எம்.ஜி.ஆரின் இரட்டை வெற்றி !
எம்.ஜி.ஆரின் இரட்டை வெற்றி
நல்லவர், வல்லவர், மாவீரன், சிரஞ்சீவி, ஏழைகளின் மீது இரக்கம்கொண்டவர், கொடை வள்ளல் இப்படித்தான் எம்.ஜி.ஆரை ரசிகர்கள் கொண்டாடினர். அப்படித்தான் திரையிலும் வரவேண்டும் என எம்.ஜி.ஆர் நினைத்தார். தனது திரைப்படத்தில் நீதி, நேர்மை, வீரம் இதை வலியுறுத்தி தனது திரைப்படங்களை அமையும்படி செய்தார்.
மது அருந்துவது போல் தனது திரைப்படத்தில் அவர் நடிக்கமாட்டார். சூதாட்டத்தில் ஈடுபட மாட்டார். ஏழைகளின் துயர் துடைக்க துள்ளிக் குதித்து ஓடிவருவது உதவி புரிவது அவர்க்கு நிகர் அவரே.
பெண்களின் கற்புக்கு ஒரு இடைஞ்சலும் வராமல் ஓடிவந்து காப்பாற்றுவார். எந்த இடத்திலும் நீதிக்கு புறம்பாக செயல்பட மாட்டார்.
தாயைக்காத்த தனயன் 100 நாள், குடும்பத்தலைவன் 100 நாள், வேட்டைக்காரன் வெற்றியைத் தொடர்ந்து வெற்றி மேல், வெற்றி நாயகனாக எம்.ஜி.ஆர் திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆருக்கு வசனங்களும் பாடல்களும் மிகச்சரியாக கைகொடுத்தன. குறிப்பாக தெய்வத்தாய் படத்தில் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’’ என்ற பாடல் மிகப் பிரபலமானது. அந்த பாடலை எழுதிய வாலி என்ற இளைஞரை தொடர்ந்து தனது படங்களில் பாடல்களை எழுத வைத்து கவிஞர் வாலியாக்கினார். எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு ‘’அண்ணா எனது வழிகாட்டி’’, ‘’காமராசர் எனது தலைவர்’’ கட்சியில் பயங்கரமாக வெடித்தது. எம்.ஜி.ஆர் கோழை. பணத்திற்காக காமராசரை புகழ்வதாக மதுரை முத்து விமர்சித்தார்.
ஆனால் படுவேகமாக எல்லோரும் உணரும்படி எம்.ஜி.ஆர் இந்த பதிலை தந்தார். நான் சினிமாவில் உச்சத்தில் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். இனிமேல் நான் என்ன வாய்ப்பினை தேடிப்போகிறேன்? எதற்காக பணம் சேர்க்கப் போகிறேன்? இங்கே உள்ள வேலைகளைச் செய்யவே நேரமில்லை. நான் இன்னொரு இடத்தில் போய் என்ன செய்யப்போகிறேன்.
படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய ‘’கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அதை யாருக்காக கொடுத்தான். ஒருத்தருக்கா கொடுத்தான். இல்லை ஊருக்காக கொடுத்தான். என்று வாலி எழுதியது எம்.ஜி.ஆருக்கு வெகுவாக கச்சிதமாக பொருந்துவதாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மெய்சிலிர்த்துப்போய் கொண்டாடினார்கள்.
எங்கவீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடம் மிகப்பிரமாதமாக வெற்றிபெற்றது. ஆகவே இரட்டை வெற்றி என்று எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கொண்டாடினர். சாட்டையை சுழற்றியபடி எம்.ஜி.ஆர் ஆடிப்பாடிய பாடல் அவர் எதிர்கால திட்டத்திற்கு கட்டியம் கூறுவது போல் இருந்தது. நான் ‘’ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்’’ என்று நாடோடிமன்னன் வசனத்தை நினைவூபடுத்துவதாக அமைந்தது.
-ஹரிகிருஷ்ணன்