ஆட்சி மாற்றம் : நித்தியக் கண்டம், பூரண ஆயுசு !

திறந்த மடல் –18

அன்புள்ள தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களுக்கு, வணக்கம்.

17-ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான ஜனநாயகத் தேர்தல் திருவிழா, தமிழகமே எதிர்பாராத அதிரடி மாற்றங்களுடன் மே-4 அன்று முடிவுக்கு வந்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் – 108 இடங்களையும்; திராவிட முன்னேற்றக் கழகம் – 73 இடங்களையும்; அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – 53 இடங்களையும் பெற்று எந்த ஒருகட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை என்ற நிலையை எட்டியிருக்கிறது.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த திமுக – அதிமுக என்னும் இருதுருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறீர்கள். ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தைத் எதிர்க்கட்சியாக ஆக்கி வைத்துள்ளீர்கள். எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவை மூன்றாமிடத்திற்கு இறக்கி வைத்துள்ளீர்கள்.

கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள 233+1 (சுயேட்சை ஆதரவு-1) தொகுதியிலும் போட்டியிட்டு; தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 35% வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.  118 என்ற அறுதிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனாலும் தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற வரலாற்றில், கடந்த1952 – க்குப் பிறகு ஏறத்தாழ 74 ஆண்டுகளுக்குப்பிறகு, தொங்கு சட்டமன்றம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக, தவெக ஆட்சி அமைக்கத் தேவையான 12 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்க்கட்சிகளிடம் பெறவேண்டிய சூழலையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். இது தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய அத்தியாம்.

இது எந்த வகையிலும், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கப்போவதில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ள தவெகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும். பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர் தேர்தல்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்படும். முதல்வர் பொறுப்பேற்கும் தவெக தலைவர் விஜய் அவர்கள் முன்மொழியும் “நம்பிக்கை கோரும் தீர்மானம்” வெற்றி பெற்று ஆட்சி தொடரவே தற்போதைய சூழலில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதல் ஆளாக காங்கிரசு கட்சி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில் இது சாத்தியமானதுதான்.

அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் பிற கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி நடத்தும்போது, தான் நினைத்தபடி ஆட்சி செய்யமுடியாமல், கூட்டணிக் கட்சிகளின் கருத்தினையும் அறிந்து ஆட்சி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் விஜய் நடத்தும் ஆட்சி என்பது “நித்தியக் கண்டம், பூரண ஆயுசு” என்ற நிலையில்தான் இருக்கும். திமுக வலிமையான எதிர்க்கட்சியாக அமர்ந்து, விஜய் ஆட்சியின் குறைபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும். கட்சிக் கட்டமைப்பு உள்ள அதிமுகவும் விஜய் ஆட்சியில் மக்களுக்கு எதிரான நலத்திட்டங்களை நிறைவேற்றப்படவில்லை என்றால் குரல் கொடுக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று குழப்பமான தீர்ப்பை வாக்காளப் பெருமக்கள் வழங்கியுள்ளமையைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஜனநாயகத்தின் மாண்பு காக்க அனைவரும் இணைந்து நிற்போம்!

—    ஆதவன்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.