நவீன தமிழ்க் கவிதை உலகம் போற்றிய கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமாருக்கு புகழஞ்சலி !!
நவீன தமிழ்க் கவிதை உலகம் போற்றிய கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமாருக்கு புகழஞ்சலி !! கவிச்சுடர் கா . ந . கல்யாணசுந்தரம் , நிறுவனர் , உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் .
இலங்கை கொழும்புவில் புகழ்பூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களது புதல்வியும் டாக்டர் பிரதீப்குமார் அவர்களின் துணைவியாரும், தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் செயலாளருமான டாக்டர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா ( கவிஞர் உங்கள் ரேக்கா ) அவர்கள் இறைவனடி சேர்ந்தார். இவரது நல்லடக்கம் சென்ற திங்கள் அன்று இலங்கையில் நடைபெற்றது. ஏராளமான பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், உறவினர்கள் , நண்பர்கள் கலந்துகொண்டு இறுதியஞ்சலி நடத்தினர்.
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்களின் தலைவர் முனைவர் தாழை உதயநேசன்அவர்கள் சார்பில் மலரஞ்சலியும் , தன்முனைக் கவிதைகள் குழும நிறுவனர் கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் செயல் தலைவர் கவிஞர் ந.வேலாயுதம் ஆகியோர் சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைந்த கவிஞர் ரேணுகா பிரதீப்குமார் அவர்கள் மரபு, புதுக்கவிதைகள், ஹைக்கூ, தன்முனைக்கவிதைகள் என இவரது பங்களிப்பு போற்றுதலுக்கு உரியன. இவரது கணவர் டாக்டர் பிரதீப்குமார், புதல்வி இளம் கவிஞர் பிரணவி பிரதீப்குமார் அவர்களுக்கும் , புதல்வர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் . உலகத்தமிழ் ஹைக்கூகவிஞர்கள் மன்றம் , தன்முனைக் கவிதைகள் குழுமம், அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த அஞ்சலிகளை அமரர் கவிஞர் ரேணுகா அவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
பன்முகத் திறனுடன் பல தளங்களில் பயணித்து தமது இலக்கியப்பணிகளை பல்லாண்டுகளாக மேற்கொண்டு வந்த டாக்டர் ரேணுகா அவர்கள் செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புகளும், காத்திருக்கும் வண்ணமயில், தூரிகா, அர்ப்பணா என பல கவிதை புத்தகங்களை வெளியிட்டு விருதுகளையும் பெற்றுள்ளார். மருத்துவ சேவையில் இவரது பணி பாராட்டுக்குரியது. முகநூல் கவிஞர்களிடத்து இவர் கொண்டுள்ள தொடர்பு அளப்பரியது. இவரது மறைவு தமிழ் கவிதை உலகுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம்.
சென்ற ஆண்டு சென்னையில் நடந்த அமெரிக்க முத்தமிழ் இலக்கியப்பேரவை குழும ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு பட்டயம் மற்றும் விருதுகளைப் பெற்றவர். நவீன இலக்கியப் பெருவெளியின் சிறந்த கவிஞரை நாம் இழந்தாலும் அவரது படைப்புகள் பல்லாண்டு காலம் நம்மோடு நிலைத்து நிற்கும். அவரது புகழினைப் போற்றுவோம் என தன்முனைக் கவிதைகள் குழுமத்தோடு அங்குசம் மின்னிதழும் இணைந்து தமது இதயமார்ந்த அஞ்சலிகளை அர்ப்பணிக்கிறது.
— முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம்







Comments are closed, but trackbacks and pingbacks are open.