கலைமகள் சபா அவசர அழைப்பு ஜூன் 13 திருச்சியில் கூட்டம் !
கலைமகள் சபா விவகாரத்தில் நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் கருத்துகளை கேட்கும் இடத்திற்கு நிர்வாகம் வந்திருக்கிறது. இது தொடர்பாக, ஜூன்-07 அன்று வெளியாகியுள்ள அறிவிப்பில், “கலைமகள் சபாவின் சொத்துக்களை விற்பனை செய்து உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்க மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
மேற்படி உத்தரவினை செயல்படுத்தும் பொருட்டு ஏற்படும் சில நிர்வாக மற்றும் நடைமுறை சிரமங்களை மனதில் கொண்டு நீதிமன்றத்தின் மேலும் வழிகாட்டுதல்களை பெற வேண்டி உறுப்பினர்களின் கருத்துகளை பெற பொதுக்கூட்டம் வருகின்ற 13.06.2026 அன்று காலை 10.30 மணியளவில் திருச்சி “ஜமால் முகமது கல்லூரி, என்.பி. அப்துல் கஃபூர் ஏ.சி. ஆடிட்டோரியம், காஜாமலை, திருச்சி – 620020” (டி.வி.எஸ். டோல்கேட்) என்ற இடத்தில் நடைபெறும்.
உறுப்பினர்களின் உரிமை குறித்த பிரச்சினைகள் கூட்டத்தின் மையப்பொருளாக இருக்கும்.
கலைமகள் சபாவின் உறுப்பினர்களின் முதலீடு மற்றும் பங்கீடு பற்றிய முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்வது ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவசியம் என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த கூட்டத்தில் ஆலோசித்த விஷயங்கள் அனைத்தையும் கலந்து கொண்டவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளவும்.” என்பதாக கலைமகள் சபாவின் தனி அலுவலர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
கலைமகள் சபாவுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை 33 மாவட்டங்களிலும், தமிழகம் தவிர்த்து கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 3 ஆயிரத்து 88 சொத்துக்கள் உள்ளன. சுமார் 13500 ஏக்கர் அளவுக்கு இந்த சொத்துக்கள் உள்ளன. இதுவரை சுமார் 6 இலட்சம் பேர் உறுப்பினர்களாக அடையாளம் கண்டறியபட்டிருக்கிறார்கள்.
தற்போது எங்கும் 1 ஏக்கர் நிலத்தை 15 இலட்சத்துக்கு குறைவாக வாங்க முடியாது. ஆனால், கலைமகள் சபாவின் சொத்துக்கள் எல்லாம் தேசிய மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில்தான் அமைந்திருக்கிறது. எப்படி பார்த்தாலும் ஒரு சதுர அடி 1000 முதல் 5000 வரையில் விலை போகக்கூடியவை. இதன்படி கணக்கிட்டால், எப்படியும் 44 ஆயிரம் கோடிக்கு மேல் வரும் என்கிறார்கள்.
இந்த பின்னணியில்தான், கலைமகள் சபாவின் சொத்துக்களை விற்று பணமாக பிரித்துக் கொடுக்கும் முடிவுக்கு அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கட்டிய பணத்தை திரும்ப பெறுவதற்கா, இத்தனை ஆண்டு காலம் காத்திருந்தோம் என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள். யாரோ ஒரு சிலர் தொடுத்த வழக்கில் நீதிமன்றமும் கலைமகள் சபாவின் நிர்வாக அதிகாரிகளுமாக தன்னிச்சையாக முடிவெடுப்பதா? கலைமகள் சபாவின் சொத்துக்களின் உண்மையான உரிமைதாரர்களான எங்களின் கருத்துகளை அறியாமலேயே எப்படி நீதிமன்றம் பொது ஏல நடைமுறைக்கு செல்லலாம்? என்பதாக பரவலாக எதிர்ப்பு கிளம்பியதையடுத்தே, இப்படி ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகால ஆதங்கங்களை நேரில் அதிகாரிகளின் நேரடி கவனத்திற்கு தெரியப்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பாகவே இந்த பொதுக்கூட்ட அறிவிப்பை பார்க்கிறார்கள்.
மேலதிக விவரங்களுக்கு : கலைமகள் சபா உதவி எண்கள் : +91-9944098582 / +91-9944098572
கலைமகள் சபா அவசர அழைப்பு ஜூன் 13 திருச்சியில் கூட்டம் !
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.