இலங்கை நாடாளுமன்றக் குழு :
விருதுநகர் மாவட்டம்,வெம்பக்கோட்டை அகதி முகாமில் தங்கியிருந்த காலஞ்சென்ற அந்தோணி என்பவரின் முயற்சியால் இலங்கை நாடாளுமன்றக் குழு ஒன்று தமிழ்நாடு வந்து அகதி முகாம்களில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் பின்னர் இலங்கைக் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி முகாம்களில் உள்ள நாடற்றவர்கள் இலங்கை வந்தால் அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்க இச்சட்டத்தின் திருத்தம் வழிவகை செய்கிறது.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் :
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர். இவர்கள் தொடர்பாக 1964ல் இரு நாட்டுப் பிரதமர்களாலும் செய்யப்பட்டது இந்த ஒப்பந்தம். 1974 இல் இந்திரா சிறிமா ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தங்களில் ஏற்றுக் கொண்டபடி சுமார் ஆறு லட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும். எனினும் சுமார் 4,60,000 பேருக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு அனைவருக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கியது. இதனடிப்படையில் இந்திய அரசு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி முகாம்களிலுள்ள சுமார் 45000 நாடற்றவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும். முகாம்களில் உள்ளவர்களில் 90 சதவீதமானோர் நாடற்றவர்கள் என்பது கவனிக்கத் தக்கது,
சில முயற்சிகள் :
இலங்கை அகதிகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேர்ந்தப் பூர்வீக இலங்கைத் தமிழர்.
2.இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள்.
3.இந்திய அரசிடம் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை பெற்று, இந்திய அரசின் சிவப்ப நிறக கடவுச் சீட்டு பெற்றவர்கள்.
4.இந்திய வம்சாவளித் தமிழர்கள், இழக்க கலவரங்கள் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறி, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள்.
இவர்களில் வடக்கு- கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர் இலங்கைக் குடியுரிமை உள்ளவர்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் இல்லாத நாடற்றவர்களாக உள்ளனர்.
வாக்களிப்பு :
சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம் 1964 இன்படி இந்தியக் குடியுரிமை பெற்று, அதற்கு ஆதாரமாக சிவப்பு நிற இந்தியக் கடவுச் சீட்டு பெற்ற சட்டப்படியான இந்தியர்களும் அகதிகளாக இருப்பதுதான் வேதனையும் வியப்பும் ஆகும். இவ்வாறு முறையான இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் முறையான வகையில் வராததால் அவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர்.
சமூக அக்கறையுடைய வழக்கறிஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்ததன் மூலம் முறையான இந்தியக் குடியுரிமை பெற்று வந்த 15 பேருக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தது ஒரு சாதனை என்றால் அது மிகையாகாது.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரோமியோ ராய் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு ந. சரவணன் உள்ளிட்டோர் இதற்கான முன் முயற்சிகளை எடுத்து அகதிகளுக்கு இந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது,

நீதி வேண்டும் !
சுமார் அரை நூற்றாண்டு காலம் ஒரு லட்சம் பேரை அகதிகளாகவே வைத்திருப்பது கொடிய மனித உரிமை மீறல் அன்றி வேறென்ன? இந்தியர்களையே அவர்கள் இன்னொரு நாட்டுக்குப் போய் திரும்பி வந்த நிலையில் அகதிகளாகவே வைத்திருப்பது என்ன நியாயம்! இதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்திய மண்ணில் பிறந்தவர்களையே 40 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வைத்திருக்கின்ற மனித குல விரோதச் செயலை இந்திய அரசு செய்து வருவதுதான். இது மட்டுமா.. சட்டப்படியும் ஒப்பந்தப்படியும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு, அதற்கு ஆதாரமாக இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர் களையும் இந்திய அரசு மிக நீண்ட காலமாக அகதி நிலையிலேயே வைத்திருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நோர்வே, ஆஸ்திரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்று அனைத்து உரிமைகளோடு வாழ்கின்றனர். இந்திய நாட்டில் மட்டுமே இந்த அநீதி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டியது அவசியம்.
அனைத்து ஜனநாயக சக்திகளும் மாநில மற்றும் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் தீவிர நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இனியும் காலம் கடத்தாது இக் கடமையை முன்னெடுக்க வேண்டும். நமது தொப்புள்கொடி இரத்த உறவுகள் என்ற உணர்வோடு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இப்பணியை உடனடியாகத் தொடங்க வேண்டியது அவசியம்.
வழக்கறிஞர் தமிழகன் MA., BL., PGDJ.






Comments are closed, but trackbacks and pingbacks are open.