தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.
“சமீபத்தில் நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மட்டுமின்றி, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய “இரண்டு தனியார் நபர்கள்” பங்கேற்றதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை (ஜூலை 4, 2026) அன்று சென்னையில் உள்ள லோக்பவனில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார்.
இந்து நாளிதழ் (இணையத்தில் ஜூலை 04, 2026 02:49 pm IST – சென்னை) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படாமல் வழக்கம்போல் மௌனம் காக்கப்படுகின்றது. அரசு வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். அந்த விருப்பத்தை நிறைவேற்ற ஜோசப் விஜய் அரசு முன்வர வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
உங்களின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் உங்களின் தனிச் செயலாளராக ‘ஜெகதீஷ் பழனிசாமி’ நியமிக்கப்பட்டார். அத்துடன், முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டார். ஜோதிடர் நியமனம் குறித்த அரசாணை வெளிவந்தவுடன் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக, உங்களின் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தின்போது கடந்த மே 13 ஆம் தேதி விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ஜோதிடர் நியமனம் இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஜெகதீஷ் நியமனம் குறித்த அரசாணையை ஜெகதீஷ் தன் பிறந்தநாளையொட்டி வெளியிடவே மக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. உங்களின் நியமனங்களுக்கு ஊதியம் அரசின் சார்பில்தான் வழங்கப்படுகின்றது. அஃது அனைத்தும் மக்கள் செலுத்தும் வரிப்பணம் என்பதை முதல்வர் அவர்களே… வசதியாக மறந்துவீட்டீர்களா?
அடுத்து உங்களின் சிறப்பு ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய 2 பேரை நியமனம் செய்துள்ளீர்கள். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று தவெகவின் செய்தி தொடர்பாளர் ஜவகர் அலி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன் இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என்று ஊடகங்களில் தெரிவித்துள்ளார். உங்களின் நண்பர்களுக்கு நீங்கள் வழங்கிய இந்த பதவிகளுக்கும் மக்கள் வரி பணத்திலிருந்துதான் இலட்சக்கணக்கில் ஊதியம் வழங்கப்படுகின்றது. அரசாணை வெளியிடாமல் இவர்கள் நியமனம் எப்படி நடைபெற்றது? என்பதை நீங்களே அல்லது அரசோ விரிவான விளக்கத்தை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
முதல்வர் அவர்களே… உங்களின் இரகசிய காப்பு பிரமாணத்தின்போது “தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகிய ………. ஆகிய நான், எனது கவனத்திற்கு கொண்டு வரப்படும் அல்லது எனக்குத் தெரியவரும் எந்தவொரு விஷயத்தையும், மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கடமைகளைச் சரியாக நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தவிர, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபருக்கும் அல்லது நபர்களுக்கும் தெரிவிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டேன் என உளமாற உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி எடுத்துள்ளீர்கள்.
இதன்படி அரசின் இரகசியங்களை யாருக்கும் வெளிப்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளீர்கள். அரசின் இரகசியங்கள் அடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் உங்களின் ஆலோசகர்கள் ஜான்ஆரோக்கியசாமியும், விஷ்ணுரெட்டியும் எப்படி கலந்துகொள்ள முடியும்? இது அரசியல் சாசனத்தை மீறிய செயல் அல்லவா? அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் அல்லாத வெளியாட்கள் கலந்துகொள்வது என்பது இதுவரை எந்த மாநிலத்திலும் இந்த அரசியல் சாசன மீறல் நடந்து இல்லை. இது தவறான, மோசமான முன்னுதாரணம்.

இந்த தவறான முன்னுதாரணத்தைச் சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் ஆளுநரிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். ஆளுநர் இந்தப் புகாரை முறையாக ஆய்வு செய்து, அரசியல் சாசன மீறல் நடந்துள்ளது என்பதை உறுதி செய்தால், உங்கள் ஆட்சியைக் கலைக்க ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்வார்.
அப்படி ஆட்சி கலைக்கப்பட்டால், திமுகவும் பாஜகவும் கூட்டணி சேர்ந்து “என்னுடைய ஆட்சியைக் கலைத்துவிட்டார்கள்” என ஒப்பாரி வைத்து மீண்டும் ஆட்சிக்கு வர மறைமுக திட்டங்கள் உள்ளனவோ என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத இருவர் கலந்து கொண்டது என்பது அப்பட்டமான அரசியல் சாசன மீறல்…. இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே பதவி விலகுங்கள். அதுதான் நீங்கள் எடுக்கும் சரியான முடிவாக இருக்கும்.
— ஆதவன்.











Comments are closed, but trackbacks and pingbacks are open.