திருச்சி மலைக்கோட்டை மின்தூக்கி திட்டத்தை விரைவுபடுத்த அன்பில் மகேஸ் வலியுறுத்தல்!
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மின்தூக்கி ( லிப்ட்) அமைக்க அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024–2025 நிதியாண்டில் இத்திட்டம் முன்மொழியப்பட்டு, 08.01.2025 அன்று நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. தொல்லியல் மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. 17 மீட்டர் தொலைவில் உள்ள இடத்திலிருந்து, கோட்டைப் பகுதிவரை 149 மீட்டர் நீள இணைப்பு வசதியுடன் மின்தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொல்லியல் சின்னங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருச்சி மலைக்கோட்டை திருக்கோவில், 273 அடி உயரமும் 417 படிக்கட்டுகளும் கொண்ட, திருச்சி மாநகரின் அடையாளமாகவும் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். ஆனால், 417 படிக்கட்டுகளை ஏறுவது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் தொல்லியல் துறையிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் பெறப்பட்டு, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்தி, மின்தூக்கி அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது







Comments are closed, but trackbacks and pingbacks are open.