பூமியின் எதிர்காலத்துக்குச் சிறார் இலக்கியம் அவசியம் !
சிறார் இலக்கியம் - ஆசிரியா் அறிமுகம் -5
2023 – ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் உதயசங்கர்.
தங்களைக் குறித்து கூறுங்கள்?
1960-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்தேன். அப்பா ச.கார்மேகம் மில் தொழிலாளி, அம்மா கா.கமலம் அந்தக் காலத்து நான்காவது பாரம் வரை கல்வி கற்றவர். அவர் தான் என்னுடைய வாசிப்பிற்கு ஆதாரமாக இருந்தவர். என்னுடைய முதல் ஆசான் என்னுடைய அம்மா கமலம் தான். அனறு அவர் வாங்கி வாசித்த பத்திரிகைகள் தான் எனக்குள் பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பைத் தூண்டியது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தேன். சுமாராகப் படிக்கும் மாணவன். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது நூலகவகுப்பில் பள்ளிநூலகத்துக்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வாசிக்கும் பழக்கம் உருவானது. என்னுடைய தமிழாசிரியர் குருசாமி ஐயா அவர்களின் வகுப்புகள் என்னை நாத்திகனாகவும் சாதி மறுப்பாளனாகவும் மாற்றியது.
பிறகு எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலிருந்த பொதுநூலகம் சென்று 70-களில் வெளிவந்து கொண்டிருந்த ஏராளமான சிறார் பத்திரிகைகள், சிறார் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. என்னுடைய நண்பர்களின் வீடுகளில் பத்திரிகை, புத்தகங்கள் வாங்கி வாசிப்பவர்களாக இருந்தார்கள். அந்த நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வாசிப்பின் மீதான தீவிரமான ஈடுபாட்டை ஏற்படுத்தியது.
கல்லூரியில் சேர்ந்த போது கல்லூரி நூலகத்தில் வானம்பாடிக்கவிஞர்களான சிற்பி, அபி, புவியரசு, அக்னிபுத்திரன், கங்கை கொண்டான் போன்றோரின் கவிதை நூல்களை நூல்களை வாசித்து கவிதைகளெழுதத் தொடங்கினேன். நாங்கள் நண்பர்கள் சேர்ந்து கையெழுத்துப்பத்திரிகை நட த்தினோம். அதில் என்னுடைய கவிதைகளை வாசித்து விட்டு கோவில்பட்டியில் இருந்த எழுத்தாளர்கள் தேவதச்சன், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், சுவடி, பால்வண்ணம் போன்றோர் எங்களை அழைத்து நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தினர். அதன்வழியே திரைக்கலைஞர் சார்லியின் தலைமையில் தர்ஷனா என்ற வீதி நாடகக்குழுவை உருவாக்கி கோவில்பட்டியைச் சுற்றிலும் கிராமங்களில் நாடகங்கள் போட்டோம்.
தொடர்ந்த வாசிப்புக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர். ச.தமிழ்ச்செல்வனும் எழுத்தாளர்.கோணங்கியும் துணையாக இருந்தார்கள். சகோதரர்களான அவர்களுடைய வீட்டிலுள்ள நூலகத்திலிருந்து சமகால இலக்கியத்தையும் செவ்வியல் இலக்கியத்தையும் வாசித்தேன். கோவில்பட்டியில் அப்போது இட துசாரி இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலம். அந்த இயக்கங்களிலிருந்த தோழர்களான பாலு, தேவப்பிரகாஷ், இசக்கிமுத்து, மோகன்தாஸ், எனக்கு மார்க்சீயத் தத்துவத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த சோவியத் நாவல்களும், அரசியல், தத்துவ நூல்களும், என்னுடைய சிந்தனையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியது. அப்போது வாசித்த வாசிப்பும் உரையாடல்களும் தான் நான் எழுதுவதற்கானத் தூண்டுதலாக இருந்தது.
அந்தக் காலத்திலேயே கோவில்பட்டி தமிழிலக்கியத்தில் மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்ற முன்னோடிகளின் வழித்தடத்தில் கொவில்பட்டி எழுத்தாளர்கள் எந்த த் தடங்கலுமின்றி நடந்தோம். இன்றுவரை எழுத்தாளர்களின் தலைநகரமாகக் கோவில்பட்டி இருக்கிறது. அதனை நிரூபிக்கும்விதமாக கோவில்பட்டி எழுத்தாளர்கள் எட்டுபேர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார்கள். சாகித்ய அகாதமியின் அத்தனை வகைமையிலும் விருது பெற்றிருக்கிறார்கள். எனக்கும் 2023-ஆம் ஆண்டு ஆதனின்பொம்மை என்ற நூலுக்காக பாலசாகித்ய புரஸ்கார் விருது கிடைத்தது. இந்தியாவில் இப்படி ஒரு ஊர் இருக்குமா என்பது சந்தேகம் தான். என் ஊர் என் பெருமை.
தங்களின் கல்வி மற்றும் பணியைக் குறித்து கூறுங்கள்?
கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பை 1980-ஆம் முடித்தேன். மேற்கொண்டு படிக்க வசதியில்லாத தால் போட்டித் தேர்வுகள் எழுதவும் அவ்வப்போது பேப்பர் போடுவது, தீப்பெட்டிக்கட்டை, பெட்டிகள் ஒட்டுவது, அன்றைன்றைய கூலியாக தாலுகா ஆபீஸ், பொதுப்பணித்துறை, தொலைபேசித்துறை இப்படி அவ்வப்போது கிடைத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 1985-ஆம் ஆண்டு தெற்குரயில்வேயில் நிலைய உதவி அதிகாரியாகப் பணிநியமனம் பெற்றேன். 2018 ஆம் ஆண்டுவரை பணி செய்து விருப்பஓய்வுபெற்று முழுநேரஎழுத்தாளராக இருக்கிறேன்.

சிறார் இலக்கியத்தை தாங்கள் தேர்வு செய்ததற்கான காரணம்?
பொதுவாக ஒரு எழுத்தாளன் இலக்கியத்தின் வகைமைகளான நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறார் இலக்கியம் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவனாக இருக்கவேண்டும். அவற்றில் சில வகைமைகளில் அவன் சாதனையாளனாக மாறலாம். ஆரம்பம் முதலே அதாவது 1970-கள் தொடங்கி சிறார் இலக்கியத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். இயல்பாகவே தீப்பெட்டித்தொழில் செய்யும்போது கூட்டமாகத் தெருவில் அமர்ந்து வேலை பார்ப்பார்கள். அப்போது கதைகள் தான் வேலையின் வெம்மையைத் தணிக்கும் மாமருந்தாக இருக்கும். அக்காக்கள், அத்தைகள் மதினிகள், சித்திகள், பெரியம்மாக்கள், என்று முறைவைத்து அழைத்த அத்தனை பெண்களும் மிகச்சிறந்த கதை சொல்லிகளாக இருந்தார்கள். கதைகள் சொல்லப்படும்வரை வேலை வேகவேகமாக ஓடும். அப்படி நான் கேட்ட சினிமாக்கதைகள், ராஜாராணிக்கதைகள், மந்திரவாதிக்கதைகள், பேய்பிசாசு, ரத்தக்காட்டேரி, முனிக்கதைகள், எல்லாம் எனக்குள்ளும் கதை சொல்லும் பேராவலைத் தூண்டிவிட்டது. நானும் நண்பர்களுக்கு, நண்பிகளுக்குக் கதை சொல்வது, எட்டாவது வகுப்பு படிக்கும்போதே தெருவில் நாடகம் போடுவது என்று ஆரம்பித்து விட்டேன்.
பிறகு இலக்கிய உலகில் நுழைந்து கவிதை, சிறுகதை, குறுநாவல் என்று எழுதிக் கொண்டிருக்கும் காலத்தில் தான் சிறார் இலக்கியம் பற்றிய கவனம் குவிந்தது. அப்போது வெளிவந்து கொண்டிருந்த சிறார் இலக்கியப்படைப்புகள் காலத்தை, காலமாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லையென்ற அதிருப்தி இருந்தது. எனக்குக் குழந்தைகள் பிறந்தபோது சிறார் பாடல்களை எழுதத் தொடங்கினேன். கேளுபாப்பா கேளு என்ற சிறிய பாடல்புத்தகம் 2 ரூபாய் விலையில் வெளியிட்டேன். பிறகு கதைகள் எழுதினேன். நாவல்கள் எழுதினேன்.
இருக்கும் இலக்கிய வகைமைகளில் சிறார்களுக்கு எழுதுவது தான் மிகவும் கடினமானதென இன்றும் நம்புகிறேன். உயர்ந்த பட்ச பொறுப்புணர்வும், அக்கறையும் தேவைப்படும் துறையாகச் சிறார் இலக்கியத்துறையை நினைக்கிறேன். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களனைவருமே குழந்தைகளுக்காக எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் நானும் கிட்டத்தட்ட 175 சிறார் நூல்களை எழுதியிருக்கிறேன் என்பதை இப்போது நினைத்துப்பார்க்கும்போது ஆச்சரியாமாகத் தானிருக்கிறது.
தங்களின் குடும்பம் குறித்து கூறுங்கள்?
1987-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடந்தது. என்னுடைய இணையர்.சே.மல்லிகா, இரண்டு பெண்குழந்தைகள் உ.நவீனா எம்.டி. ஹோமியோபதி, உ.துரகா பி.ஹெச்.எம்.எஸ். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்ட து. இரண்டு பேரக்குழந்தைகள். என்னுடைய குடும்பத்தினரின் ஆதரவின்றி நான் இவ்வளவு புத்தகங்களை எழுதியிருக்க முடியாது. அவர்களுடைய பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு ஆகியவையே இன்றுவரை என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
தற்கால சிறார் இலக்கியம் குறித்து தங்களின் கருத்து?
அழ.வள்ளியப்பா மறைவுக்குப் பின்னர் பல வருடங்கள் சிறார் இலக்கியம் உறங்கிக் கொண்டிருந்தது. கூறியது கூறலாகவே படைப்புகள் அட்டைகளை மாற்றி, தலைப்புகளை மாற்றி நூலக ஆணைகளை மட்டுமே இலக்காகக் கொண்டு நூல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. தமிழ்வழிக்கல்வி குறைந்து ஆங்கிலவழிக்கல்வியை நோக்கி அரசாங்கமும் மக்களும் திசை திரும்பினார்கள். கல்வி தனியார் மயம் என்ற பாதாளத்தை நோக்கி பாய்ந்து சென்றது. அதனுடைய பிரதிபலிப்பினால் தமிழ்ச்சிறார் இலக்கியத்திலும் புதிய படைப்பாளிகளோ, புதிய போக்குகளோ உருவாகவில்லை. 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் புதிய எழுத்தாளர்களும் புதிய படைப்புகளும் உருவாயின. குறிப்பாகக் கொரானா காலகட்டத்தில் அலையலையாக சிறார் இலக்கியப் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. அதற்கு அப்போது குழந்தைகளிடன் எந்தெந்த வழிகளிலெல்லாம் கதைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கமுடியுமோ அந்த ந்த வழிகளில் புதிதாக உருவான சிறார் கதை சொல்லிகள் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.
தற்சமயம் ஓரளவுக்கு நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியம் கவனம் பெறத் தொடங்கிவிட்டது. ஏராளமான புதிய படைப்பாளிகள் உருவாகிக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகள் படைப்பாளிகளாகியிருக்கிறார்கள். ஏராளமான பெண் படைப்பாளிகள் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதிப்பகங்கள் சிறார் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றன. சிறார் இலக்கிய விருதுகள் அதிகமாகியிருக்கின்றன. சிறார் இலக்கியம் குறித்த உரையாடல்கள் இலக்கியக்கூடுகைகளில் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. இவையெல்லாம் ஆரோக்கியமான திசையில் சிறார் இலக்கியம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதின் அறிகுறிகளாகப் பார்க்கிறேன்.
தங்களின் சிறார் இலக்கிய பங்களிப்பு குறித்தும், தங்கள் சிறார் இலக்கியப் படைப்புகளின் சிறப்புகள் குறித்தும் கூறுங்கள்?
என்னுடைய படைப்புகளைக் குறித்து நானே சொல்வது முறையாக இருக்காது. என்றாலும் நம்முடைய சமூகத்தில் ஒரு எழுத்தாளரின் அத்தனை படைப்புகளையும் வாசிப்பவர்களோ, அந்த எழுத்தாளரைப் பின் தொடர்பவகளோ மிகவும் குறைவு. அதிலும் சிறார் எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் இருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளைக் குழந்தைகளுக்குப் பெரியவர்கள் தான் வாங்கித் தரவேண்டும் என்கிறபோது நம்முடைய படைப்புகளைக் குறித்து நாமே சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்படுகிறோம்.
சிறார் இலக்கியத்தின் பல வகைமைகளான பாடல், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள்,, மொழிபெயர்ப்பு எனப் படைப்புகளை எழுதியுள்ளேன். அனைத்தும் சேர்த்து சுமார் 184 புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன். 36 சிறுகதை நூல்களும், 4 குழந்தைகள் நாவலும், 10 இளையோர் நாவலும், 2 பாடல் நூல்களும், 1 கட்டுரை நூலும் 56 படக்கதை நூல்களும், மலையாளத்திலிருந்து 61 நூல்களும், ஆங்கிலத்திலிருந்து 14 நூல்களும் இதுவரை வெளியாகியிருக்கின்றன.
சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கான படக்கதைப்புத்தகங்கள் தொடங்கி, பதின்பருவச் சிறார்களுக்கான நாவல்கள் வரை அனைத்து வயதுக்குழந்தைகளுக்கும் எழுதியிருக்கிறேன். 300 க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியிருந்தாலும் எந்தக் கதையிலும் கடவுள், முனிவர், மந்திரவாதி, பேய்,பிசாசு, வரம், சாபம், மூடநம்பிக்கைகள் என்று எந்த ஒரு விஷயத்தையும் எழுதியதில்லை. அறிவியல், சூழலியல், பகுத்தறிவு, வரலாறு, தொன்மை, மறுவாசிப்பு, என்ற வகையிலேயே கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. உலகப்புகழ்பெற்ற குட்டி இளவரசனை மறுவாசிப்பு செய்து குட்டி இளவரசனின் குட்டிப்பூ என்ற நாவலும், மனித குல வரலாறைச் சொல்லும் பீம்பெட்கா என்ற நாவலும், தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் ஆதனின் பொம்மை என்ற நாவலும், மகாபாரத ஏகலைவனின் கதையை மறுவாசிப்பு செய்து கட்டைவிரலின் கதை என்ற நாவலும், விடுதலைப்போராட்ட வீரர் வாஞ்சிநாதனைப் பற்றி யார் அந்த மர்ம இளைஞன் என்ற நாவலும் வேள்பாரியின் இளமைப்பருவத்தைப் பற்றி முற்றிலும் புனைவாக எழுதப்பட்ட நாவலும் மிக முக்கியமானவை என்று நினைக்கிறேன். இந்த நாவல்களின் இன்னொரு சிறப்பம்சம் அனைத்து நாவல்களிலும் தொடர் கதாநாயகர்களாக கேப்டன் பாலுவும், ஆதன் என்ற கீழடி நாயகனும் வருகிறார்கள்.
அதேபோல சின்னஞ்சிறு குழந்தைகளுக்கான கதைகள், தொடங்கி அனைத்து வயதினருக்குமான யதார்த்தக்கதைகள், ஃபேண்டசி கதைகள், அறிவியல் கதைகள், சூழலியல் கதைகள், நகைச்சுவைக்கதைகள், பகுத்தறிவுக்கதைகள், அரசியல் கதைகள், என்று எல்லாவகையான கதைகளையும் எழுதியிருக்கிறேன்.
சிறார் இலக்கியத்தின் திருப்புமுனையாக தாங்கள் கருதுவது
கொரோனா காலகட்டம் தான் சிறார் இலக்கியத்தின் திருப்புமுனையான காலகட்டமென்று நினைக்கிறேன். உலகமுழுவதும் மரணங்களால் விரக்தியடைந்து திகைத்திருந்த காலத்தில் தான் சிறார் இலக்கியம் புத்துயிர் பெற்ற து. பள்ளிகள் இல்லை. வகுப்புகள் இல்லை. பாடப்புத்தகங்கள் இல்லை. வீட்டுப்பாடங்கள் இல்லை. வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்த குழந்தைகள் தான் சிறார் இலக்கிய விருட்சத்துக்கு நீரூற்றியவர்கள். குழந்தைகளின் பொழுதுபோக்குக்காகக் கதைகளைத் தேடிய பெற்றோர்கள் நவீனக் கதைகளைத் தேடினார்கள். அப்போது குழந்தைகளுக்குக் கதை சொல்லும் தேவதைகளாக கதைசொல்லிகள் அந்தக் கதைகளை அறிமுகப்படுத்தினார்கள். இணையவழியாகவும், யூ டியூப், கூகுள் மீட், ஜூம், என்று குழந்தைகளிடம் எழுத்தாளர்களும் உரையாடினார்கள். குழந்தைகளும் கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். எழுதத் தொடங்கினார்கள். பெண்கள் எழுதினார்கள்.
இப்படித்தான் ஒரு சுனாமி போல நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியம் சமூகத்தின் கவனம் பெறத் தொடங்கியது.
சிறுவர்களுக்கு கற்பனை கதைகள் தேவையா?
நிச்சயமாக கற்பனைக்கதைகள் தேவை. குழந்தைகள் கட்டற்ற கற்பனை வளம் மிக்கவர்கள். மனிதகுல முன்னேற்றத்துக்குக் கற்பனை தான் மிக முக்கியமான காரணம். வெளியில் பார்த்த ஒரு பொருளை தன் மனதில் என்று கற்பனையில் பார்க்க ஆரம்பித்தானோ அப்போதே மனிதனின் பகுத்தறிவு வளரத் தொடங்கிவிட்டது. குழந்தைப்பருவத்தில் குழந்தைகளின் கற்பனையில் தான் பறக்கும் யானையும், சிரிக்கும் நாயும், பேசும் காகமும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. கலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அடிப்படையே கற்பனை தான். அதனால் குழந்தைகள் ஃபேண்டசிக்கதைகளை மிகவும் விரும்புவார்கள்.
கடந்த கால சிறார் இலக்கியத்திற்கும் தற்கால சிறார் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாக தாங்கள் கருதுவது?
மிக முக்கியமான வேறுபாடென்பது சிறார் இலக்கியம் நவீன காலப்பொருண்மைகளை முன்வைக்கிறது. முன்பு பொதுவாக இருந்த விழுமியங்கள் இப்போது சிறப்புக்கூறுகளாக மாறியிருக்கின்றன. வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல், பாலினசமத்துவம், அனைத்துயிர்போற்றல், மாற்றுப்பாலினப்புரிதல், பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு, சமூகப்பிரச்னைகள், கல்விமுறைப் பிரச்னைகள் என்று இன்று புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய காலகட்டத்திலிருக்கிறோம். இதையே வேறுபாடாக நினைக்கிறேன்.
சிறுவர்கள் ஏன் வாசிக்க வேண்டும்
வாசிப்பு என்பது இந்த உலகைப் புரிந்து கொள்வது, தன்னைப் புரிந்து கொள்வது, தன்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வது, தன்னுடைய உறவுகளைப் புரிந்து கொள்வது, இந்த உலகத்துக்கும் தனக்குமான உறவைப் புரிந்து கொள்வது, தன்னுடைய வெற்றி தோல்விகளைச் சமமாகப் புரிந்து கொள்வது, அனைத்துயிர்களுக்கு இங்கே வாழும் உரிமை உண்டென்பதைப் புரிந்து கொள்வது, நமக்கு இந்த பூமி சொந்தமில்லை. இந்த பூமிக்கு நாம் தான் சொந்தமென்பதைப் புரிந்து கொள்வது, அறிவை விருத்திசெய்வது, உண்மையைத் தேடச் செய்வது, நம் கற்பனையின் ஊற்றைத் திறப்பது, வாசிப்பு தான் இந்த பூமியின் மற்ற விலங்குகளிலிருந்து நம்மை வேறுபடுத்துகிறதென்பதை உரக்கச் சொல்ல வேண்டும். சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களும் வாசிக்க வேண்டும்.
தற்கால சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர்வதற்கு பெற்றோர்களும், கல்விக் கூடங்களும் செய்ய வேண்டியவை?
தற்காலச் சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர்வதற்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். முதலில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும். பழைய பஞ்ச தந்திரக்கதைகளிலிருந்தும், பீர்பால், தெனாலி, மரியாதைராமன், முல்லா கதைகள் போன்ற பழைய நீதிக்கதைகளிலிருந்து விடுதலையடைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயது வரை புராண, இதிகாச, பைபிள், குரான் கதைகளைச் சொல்லவேண்டியதில்லை. அறிவுரைக்கதைகள், நன்னெறிக்கதைகள், நீதிக்கதைகள் போன்ற செயற்கையான அறிவுரைக்கதைகளினால் குழந்தைகளைச் சித்திரவதைச் செய்யக் கூடாது. சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சிறார் நூல்களை வாசித்த பிறகே குழந்தைகளிடம் வாசிக்கவோ, கதைகளைச் சொல்லவோ வேண்டும்.
அரசியல் வாதிகள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் ஏதாவது ஒரு புத்தகம் பற்றிப் பேசவேண்டும். முதலமைச்சரிலிருந்து அத்தனை அமைச்சர்களும் அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் புத்தகம் பற்றிப் பேசவேண்டும். உயரதிகாரிகளிலிருந்து அனைத்து அதிகாரிகளும் தங்கள் அலுவல் கூட்டங்களில் புத்தகம் பற்றிப் பேச வேண்டும்..
அனைத்து ஊடகங்களும் புத்தக அறிமுகத்தைத் தினமும் கட்டாயமாக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு நகரிலும் வாசிப்புத் திருவிழாக்கள் நடக்க வேண்டும். அப்படி நடக்கும்போது நம்முடைய சமூகமே வாசிப்பை நோக்கி நகர்ந்து விடும்.
அதுவரை குழந்தைகளை வாசிக்க வைக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், கதைசொல்லிகள், குழந்தை நலச்செயல்பாட்டாளர்கள், அனைவரும் பெரும் முயற்சிகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். போலச் செய்வது தான் மனித இயல்பு. பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே குழந்தைகளும் செய்வார்கள். ஆகவே நாம் அனைவரும் வாசிப்பை நோக்கி நகர்வோம். குழந்தைகளும் பின்தொடர்ந்து வாசிப்பார்கள்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.