எனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்கள் !
5 வருடங்கள் முன்பு, இதே மே மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை மாநில திட்டக் குழுவின் உறுப்பினராக நியமித்தார்கள். எந்த வித பின்புலமும் இல்லாத என்னை எப்படி தேர்ந்தெடுத்தார் என்று எனக்கு தெரியாது. ஒரு வித மலைப்பு தான் எனக்கு ஏற்பட்டது. எப்படி இந்த பொறுப்பை செய்வேன் என்ற ஒரு தயக்கம், அச்சம் இருந்தது தான் உண்மை. அப்போதே நான் “இந்த சிறிய குருவி தலையில் இவ்வளவு பெரிய மலையையே முதல்வர் கொடுக்கிறார். என்னால் முடிந்த அளவு இதை சிறப்பாக செய்வேன் ” என்று உறுதி எடுத்தேன்.
முதல் கூட்டத்திலேயே முதல்வர் “எனக்காக, என்னை மகிழ்விக்கும் நோக்கத்தோடு எதையும் செய்ய வேண்டாம் திட்டங்களை ஆய்வு செய்யும் போது நிறை குறைகளை உள்ளபடியே நீங்கள் சொன்னால் தான் நாங்கள் திட்டங்களை இன்னும் செழுமைப்படுத்த முடியும் ” என உறுதி பட கூறினார். துணைத் தலைவர் பேரா. ஜெயரஞ்சன் அவர்களும் இதில் உறுதியாக இருந்தார்.
திட்டக்குழு ஆட்சியின் முக்கிய நல திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தாலும் நான் மருத்துவம், சத்துணவு, பள்ளிக் கல்வி, சாலை விபத்து போன்ற எனக்கு பரிச்சயமான துறைகளில் தான் அதிக கவனம் செலுத்தினேன். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் குறிப்பாக மிகவும் பின்தங்கிய இடங்களில் அதிக கவனம் செலுத்தினோம். மீண்டும் மீண்டும் சென்று கள ஆய்வு செய்து அறிக்கைகள் தயாரித்தோம். என் மனதுக்கு நிறைவு கொடுத்தது சுகாதாரம் குறித்த கொள்கை வரைவு. இது இந்தியாவின் தலை சிறந்த மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்க பட்டது. அதே போல் சமுக நாய்கள் பற்றிய கொள்கை வரைவு, பள்ளி சிறுவர்கள் வளர்ச்சி பற்றிய ஆய்வு, காலை சிற்றுண்டியால் வரும் பலன்கள், மக்களை தேடி மருத்துவம், மருத்துவ மனைகளின் பயன்பாடு, anti microbial resistance போன்ற பல துறைகளை விரிவாக ஆய்வு செய்து அறிக்கைகள் தயாரித்தோம். ஒவ்வொரு அறிக்கையும் பல விவாதங்களுக்கு பின்பு கவனமாக தயாரிக்க பட்டது. பல திட்டங்கள் தொடங்கும் முன்பு விரிவான ஆய்வு செய்து தான் தொடங்கப்பட்டன. அதன் பின்பும் அவற்றால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் விரிவாக ஆய்வு செய்தோம். அவை ஒவ்வொன்றையும் துணை தலைவர் பேரா. ஜெயஞ்சன் முழுவதும் படித்து தேவைப்பட்ட திருத்தங்கள் செய்து, ஆய்வில் நாங்கள் கண்ட நன்மைகளையும் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளையும் முழுவதும் விவரித்து மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும், தயார் செய்தோம். ஒவ்வொரு அறிக்கையும் எனக்கு ஒரு புதிய அனுபவம் மற்றும் படிப்பினை. 5 வருடங்களும் ஒரு குழுவாக அனவரும் மகிழ்வுடனும் அர்ப்பணிப்புடனுடம் பணி புரிந்தோம். துணை தலைவருடன் அறிக்கைகளை விவாதிப்பது ஒரு சுகமான அனுபவம். எல்லா அறிக்கைகளையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கும் போது அவரும் பல கேள்விகள் கேட்பார். அதையெல்லாம் விளக்குவது இனிய அனுபவம்.

புதிய அரசு பதவியேற்கும் போது எங்கள் பணியும் நிறைவுறுகிறது. மிகுந்த மனநிறைவுடன் விடை பெறுகிறேன். இந்த அரிய அனுபவம் எனக்கு கிட்ட காரணமாக இருந்த முதல்வர், துணை முதல்வர், துணைத்தலைவர் பேரா. ஜெயரஞ்சன், சக உறுப்பினர் அனைவருக்கும் மனம் நிறைந்ந நன்றி. என்னுடன் பணிபுரிந்த திட்டக்குழு அலுவலர்களுக்கு மிகுந்த நன்றி. அவர்கள் அனைவரும் ஆய்வில் தேர்ந்தவர்கள். சிறப்பாக பணி புரிந்தார்கள். ஆதரவு கொடுத்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் நன்றி. மாணவ பருவத்தில் 5 வருடம் மருத்துவம் படித்தேன். இப்போது 5 வருடம் களத்தில் சமூக மருத்துவம் படித்தேன். இரண்டும் எனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்கள்.
புதிதாக பதவியேற்கும் மாண்புமிகு முதல்வருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்க எனது வாழ்த்துக்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
— அமலோற்பவநாதன் ஜோசப்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.