டெல்லி சம்பவத்திற்கு எதிரொலி! திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டத்தால் பரபரப்பு!
நீட்தேர்வு முறைகேடு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நீட்தேர்வை விளக்க கோரியும் டெல்லியில் சிஜேபினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் கடந்த 25நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட சில அமைப்புகள் சேர்ந்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் நடைபெறும் மாணவர், இளைஞர்கள் போராட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் ஆதரவு இயக்கம் நடத்த வர்க்க வெகுஜன அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் காவல் நிலைய முன்பு தொடங்கிய போராட்டத்திற்காக தெற்கு காவல் துணைஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ரயில் நிலையம் ரயில்வே தண்டவாளம் செல்லும் பாதைகளில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன.
மேலும் ரயில் நிலையம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை தகர்த்துவிட்டு ரயில்வே தண்டவாளம் நோக்கி வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் வைத்து போலீசார் தடுத்தனர்.
பின்னர் பாலக்காட்டில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறி வந்த மாணவர்கள் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தண்டவாளத்தில் படுத்திருந்த ஒவ்வொருவராக குண்டுகட்டாக தூக்கி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதில் மாணவர்கள் சட்டை கிழிந்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பத்து நிமிடப்போராட்டத்திற்குப்பிறகு ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வெளியேற்றியதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு திருச்செந்தூர் ரயில் புறப்பட்டது. தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24மாணவர்கள் 12மாணவிகள் 8மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் திருப்பரங்குன்றம் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 65க்கும் மேற்பட்டோர் கைது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.