அங்குசம் பார்வையில் ‘மண்டாடி’
தயாரிப்பு: ‘ஆர்எஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்’ எல்ரெட் குமார், இணைத் தயாரிப்பு: வி.மணிகண்டன், டைரக்டர்: மதிமாறன் புகழேந்தி, ஆர்டிஸ்ட்: சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் ஜெய்சங்கர், கிருத்திகா பாலசுப்பிரமணியன், ஆடுகளம் முருகதாஸ், ரேகா குமணன், ஸ்டண்ட் சிவா, பத்மன், ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர், இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்: பிரதீப் ராகவ், ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ, பிஆர்ஓ: ரேகா
ஒரு பாய்மரப் படகுப் போட்டியின் வெற்றி, உயிர் நண்பனை வெறி கொள்ள வைத்து விரோதியாக்கியதால், இராமேஸ்வரத்தைவிட்டுக் கிளம்பி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் நீச்சல்குள பாதுகாவலாராக இருக்கிறார் முத்துக்காளி [ சூரி]. தன்னை விரோதியாக்கிய அதே நண்பனின்[சுஹாஸ்] அடங்காத வன்மத்தால், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இராமேஸ்வரம் மண்ணுக்குப் போகிறார் காளி. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த ‘மண்டாடி’. பாய்மரப் படகுப் போட்டியில் தலைமையேற்று வழி நடத்துபவருக்குப் பெயர் தான் மண்டாடி.
தமிழ் சினிமாவில் இதுவரை, கபடிப் போட்டி, சேவல் சண்டை, ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு, கிடா சண்டை இவைகளைத் தான் கதைகளமாக பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த மண்டாடியில் தான் முதல்முறையாக பாய்மரப் படக்குப் போட்டி கதைக்களத்தை பார்க்கிறோம். இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுவபவம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போட்டிக்குத் தயாராகும் படகுகளை தயார் செய்வது, அதன் பிறகு நடக்கும் முன்னேற்பாடுகள், கடலில் எத்தனை மைல் தூரம் போகவேண்டும், எந்த இடத்தில் திரும்பி கரைக்கு வரவேண்டும், கடலில் காற்றின் வேகம் எந்த திசையில் எப்படி இருக்கும், என்பதையெல்லாம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்ய ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறார் டைரக்டர் மதிமாறன் புகழேந்தி.
டைரக்டரின் பிரயத்தனத்திற்கு தன்னையே அர்ப்பணித்து அபார உழைப்பைக் கொட்ட்டி, நடிப்பில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல கடலில் ரிஸ்க் எடுத்திருக்கிறார் சூரி. மாஜி காதலி,[மகிமா நம்பியார்] விஜய் ரவீந்ர்திராவுக்கு மனைவியானது தெரிந்தும் மனசுக்குள் குமுறுவது, அவரது மகன் மிதுன் ஜெய் சங்கரை சுஹாஸிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே, இராமேஸ்வரத்திற்கு தில்லாக வந்து இறங்குவது, கோவில் திருவிழாவில் முளைபாரி ஆட்டத்தைக் கூட ஆவேசமாக ஆடும் மகிமாவைப் பார்த்து பரிதாபமாக நிற்பது, அவளின் கணவன், மகன் முன்பே, “என்னை மன்னிச்சுரு ஆத்தா” என அவளின் காலில் விழுந்து கதறுவது, உயிரப் பணயம் வைத்து படகுப் போட்டியில் கடலில் சாகசம் செய்வது, ஸ்டண்ட் சீக்வென்ஸில் அதகளம் பண்ணுவது என ஹீரோ மெட்டீரியலுக்குரிய எல்லா வெரைட்டியும் சூரியிடம் வந்துவிட்டது உண்மை தான்.
ஆனால்”அண்ணே நீங்க ஹீரோ ஆகிட்டீக. அதனால் பாடில ஃபிளெக்ஸிபிள் இருக்கக் கூடாது, எப்பப் பார்த்தாலும் விறைப்பா இருக்கணும், யாரைப் பார்த்தாலும் முறைச்சுக்கிட்டே இருக்கணும்ணே” என யாரோ தப்பா கைடு பண்றாய்ங்க போல. படம் முழுக்க இதே மாடுலேஷன் தான் சூரி வர்றாரு. இதையெல்லாம் டோட்டலா சேஞ்ச் பண்ணுங்க சூரி சகோதரா. சினிமா கேரியர் இன்னும் சிறப்பா இருக்கும்.
பாய்மரப்படகுப் போட்டியின் வாத்தியாராக சத்யராஜ், இவரது மகளாக மகிமா நம்பியார், வில்லன் சாட்டப்புலியாக சுஹாஸ், சூரியின் நண்பனாக பால சரவணன், சென்னை நண்பனாக ஆடுகளம் முருகதாஸ், சுஹாஸின் அப்பாவாக ஸ்டண்ட் சிவா, மச்சானாக பத்மன் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆமா டைரக்டரே…சத்யராஜுக்கு கொஞ்சம் டல் மேக்கப் போட்டா பத்தாதா? எதுக்கு கருப்பு மேக்கப். ஓ…. கடற்கரையோரம் வாழ்ந்தா அப்படித் தான் இருப்பாய்ங்களோ?
க்ளைமாக்ஸில் நடக்கும் பதினைந்து நிமிட படகுப் போட்டி, அப்போது கடலில் ஏற்படும் அபாயச் சுழல்,[சிஜி ஒர்க்] இதெல்லாம் கேமராமேன் எஸ்.ஆர்.கதிரின் சாகச உழைப்பைச் சொல்கிறது. இதில் ஸ்டண்ட்சாகசம் செய்த பீட்டர் ஹெய்ன், பெஸ்ட் ஸ்டண்ட் கம்போஸிங் செய்து அசத்திவிட்டார்.
மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ்.ஸுக்கு இது 100- ஆவது படம். கதைக்கு வலு சேர்க்கும் இரண்டு பாடல்களிலும் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லரை மேலும் த்ரில்லாக்கும் பேக் ரவுண்ட் ஸ்கோரிலும் ஜமாய்த்துள்ளார் சாம் சி.எஸ்.
கதை நடப்பது முழுக்க இராமேஸ்வரம், மீனவர்கள் முழுக்க இந்துக்கள், தண்ணீர் சூழ்ந்த மாரியம்மன் கடவுள் என இருந்தாலும் பள்ளிவாசலில் பஞ்சாயத்து, இஸ்லாமியப் பெரிய மனுஷியின் சொல்லுக்கட்டுப்படுவது இதெல்லாம் மதிமாறன் புகழேந்தியின் மதிநுட்பம் தான். ஆனால் படத்தில் பாலசரவணன் தவிர, யாருமே இராமநாதபுரம் வட்டார வழக்கு பேசாமல் இருப்பது’மண்டாடி’க்கு பெரிய மைனஸ். சூரி கூட ஒரு காட்சியில் தான் அந்த வட்டார வழக்கை அழுத்தமாகப் பேசுகிறார்.
‘மண்டாடி’ யைக் கொண்டாட முடியாவிட்டாலும் ஒதுக்கிவிட முடியாது.
அங்குசம் பார்வையில் ‘மண்டாடி’ 42/100
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.