தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறிய தீப்பொறி இதுதான் !
சாத்தான்குளம் கொட்டடிக் கொலை வழக்கு ! பாகம் – 08
சாத்தான்குளம் கொட்டடிக்கொலை வழக்கில், இந்தச் சம்பவத்தை முதன் முதலில் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பதாக குறிப்பிடுகிறார், இடதுசாரி கலை இலக்கிய செயற்பாட்டாளர் கருப்பு அன்பரசன்.
இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகரம் மற்றும் ஒன்றியத்தின் சார்பில் அவர் குறிப்பிடும் தகவல் இதுதான்.
“கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 22 அன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிளை சிறையில் இருந்து பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக கிளை சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட ஜெயராஜூம் உயிரிழந்ததால் இதில் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் தகவலை முதன் முதலாக நமது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களிடம் தெரியப்படுத்தினர்.

இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் வேளையில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் முருகன் மற்றும் தோழர்கள் கொரோனா இக்கட்டான சூழலிலும் மருத்துவமனை முன்பு மறியல் போராட்டம் செய்து இந்த சம்பவத்தை பத்திரிக்கை செய்தி மூலம் வெளியில் தெரியப்படுத்தினர். இருவரும் சந்தேக மரணத்தை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, லாக்கப் மரணம் என்று ஒரு அப்பட்டமான உண்மை வெளியில் தெரிந்தவுடன், ஜூன் 26 அன்று நகரம் ஒன்றிய பகுதி சார்ந்த தோழர்கள் நூற்றுக்கணக்கான பேரை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.” என்பதாக அந்த பதிவில் குறிப்பிடுகிறார்.
தைரியமாக சாட்சியம் சொன்ன காவலர்களின் பங்களிப்பும், இதுபோன்ற இயக்கங்களின் முன்னெடுப்புகளும்தான் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையிலான தீர்ப்பை பெறுவதற்கு அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன.
தொடர்ந்து பேசுவோம்.
அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.