டைரிவித் சகா எனும் சாகா குரல் !
ரம்மியமான இரவுப்பொழுதுகளில், கதவுகள் தாழிடப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டு, நிசப்தத்தால் சூழ்ந்த அறைகளில், கண்கள் மூடி உறக்கத்திற்காக காத்திருந்த தருணங்களில், தென்றலென தீண்டிய அந்த காந்தக்குரல் இனி எப்போதும் ஒலிக்கப்போவதில்லை.
டைரி வித் சகா எனும் சாகாக் குரல் ! 📻
Hello FM 106.4 இல் திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஒலிபரப்பாகும் ”டைரி வித் சகா” நிகழ்ச்சியின் வழியே காற்றில் கலந்துரையாடிய, பண்பலை நாயகன் டைரி சகாவின் கம்பீரக்குரல் 2026 ஏப்-25 அன்றோடு காற்றோடு காற்றாய் கரைந்துபோனது.
ஆறாம் வகுப்பு மாணவனாக பள்ளி மேடையில் இரண்டு அடி திருக்குறளைக்கூட சொல்ல முடியாமல் அத்தனை பேர் மத்தியிலும் அவமானப்பட்ட அதே சண்முகநாதன் தான், பின்னாட்களில் தமிழகத்தின் தனித்துவமான ஆர்.ஜே.வாக, டைரி சஹா என்ற அடையாளத்துக்கு சொந்தக்காரராகவும் மாறிப்போயிருந்தார்.

அடிப்படையில் அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. அவரது தனித்துவமான குரல்வளமும், பரந்த வாசிப்பு அனுபவமும்தான் அவரை ஆர்.ஜே.வாக மாற்றிக்காட்டியிருக்கிறது. லொடலொட வென்று பேசிக்கொண்டிருப்பதும்; மூச்சு விடாமல் மொக்கை போடுவதும்தான் ஆர்.ஜே.க்களின் வேலை என்று இருந்த சூழலில்தான், தினம் தினம் புதிய தகவல்களோடு அதை சுவாரஸ்யம் குன்றாமல் நல்ல குரல் வளத்தோடு தொகுத்து வழங்கும் புதிய பாணியை பண்பலை வரலாற்றில் அறிமுகப்படுத்தியிருந்தார் சகா. ஆர்.ஜே.க்களின் இலக்கணமாகவும் ஆகியிருந்தார்.
எவரும் எதிர்பாராத தருணமொன்றில், அவர் மரணமுற்றார் என்ற செய்தி பலருக்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது. பலர் முதல்முறை நம்பவில்லை. அவரது இறப்பு செய்தி பலரை சென்று சேர்வதற்கு முன்னர், அவர் மண்ணில் புதைந்துவிட்டார். ஆனாலும், அவரை பற்றிய நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
”வானொலியில் பாடலுக்கு நடுவில் இடைவெளியில் விளம்பரங்கள் ஒலிக்கும். சில நேரங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருப்பர். அப்போதெல்லாம் அலைவரிசையை மாற்றி பாடல் ஒலிக்கும் வேறு நிலையத்தை வைத்து, இசையை இரசிப்பது நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்று.
மாறாக, டைரி சகாவின் நிகழ்ச்சி மட்டும் விதிவிலக்கானது. பாடல்களை காட்டிலும் அவர் வெளிப்படுத்தும் தகவல்களை கேட்பதற்காகவே, வானொலி நேயர்கள் பெருங்கூட்டம் இருந்ததை எவராலும் மறுக்க இயலாது.” என்பதாக இதனை நினைவுகூர்கிறார், பத்திரிகையாளர் பாலசுப்பிரமணியம்.
அதுவும் இரவுப்பொழுதில் நேயர்களோடு உரையாட கிடைத்த வாய்ப்பை, வாழ்வியல் சார்ந்து, நேயர்களின் உளவியல் சார்ந்த சிக்கல்களை டைரிவித் சகா நிகழ்ச்சியின் வழியே உரையாடத் தொடங்கினார்.
ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதில் புதைந்திருக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் பெரும்பாலும் டைரிகளில்தான் எப்போதும் புதைந்திருக்கும். டைரி எழுதும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அதுவும் இல்லை. ஆனால், அதுபோல எழுதாத பக்கங்களை, எவரிடமும் சொல்லாத உணர்வுகளை உணர்ச்சிகளை ”டைரி வித் சகா” பேசியிருக்கிறது.
அடுத்தவர்களுக்கு அவசியமில்லாத, அந்தரங்கங்களை பேசும் பக்கங்களாக அவை ஒருபோதும் இருந்ததில்லை. ஒவ்வொரு ஜீவ ராசியும் ஒவ்வொரு நாளும் கடந்து போன பக்கங்களை பற்றி பேசியிருக்கிறது. வாழ்க்கை அனுபவங்களை அதன் வழியே கடத்தியிருக்கிறது. சமூகம் சார்ந்த உரையாடலாக அது விரிந்திருக்கிறது.
”எனக்கு சகா என்பது குரல் தான். வாழ்க்கை எல்லாரையும் போல் என்னையும் தூக்கிப்போட்டு ஆசை தீர மிதித்து காயங்களுடன் வாழக் கற்றுக்கொடுத்த நேரம் அது. ஒரு இடைவெளிக்குப் பிறகு திருச்சியில் வாசம் கொஞ்சநாட்கள். அப்போது அவரது டைரி நிகழ்ச்சி ரொம்ப பிரபலம். காயம்பட்ட மனதையெல்லாம் தன் வார்த்தைகளாலும் குரலாலும் தேற்றுவார்; அழ வைப்பார். நானும் அழுதிருக்கிறேன்; தேற்றியிருக்கிறார். அப்போது அவர் முகமோ ஆளோ பரிச்சயம் கிடையாது. குரல் மட்டும் தான். ” என்பதாக தனது அனுபவத்தை பகிர்கிறார் நாச்சியாள் சுகந்தி.
”எனது ஹாஸ்டலில் மொபைல் ஸ்ட்ரிக்ட்லி நாட் அலவுட். சின்னதாக ஒரு ரேடியோவை ரெடி செய்து ஏதாவது கேட்பதுண்டு. அப்படி அறிமுகமானது சகாவின் குரல். முதலில் குரல் வசீகரித்தது. பின்னர் கருத்து. தினமும் இரவு அந்த குரல் என்னை சிரிக்க வைத்தது, அழவைத்தது, உற்சாகப்படுத்தி உந்தித் தள்ளியது. அலெக்சாண்டர், பாரதி என ஆளுமைகள் பலரும் மிக இளம் வயதிலேயே மாண்டு போனார்கள் என வரலாற்றின் அறியாபக்கம் பேசும் அந்த குரல், மறுநாள் உனக்கு அழத் தோன்றினால் அழு. ஆண் அழக்கூடாதா? அழுவதற்கு ஆண் பெண் இலக்கணம் எல்லாம் அர்த்தமற்றது. காதல் தோல்வியா அழு. வாழ்க்கை தோல்வியா அழு. கடைசி சொட்டு கண்ணீர் வற்றும் வரை அழு. அதுவே அந்த வேதனைக்கான கடைசி அழுவையாக இருக்கட்டும். மீண்டும் அதற்காக, அதை நினைத்து ஒருபோதும் அழாதே என உளவியல் பாடம் நடத்தும். நிறைய புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தும்.” என்கிறார், பாரதி நேசன்.
“திருச்சி ஹாஸ்டலில் இருந்த அந்த இரவுகளும் சரி, உறையூர் ஆச்சி மேன்ஷனில் கழிந்த நினைவுகளும் சரி — என் தனிமையான இரவுகளுக்கு தோழனாக இருந்தது ஹலோ FM, சகா. தினமும் நீங்கள் சொல்லிய விதவிதமான கதைகள், என் மனசை மட்டும் அல்ல… என் உலகத்தையே மாற்றின. அந்தக் கதைகளுக்கு உயிர் கொடுத்தது உங்கள் குரல் தான்.” என்கிறார், சங்கர் முரளி குருமூர்த்தி.
”டைரியில் அவர் பகிரும் வாழ்க்கை கதை அதற்கு அவர் விடும் சின்ன சின்ன இடைவெளி, அடர்த்தியான குரல் திடீரென நிகழ்வுகளுக்கு ஏற்றார்போல வளைந்து நெளிவது என, நம்மை சகா மந்திரக்கட்டு போட்டு ஆட்டுவிப்பதில் அசகாய அசரீரி.” என சிலாகிக்கிறார், பாரதி நேசன்.
குரல் மட்டுமல்ல; அவரது கட்டுடலும் கம்பீரமானதுதான். “டைரி சகா எனும் மனிதரை முதன்முதலில் நேரில் கண்டபோது அவரது குரலைப் போன்றே, உருவமும் கவர்ந்து இழுத்தது. தலைமுடியை நன்கு வழித்து, மொட்டை கோலத்திலேயே இருப்பார். அடர்த்தியான மீசை அவரின் முகத்திற்கு கம்பீரமாக பொருந்தியிருக்கும்.” எனக்குறிப்பிடுகிறார், பத்திரிகையாளர் பாலசுப்பிரமணியம்.
பண்பலை பயணத்தில் 20 ஆண்டுகள் நிறைவு செய்து, காலத்தால் அழியா பண்பலை காவியமாகிப் போனார் ”டைரி வித் சகா”. வானொலி நாயகன் என்ற அடைமொழியாய் மட்டுமல்ல; திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றாகிப் போனவர்.
பண்பலை, திருச்சி என்ற வரம்போடு அல்லாமல் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள், அரசு விழாக்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அனுபவ உரையின் வழியே சமூக உரையாடலை அவர் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்.
”அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து விட்டோம். என்ன போட்டி வைப்பது? அடுத்த கேள்வி? தபு சங்கரை அறிமுகப்படுத்தியவருக்கு கவிதை போட்டி வைத்தால் என்ன? அதுவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. என்ன தலைப்பு? எனக்கு தோன்றிய ஒன்றை மாணவர்களுடன் பகிர்ந்தேன். அந்தத் தலைப்பு. டைரி சகா. உண்மையில் எங்களுடன் சேர்ந்து அவரும் ரசித்தார்.” என்பதாக குறிப்பிடுகிறார், சுபா சுடலைமுத்து.
மேலும், அந்த விழாவில், “நகையலங்காரம் செய்து கொள்ளும் தொகுப்பாளர்கள் பலரிருக்க சிகையலங்காரம் கூடத் தேவை இல்லை என்ற சிறந்த சிந்தனையாளரே” என்பதாக தான் அவரை வர்ணித்ததை புன்னகையோடு ரசித்தார் என்பதாக குறிப்பிடுகிறார் அவர்.
ஸ்வச் பாரத் இயக்கத்தின் திருச்சி மாவட்டத்திற்கான தூய்மை தூதுவராகவும்; TRY Foundation என்ற அமைப்பின் செயலாளராகவும் சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகள் மட்டுமல்ல; மியாவாக்கி முறையில் அடர்வன காடுகளை திருச்சி மாவட்டம் முழுக்க உருவாக்கியதில் இவரின் பங்கு அசாத்தியமானது.
இன்னும் சொல்லப்போனால், அவர் ஒரு ஆவணப்பட இயக்குநரும்கூட. மலைக்கோட்டை மாநகர மக்களின் மனக்கோட்டையில் நீங்கா இடம் பிடித்து நிலைத்திருக்கும் சாரதாஸ் என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஐயா தே.மணவாளன் அவர்களின் சரித்திர சாதனை பயணத்தை “சிகரம் தொட்ட பக்கங்கள்” என்ற ஆவணப்படத்தின் வழியே பதிவு செய்தவர் சகா. இதற்காக, இந்தியாவெங்கும் அவர் பல ஆயிரம் மைல்கள் பயணப்பட்டிருக்கிறார். அலைந்து திரிந்து அவ்வளவு மெனக்கெட்டு அந்த ஆவணப்படத்தை அவர் உருவாக்கியிருந்தார். சகா என்றுமே ஒரு சகாப்தம் தான் என்பதை அவரது பணிகளே பறைசாற்றும்.
பண்பலை பயணத்தில் 20 ஆண்டுகள் நிறைவு மற்றும், அவரின் 51-ஆவது பிறந்தநாள் விழாவாக, 2026 ஜனவரி-16 அன்று திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்ட விழாவை சகாவின் சகாக்கள் நடத்தியபோதுதான், அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது குரலைப்போலவே, போலீசு அதிகாரியைப்போலவே வனப்பும் மிடுக்கும் நிறைந்த அவரது உடல் மெலிந்து போயிருந்தது. கணையப் புற்றுநோயோடு அவர் கடுமையான போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த வேளை அது.
“இவ்வளவு மக்களையும் நான் சம்பாதித்து வைத்திருக்கிறேன் என்பதை அந்தத் தருணம் எனக்கு உணர்த்தியது. ‘சகா எனும் சகாப்தம்’ நிகழ்ச்சி என் வாழ்க்கையை முழுமை அடையச் செய்தது. இப்போது புற்றுநோயின் வேதனை அதிகமாக இருக்கிறது; என் வாழ்வு நிறைவு பெற்றுவிட்டது, இறைவன் என்னை விரைவில் அழைத்துக்கொள்ள வேண்டும்” என்பதாக, தன்னிடம் நெகிழ்வாய் உரையாடியதை இறுதிநிகழ்வில் நினைவு கூர்ந்தார் கலைக்காவேரி ஆசிரியர் மனோ.
மேலும், “இந்த உலகத்திலேயே, நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன், இன்னும் சில மாதங்களில் மரணிக்கப் போகிறேன் என்று தெரிந்தும், அனைவரையும் அழைத்து ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி, விருந்தளித்துத் தன் வாழ்க்கையைக் கொண்டாடிய ஒரு நபர் சகா மட்டும்தான்.” என்றவர், ”ஒருவர் மறைந்த பிறகு அவருக்கு நினைவேந்தல் நடத்துவதை விட, நாம் நேசிக்கும் ஒருவர் வாழும்போதே அவர் வாழ்ந்த விதத்தைக் கொண்டாடிவிடுங்கள்.” என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார் மனோ.
”அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் நேரில் கண்டேன். உடல் மெலிந்து சற்றே உருமாறியிருந்தார். அருகில் சென்று நலம் விசாரித்து விடைபெறும் முன் கையைப்பிடித்து, ஊடகத்துறையில் இருக்கிறீர்கள். சற்று உடல் நலனைக் கவனியுங்கள் என்றார். அவர் சொல்ல வந்த செய்தியை உணர்ந்தவனாக விடைபெற்று வந்தேன்.” என்கிறார், பத்திரிகையாளர் பாலசுப்பிரமணியம். இதையே, ”உடல் நலம் பேணுங்கள் என்பதுதான் சகா சொன்ன செய்தி என புரிந்துகொள்கிறேன்.” எனக்குறிப்பிடுகிறார், நாச்சியாள் சுகந்தி.
அவரது கட்டுடல் புற்றுநோய்க்கு இரையாகியிருக்கலாம். அவரது காந்த குரல் காலத்தால் அழியாதது.
’என்னோட குரலுக்கும் உங்களோட செவிகளுக்கும் இருக்கமான பந்தம் இருக்குனு நம்புறேன்” சாகும் தருவாயில் இறுதியாய் சகா உதிர்த்த வார்த்தை இது. ஆம். உண்மைதான். கம்பீரம் நிறைந்த அந்த காந்தக் குரல் அவ்வளவு எளிதாய் காற்றில் கரைந்துவிடுமா, என்ன? காதுகளை எப்போதும்போலவே, அகல திறந்தே வைத்திருக்கிறேன். எங்கோ காற்றில் மிதந்து கொண்டிருக்கும் அன்பு நண்பன் சகாவின் ”சாகா குரல்” என் காதுகளை என்றேனும் ஒருநாள் தழுவிச் செல்லாமலா போய்விடும்?
— இளங்கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.