வெறுமனே Donor அல்ல … Red drop ஹீரோ நீங்கள்தான் !
எதிர்பாராத விபத்தில் சிக்கி அவசர சிகிச்சையில் … ஒரு உயிர் காக்கும் அறுவை சிகிச்சையில் … பத்து மாத காத்திருப்புக்குப்பின் முதன் முதலாய் உலகை காணத்துடிக்கும் ஒரு சிசுவின் பிரசவ போராட்டத்தில் … அவர்களின் மரணப் போராட்டத்தில், இயற்கையின் உருவாய் கடவுளின் அவதாரமாய் தோன்றி மறுவாழ்வளிப்பது மனித குருதிதான்.
உலகில் மனித குருதி ஒன்றுதான் இன பாகுபாடு அற்றது. மதங்கள் சாராதது. சாதிய பாகுபாடு காட்டாதது. எத்துனை கோடிகளுக்கும் நீங்கள் அதிபதியாக இருக்கலாம். ஆனால், எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விபத்தில் சிக்க நேரிடும் தருணத்தில், முகம் தெரியாத வழிப்போக்கன் ஒருவன் வழங்கும் ஒரு துளி ரத்தம்தான் உங்களது உயிரை மீட்டெடுக்கும் வல்லமை பெற்றதாகிவிடுகிறது.
உலகில் எந்த ஒரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்யமுடியாத, உன்னதமான இயற்கையின் படைப்புகளின் பட்டியலில் தண்ணீருக்கு அடுத்து இரண்டாமிடத்தை தக்க வைத்திருப்பது மனித குருதிதான். நீரின்றி அமையாது உலகு. அதுபோலத்தான், மனித குருதியும்.
ஆனால், இத்தனையும் நாம் அறிந்திருந்தும் புரிந்திருந்தும் நமது வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நமது ரத்தத்தை தானம் செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வு அற்ற நிலையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
ஏதோ, தான தர்மமாக அல்ல. உயிர் காக்கும் உன்னத சேவையின் ஹீரோவாக உங்களை அழைக்கிறது ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி டயமண்ட் சிட்டி.
இரத்த தானத்தின் அவசியத்தையும் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும், திருச்சி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தவிருக்கிறார்கள்.
ஜூலை 1 மற்றும் ஜூலை 2 ஆகிய நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில், காவேரி ஹெச்.ஆர். விங்ஸ், எண்-17, வார்னர்ஸ் சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி – 1 (சோனா மீனா தியேட்டர் எதிரில், கேரேஜ் 45 அருகில்) நடைபெறுகிறது. ஜூலை – 3 ஆம் தேதி திருச்சி பி.எச்.இ.எல்.டவுன்ஷிப், கைலாசபுரம் கிளப், ஆர்.எஸ்.கே. ஹாலில் நடைபெறுகிறது.
” ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி டயமண்ட் சிட்டி.யின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான தலைவர் குருவின் முன்னெடுப்பில், Rotary Reddrop Revolution – Mission 1000+32 என்ற மாபெரும் மனிதநேய இயக்கத்தின் நோக்கம் வெறும் ஒரு இரத்ததான முகாம் நடத்துவது மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் 1,00,000 Reddrop Heroes கொண்ட ஒரு உயிர்காக்கும் சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு.
ஏன் நாங்கள் அவர்களை Donors என்று அழைக்கவில்லை தெரியுமா? ஏனென்றால், ஒரு நபர் இரத்தம் கொடுக்கும் போது அவர் ஒரு தானதாரர் மட்டுமல்ல… ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக மாறுகிறார். ஒரு தாயின் புன்னகையை மீட்டுத் தருகிறார். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை காப்பாற்றுகிறார். அதனால்தான் அவர் ஒரு Reddrop Hero.
இந்த Mission 1000+32-ன் முதல் இலக்கு, ஒரே நாளில் 1032 Reddrop Heroes-ஐ உருவாக்குவது. ஆனால் இது ஒரு தொடக்கம் மட்டுமே. நாளை தமிழகம் முழுவதும், ஒரு உயிருக்கு இரத்தம் தேவைப்படும் போது, “யார் உதவுவார்கள்?” என்ற கேள்விக்கு, “எங்களிடம் 1 லட்சம் Reddrop Heroes இருக்கிறார்கள்” என்ற பதிலை உருவாக்க வேண்டும்.
உங்களின் ஒரு சிறிய செயல், ஒருவரின் வாழ்நாள் நம்பிக்கையாக மாறலாம். உங்களின் ஒரு துளி இரத்தம், யாரோ ஒருவரின் இதயத் துடிப்பாக மாறலாம். வாருங்கள்… Donor ஆக அல்ல… Reddrop Hero ஆக வாருங்கள். Rotary Reddrop Revolution – Mission 1000+32 ஒரு நாள்… ஒரு நகரம்… ஒரு இலக்கு… ஆயிரக்கணக்கான உயிர்கள்.” என்பதாக பெருமிதத்தோடு குறிப்பிடுகிறது, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி டயமண்ட் சிட்டி.
அப்புறம் என்ன, யோசனை? இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, மனிதநேயமிக்க மக்கள் சேவையில் உங்களையும் இணைத்துக் கொண்டு, Reddrop ஹீரோவாக பெருமிதத்தோடு உலகை வலம் வரலாமே!
குறிப்பு : இரத்த தான முகாமில் பங்கேற்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 98949 894704 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
– அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.