்டு ஒப்படைக்கும் போது எஃப்.ஐ.ஆரில் 45 பவுன் என எழுதுகிறார்கள். அந்த 45 பவுனைக்கூட கோர்ட்டில் மனு தாக்கல் பண்ணி பெற்றுக் கொள்ளும்படியும் இதற்காக வக்கீல் பேபி கண்ணனைப்[ ஆர்.ஜே.பாலாஜி] பார்க்கும்படியும் சொல்லி அப்பாவையும் மகளையும் அனுப்புகிறார் கான்ஸ்டபிள் லொள்ளு சபா மாறன்.
ஏழு கிணறு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தை மட்டுமல்ல, நீதிபதி[நட்டி]யையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, ரவுடி ராஜ்ஜியம் நடத்தும் கீழ்த்தரமான வக்கீல் தான் இந்த பேபி கண்ணன். 15 பவுன் நகைக்காக நாய்படாதபாடுபடும் இந்திரன்ஸுக்காக கோர்ட்டில் வக்கீல் மதுரை சரவணன் உருவத்தில் வருகிறார் கடவுள் வேட்டைக் கருப்பு[ சூர்யா] இந்திரன்ஸுக்கு நீதி கிடைத்ததா? நகை கிடைத்ததா? அவரின் மகள் அனகா மாயா ரவி உயிரி பிழைத்தாரா? இதான் நெருப்பு பொறி பறக்கும் ‘கருப்பு’.
படத்துல ஹீரோ சூர்யாவா? இல்ல ஆர்.ஜே.பாலாஜியா?ன்னு தெரியல. ஏன்னா படம் ஆரம்பிச்சு 35 நிமிஷம் வரைக்கும் ஆர்.ஜே.தான் கோர்ட்ல அட்டகாசம் பண்றார். அதுக்குப் பிறகு தான் சூர்யா எண்ட்ரியாகுறார். இந்த பெருந்தன்மைக்காகவே சூர்யாவைப் பாராட்டலாம் தான். ஆனால் வக்கீல் சரவணன், திடீரென கோர்ட்டில் கருப்புவாக மாறி [ அந்த நேரம் ரெட் கலர்ல லைட் எரியுது… நெருப்பு வளையம் சுத்துது] விட்டலாச்சார்யா படத்து மாயாஜாலம் பண்ணுவது தான் நமக்கு பகீர்னு இருக்கு. சாந்தமான வக்கீலாக, கோபக்கார வேட்டைக் கருப்புவாக வித்தியாசம் காட்ட ரொம்பவே சிரத்தையெடுத்திருக்கிறார் சூர்யா. க்ளைமாக்ஸில் ஆர்ஜே பாலாஜியிடம் “என்னடா இனிமே வக்கீல் தொழில் பண்ண முடியாது. கிரிக்கெட் கமெண்ட்ரி பண்ணப் போனாலும் கிரிக்கெட் பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமா?”ன்னு பாலாஜியை பஞ்சராக்கிட்டார் சூர்யா.
அதே கோர்ட்டில் வக்கீலாக வரும் த்ரிஷாவின் முகத்தோற்றம் ரொம்பவே பரிதாபமா இருக்கு. நீதிபதியாக நட்டி. இவர் போடும் சிக்னல்கள், “ஏழாம் பக்கத்தில் எல்லாம் இருக்கு மைலார்ட்” என பாலாஜி சொன்னதும் நட்டி முகம் பளிச்சிடுவது, ஷிவதாவிடம் சட்ட அமைச்சர் வேல ராமமூர்த்தி சல்லாபமாக இருந்துவிட்டு எஸ்கேப்பாக நினைப்பது, அப்போதும் கருப்புவாக மாறி ஷிவதாவுக்காக களம் இறங்கி நீதி பெற்றுத் தருகிறார் சூர்யா.
இந்திரனும் அவரது மகள் அனகா மாயா ரவியும் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள். வக்கீல்கள் கூட்டமே பிரியாணி தின்றுவிட்டு பார்சலும் வாங்கிப் போவதற்கு ஜிபே பண்ணியே நொந்து போவதும் தனது அப்பாவின் நிலைக்காக கோர்ட் அவமதிப்பு வழக்கில் ஒரு நாள் முழுக்க ஜெயிலில் இருந்து ஆஸ்பத்திரியில் உயிரைவிடும் சீனிலும் ஜொலிக்கிறார் அனகா. தனது மகள் இறந்த சேதியை போனில் கேட்டதும் கோர்ட் படிகளில் தடுமாறி நிற்கும் சீனில் மனதில் நிற்கிறார் இந்திரன்ஸ்.
“முப்பது வருசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடெண்ட் கேஸுக்காக இந்த கோர்ட்டுக்கு வந்தேன். இப்ப வரைக்கும் நான் உயிருடன் இருக்கேன்னு சொல்றதுக்காக போராடிப் போராடி இந்த நிலைமைக்கு வந்துட்டேன். கோர்ட்ல தண்டனை கிடைக்கும்னு எல்லாரும் நம்புறோம். ஆனா கோர்ட்டுக்கு வர்றதே பெரிய தண்டனை தான்”—ஒரு அப்பாவி பேசும் இந்த வசனம் தான் நிதர்சனம்.
“இந்த கோர்ட்ல 25 ஆயிரம் கேஸ் பெண்டிங்ல இருக்கு. இதெல்லாம் முடியவே 150 வருசம் ஆகும். இப்ப நாம பேசிக்கிட்டிருக்கும் போது 40 கேஸ் ஃபைல் ஆகிருக்கும்” –த்ரிஷா பேசும் இந்த வசனமும் உண்மை தான்.
இடைவேளை வரை செமத்தியான கண்டெண்டா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டே ஒரு டீ சாப்பிட்டு உள்ளே போனோம். ஆனால் அதுக்குப் பிறகு ஒண்ணேகால் மணி நேரம் நம்மை கண்டதுண்டமா வெட்டாத குறையாக கருப்புசாமி வந்து ஆடி சித்தம் கலங்க வச்சுட்டாரு. ஸ்ட்ண்ட் சீக்வென்ஸ்ல ஏன் இப்படி தாறுமாறு தக்காளிச் சட்னி அரைச்சாய்ங்கன்னு தெரியல. தெலுங்கு பாலையாவை மிஞ்சும் அளவுக்கு சூர்யாவுக்கு ஓவர் பில்டப் கொடுத்து கடுப்பேத்திட்டாய்ங்க மைலார்ட்.
இசை சாய் அபயங்கராம். தம்பி பின்னணி இசைன்னா என்னன்னு தெரியுமா தம்பி உனக்கு? காது ஜவ்வு கிழிஞ்சு ரத்தம் வந்திருச்சு தம்பி…. நல்ல மியூசிக் டைரக்டர்களின் நல்ல தமிழ்ப்படங்களைப் பாரு தம்பி, கொஞ்சமாவது திருந்து தம்பி.
ஏங்க …ஆர்ஜே பாலாஜி…கேரளாவிலிருந்து வரும் இந்திரன்ஸ் கனவுல கருப்பு எப்படி வர்றாரு…? அது சரி…. கருப்பு தலையிலேயே மிளகாய் அரைச்சுப் பூசுன உங்களுக்கு சூர்யா ரசிகர்கள் தலையில மிளகாய் அரைக்க சொல்லியா தரணும்? க்ளைமாக்ஸ்ல சட்டசபை… அதுல கருப்பையா காந்தியா நீங்க… ஏங்க இப்படி?
படத்தில் வில்லனும் படத்துக்கு வில்லனும் ஆர்ஜே.பாலாஜி தான்.
‘கருப்பு’ இடைவேளை வரை விருப்பு..வரவேற்பு. இடைவேளைக்குப் பிறகு செம கடுப்பு…
அங்குசம் பார்வையில் ‘கருப்பு’ 47/100
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.