அதெல்லாம் சரி, இருமேனி என்ற பெயர் எப்படித்தான் வந்திருக்கும் ?
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் ! தொடர் – 15
முதல் வகையான சங்கு, இருமேனி என்ற பெயர் உள்ள சங்குகள் அல்ல. ‘பட்டி’ வகையைச் சார்ந்த மற்றுமொரு சங்கு இருமேனி கடல் பகுதியில் அதிகமாகக் கிடைத்ததால் அதற்கு இருமேனி பெயர் வந்தது என்று கூறுவதும் பொருத்தமாக இல்லை என்பதையெல்லாம் கடந்த தொடரில் பார்த்தோம். இத்தொடரின் இறுதிப்பகுதியாக, இருமேனி என்ற பெயர் வந்தமைக்கான எமது அவமானிப்போடு நிறைவு செய்கிறோம்.
அடுத்தபடியாக KAMS உமர்சாகிப் கூற்றுப்படி, இரண்டு வகையான சங்கு, அதாவது மன்னார் வளைகுடாவிற்கே உரித்தான Turbinella pyrum var.acuta (ஜாதி) மற்றும் பாக்ஜலசந்திக்கே உரித்தான Turbinella pyrum var.obtusa (பட்டி), இந்த இரண்டும் ஒரே இடத்தில், அதாவது இருமேனி கடல் ஓரத்தில் கிடைக்கின்றன என்பது ஓரளவு உண்மைதான். இதை Hornel (1915,1916) போன்ற ஆராய்ச்சியாளர்களும் ஒப்புகொள்கின்றனர். மன்னார் வளைகுடாவும், பாக்ஜலசந்தியும் சேரும் கடல் ஓரங்களில் தான் இருமேனி, மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் அமைந்துள்ளது. கடல் தட்ப வெப்பநிலை காரணமாக இரண்டு வகையான சங்குகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.மேலும் சில வித்தியாசமான வகைகளும் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆகவே, இருமேனி சங்கு எடுக்கும் பகுதியில் இரண்டு வகை, ஜாதி மட்டும் பட்டி வகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. இரண்டு ஒருமேனி சங்குகள் ஒரே இடத்தில் கிடைப்பதால், அந்தக் கடல் ஓரங்களை “இருமேனி” கடல் அல்லது “இருமேனி” சங்கு கிடைக்கும் இடம் என்று கூறுவதற்கும் வாய்ப்புண்டு.
இறுதியில் இருப்பது ‘இருபிறவி’ சங்கு ஒன்று தான். அடிப்படையிலே இவை வித்தியாசமான, இருமேனி பெயர்க்கு நெருக்கமான பெயரைத் தாங்கியுள்ளது. சிலரின் கூற்றுப்படி ‘இருபிறவி’ சங்கு இருமேனி கடல் ஓரத்தில் மட்டுமே கிடைப்பதாகக் கூறுவர். Hornell (1915) கூற்றுப்படி சில இருபிறவி சங்கு மண்டபம், இராமேஸ்வரம் பகுதியில் குறைவாகவே கிடைக்கிறது என்ற கூற்றை நோக்கினாலும், அவர்கள் அந்தப் பகுதிகளை முழுமையாக ஆராயவில்லை. அவர்களின் ஆராய்ச்சி சங்கு குளிப்பவர்கள் மற்றும் சங்குத் தொழில் செய்பவர்களிடமிருந்து வந்தவை தான். ஆகவே இருபிறவி தான் இருமேனி சங்காக இருக்க வாய்ப்புண்டு.
மேலும், ‘இருபிறவி’ சங்குவின் அர்த்தம் என்னவென்றால் அவை இரண்டு முறை பிறந்தது அல்லது மறு பிறவி எடுத்தது என்பது. இந்தப் பெயர் அந்தச் சங்கிற்குப் பொருத்தமாக இல்லை. காரணம் இருபிறவி சங்கு இரண்டு சங்குகளின் வெளித்தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதாவது, கொஞ்சம் ஜாதி சங்கின் தோற்றமும், கொஞ்சம் ‘பட்டி’ சங்கின் தோற்றமும் இருப்பதால் அதற்கு இருமேனி என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும். அதாவது இரண்டு மேனிகளை (ஜாதி, பட்டி மேனிகளை) வெளிப்படுத்தும் வகையாக உள்ளது என்பதுதான் பொருந்தும். அப்படி இரண்டு மேனிகளைக் கொண்டிருப்பதால் இந்த “இருபிறவி” ஜாதி சங்கானது மற்ற ‘பட்டி’ சங்கை காட்டிலும் நல்ல விலையுள்ள சங்காக இருந்திருக்கிறது.
அந்தப் பகுதியில் வாழும் முஸ்லீம்கள் பெரும்பாலும் தமிழ் பற்று மிக்கவர்கள். பல கவிஞர்கள், புலவர்கள் வாழ்ந்த பகுதி. அதனால் இருபிறவி என்ற தவறான வார்த்தையை மாற்றி, அந்தச் சங்கின் இயற்கை குணங்களும், வெளிப்புறத் தோற்றத்திற்குத் தோதாகப் பெயரை மாற்றி இருமேனி என்று அழைத்திருக்கலாம். இந்தப் பெயரே பெரும்பாலும் மீன் பிடிப்போர், சங்கு குளிப்போர், சங்கு விற்போர் மத்தியில் புழங்கி இருக்கவேண்டும். இதைச் சில மாதங்கள் சில இடங்களில் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதிய விஞ்ஞானிகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆகவே இருமேனி என்ற கிராமம், அந்தப் பகுதியில் அதிகமாக எடுக்கப்பட்ட, பேசப்பட்ட ‘இருபிறவி’ என்ற இருமேனி சங்கின் மூலம் தான் உதித்திருக்க வேண்டும் என்பது எமது அவதானிப்பு.
(முற்றும்)






Comments are closed, but trackbacks and pingbacks are open.