அங்குசம் பார்வையில் ‘நிறம் மாறும் உலகில்’
தயாரிப்பு : ’சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ்’ & ‘ஜி.எஸ்.சினிமா இண்டெர்நேஷனல்’ எல்.கேத்தரின், லெனின். டைரக்ஷன் : பிரிட்டோ ஜே.பி. நடிகர்—நடிகைகள் : பாரதிராஜா, ரியோராஜ், நட்டி [எ] நட்ராஜ், சுரேஷ்மேனன், சாண்டி, யோகிபாபு, விஜிசந்திரசேகர், வடிவுக்கரசி, கனிகா, லவ்லின் சந்திரசேகர், துளசி, ஆதிரா, வி.ஜே.விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், ஏகன், காவ்யா அறிவுமணி, ஆர்யா கிருஷ்ணன், மைம்கோபி, ஆடுகளம் நரேன், சுரேஷ் சக்கரவர்த்தி. ஒளிப்பதிவு : மல்லிகா அர்ஜுன், மணிகண்டராஜா, இசை : தேவ் பிரகாஷ் ரீகன், எடிட்டிங் : தமிழரசன், தியேட்டர் ரிலீஸ் : பெர்ஃபெக்ட் பிக்சர்ஸ் ஸ்டுடியோஸ். பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
மும்பையில் பவுடர் சப்ளை பார்ட்டிகளாக , தாதாக்களாக இருக்கிறார்கள் சுரேஷ்மேனனும் நட்டியும். இரண்டு பேருமே முஸ்லிம்கள். அடேய்களா… மும்பையில் தாதாக்கள்னாலே முஸ்லிம்கள் தான் என்பதை மாத்தவே மாட்டீங்களாடா… இப்பெல்லாம் சங்கிகள் தான்டா மெகா தாதாக்களாக, ரவுடிகளாக இருக்கிறார்கள். போங்கடா நீங்களும் உங்க புத்தி லட்சணமும். சனியன் தொலையுது. நாம படத்தோட லட்சணத்தப்பத்தி எழுதுவோம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்த தாதாக்களிடையே நடக்கும் மோதலில் இருவருமே பலியாகிறார்கள். அதில் நட்டி சாவதற்கு முன்பு , மும்பை காமாட்டிபுரா விபச்சார விடுதியில் ஒரு இளம் பெண்ணின் மடியில் தலைவைத்துப்படுத்தபடி, தனது அம்மாவுடன் பேசுவது போல் பேசுகிறார். ஏன்னா அவரின் அம்மா ஃபாத்திமா [ கனிகா] அதே காமாட்டிபுராவில் தொழில் செய்து தனது மகன் மாலிக்கை [ நட்டி ] வளர்த்து செத்துப்போனாராம்.
உங்க தாய்ப்பாச செண்டிமெண்ட்ல தீயவைக்க…
அடுத்து…, பாரதிராஜா-வடிவுக்கரசி தம்பதிகளுக்கு இருமகன்கள். இருவருமே அப்பா-அம்மாவை விட்டுவிட்டு நகரத்துக்குப் போய்விடுகிறார்கள். மாதம் தோறும் பிச்சைக்காசு மாதிரி மணியார்டர் பண்ணுகிறார்கள். மூத்தமகனும் மருமகளும் ஊருக்கு வருகிறார்கள். சிடுசிடு மூஞ்சி மருமகள், மாமியாரை கரித்துக் கொட்டுகிறார்.
ஒரு நாள் இரவு பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இறந்துவிடுகிறார்கள். பெத்தவர்களின் பரிதாப நிலையைவிட, பாரதிராஜாவை திரையில் பார்த்தால் ரொம்பவே பரிதாபமா இருக்கு. இனிமே அவரை நிம்மதியா வீட்ல ஓய்வெடுக்கவிடுங்கய்யா… சினிமாவில் நடிக்க வச்சு, அவரை பாடாய்படுத்தாதீகய்யா.
அடுத்து துளசி கேரக்டர். இவரின் கணவர் இறந்து ஒருவருசம் ஆகிறது. மகன் –மருமகள் தயவில் வாழ்கிறார். மனைவியின் சொல்பேச்சுக் கேட்டு அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான் மகன். அங்கிருந்து கிளம்பும் துளசி, அம்மா-அப்பா இல்லாத ஆட்டோ டிரைவர் சாண்டியின் ஆட்டோவில் பயணிக்கும் போது, தனது மகனாக நினைத்து பாசம் வைக்கிறார். சாண்டியும் தனது அம்மாவாக நினைத்து தனது வீட்டிற்கு அழைத்துப் போகிறார். தனது காதலியை பெண் பார்க்கப் போகும் போது, துளசியைத் துரத்தியடி என லவ்வர் சொன்னதும் லவ்வை தூக்கி எறிந்துவிட்டு, அம்மாவின் பாசத்தை சுமந்தபடி கிளம்புகிறார்.
அடுத்து நாகப்பட்டணமா? காமேஸ்வராமா? [ அதாங்க ராமேஸ்வரம் ]ன்னு தெரியல. அண்டை நாட்டு கடற்படையால் சுடப்பட்டு கரை ஒதுங்குகிறது பல மீனவர்களின் பிணங்கள். அதில் ஆதிராவின் கணவனும் ஒருவன். புற்று நோய் முற்றி, சாகும் நிலைக்கு வந்ததைக் கூட மகன் ரியோ ராஜிடம் மறைக்கிறார் ஆதிரா. இதைத் தெரிந்து கொள்ளும் ரியோராஜ், தாயைக் குணப்படுத்த கூலிக்கு கொலை பண்ணவும் சம்மதிக்கிறார். அந்த தாய் பிழைத்தாளா? செத்தாளா?
இப்படி நான்குவிதமான நிறங்களும் மனங்களும் கொண்ட தாய்ப்பாச மகன்களின் கதையை அம்மாவிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு ட்ரெய்னில் போகும் லல்லின் சந்திரசேகரிடம், டிடிஆர் யோகிபாபு சொல்லும் ஃப்ளாஷ்பேக் தான் இந்த ‘நிறம் மாறும் உலகில்’. டூட்டி முடிந்து ஸ்டேஷன் பிளாட்பார பெஞ்சில் அஞ்சாவது கதையை நல்லவேளை நாலே வார்த்தைகளில் சொல்லி முடிக்கிறார் யோகிபாபு. இல்லேன்னா நம்ம கதை கந்தலாகி, நம்மளோட மனமும் குணமும் டேஞ்சராக மாறியிருக்கும்.
டிவி சீரியலா எடுப்பதா? சினிமாவா எடுப்பதா?ன்னு ரொம்பவே குழம்பிப்போய் நம்மையும் குழப்பியெடுக்கிறார் டைரக்டர் பிரிட்டோ. இம்புட்டு நடிகர்—நடிகைகள் பட்டாளம் இருந்தும் என்ன பிரயோஜனம் ? ஒரு சீனாவது ஒழுங்கா மனசுல நிக்குதா? யோகிபாபுவே ஃப்ளாஷ்பேக்தான் சொல்றாரு. அதுக்குள்ள ஒரு ஃப்ளாஷ்பேக், அதைச் சொல்றதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், அதை நினைச்சுப்பார்க்குறதுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்குன்னு படுத்திஎடுத்துட்டியே டைரக்டர் தம்பி.
ஸாரி தம்பி… இந்த ‘நிறம் மாறும் உலகில், எந்த சின்ன சலனத்தையும் ஏற்படுத்தல. அடுத்த சினிமாவையாவது சினிமாவா எடுக்க முயற்சி பண்ணுங்க தம்பி.
— மதுரை மாறன்.