கணவரை கொன்ற தவெக மகளிர் அணி நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்கா நகரில் வசித்து வந்தவர் புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ்(43) பிரபல ரவுடியான இவர் பைனான்ஸ் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் செய்து வந்தார். இவரது மனைவி பாரதி (36) இவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிர் அணி இணை அமைப்பாளராக இருந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 23ம் தேதி திடீரென வீட்டில் சுரேஷ் இறந்தார். முதலில் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்ததாக அவரது மனைவி பாரதி அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனையில் சுரேஷ் கழுத்தில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடந்த விசாரணையில் அவரது மனைவி பாரதி கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் நேரடியாக கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கொலைக்கு சமம் அல்லாத மரணத்தை விளைவிக்கும் பிரிவின் கீழ் அதாவது பிஎன்எஸ் 105ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது பதிவாகியுள்ள பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என போலீசார் கூறியுள்ளனர். சுரேஷ் ஆபாச படங்களை காட்டி தன்னை துன்புறுத்தியதால் தன்னைக்காப்பாற்றி கொள்ளும் வகையில் கழுத்தை செல்போன் சார்ஜர் ஒயரால் இறக்கியதில் அவர் இறந்தார் என பாரதியின் வாக்குமூல அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், இந்த கொலை வழக்கில் பாரதிக்கு மேலும் சிலர் உதவியதாக சுரேசின் உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்பட்டுள்ளன. இன்வெர்ட்டர் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இது தெரியவந்தது. நள்ளிரவில் வந்து கணவர் டார்ச்சர் செய்தார். இதனால் கொன்றேன் என பாரதி கூறுவது நம்பும்படியாக இல்லை.
கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்பட்டுள்ளன. இன்வெர்ட்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கும் என சுரேசின் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் வழக்கை மேல் விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். இந்த நிலையில் தற்போது பாரதி தவெகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.