தன்னம்பிக்கையை சிதைக்கும் உருவ கேலிகள் குறித்த கதைகள் !
சிறார் இலக்கியம் பாகம் – 08
மனிதர்களின் உருவ கேலி (Body shaming) என்பது பிறர் மனதை ஆழமாகப் பாதிக்கும் ஒரு தீவிரமான செயலாகும். சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை ஒரு இயல்பான நகைச்சுவையாகப் பார்க்காமல், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொடுப்பது அவசியம்.
குறிப்பாக அதை கதைகளின் வழியாக கற்பித்தால் சிறுவர்களிடம் எளிதில் மாற்றம் ஏற்படும்.
ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். நிறம், உயரம், எடை, போன்ற உடல் சார்ந்தவை இயற்கையானவை என்பதை சிறுவர்களுக்கு அறியச் செய்வது மிக முக்கியம்.
குட்டைப் பையன், குண்டு பொண்ணு, கருப்பன்,கருப்பி, நொண்டி,குருடன் , செவிடன் , சொட்டைத்தலையன், திருநங்கையர்களை எண்களைக் கொண்டு குறிப்பிடுவது மற்றும் உருவம் சார்ந்த இன்னப்பிற சொற்கள் கதைகளில் பயன்படுத்தும்போது சொற்களின் வலிமையை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். உருவத்தைக் கிண்டல் செய்வது மகிழ்ச்சியான உரையாடல் அல்ல என்பதையும், அது மற்றவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்துவிடும் என்பதையும் மிக இயல்பாக கதைகளின் வழியாகக் கூற வேண்டும்.

சில சிறார் இலக்கிய நூல்களில் சிறுவர்களை மகிழ்விக்கின்றோம். என்ற பெயரில் இதுபோன்ற உருவகேலி குறித்த சொல்லாடல்கள் இடம்பெறுகின்றன. அப்படிப்பட்ட முறையில் குறிப்பிட்ட சில சிறுவர்களை மட்டுமே மகிழ்வித்து, இச்சூழலில் உள்ள சிறுவர்களை பாதிக்கும் வகையில் படைக்கும் இலக்கியம் சிறார் இலக்கியமாகக் கருதப்படாது.
மேலும், இவ்வாறு உருவ கேலி செய்து எழுதப்பட்ட கதைகளை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யாமல் இருத்தல் நலம்.
விலங்குகள் சார்ந்த கதைகளிலும் கூட உருவ கேலி குறித்த சொல்லாடல்கள் பயன்படுத்தக் கூடாது. குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நாம் சிறுவர்களுக்காக எழுதக்கூடிய ஒவ்வொரு கதைகளும் சிறுவர்களையே சென்றடையும். அதை வாசிக்கக் கூடிய சிறுவர்களில் இப்படி ஒரு குறைபாடு உள்ள குழந்தை வாசித்தால் நிச்சயம் அதன் தன்னம்பிக்கை மற்றும் மனநிலை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அது மட்டுமல்லாது சராசரி குழந்தை வாசித்தாலும் அதனுடைய மனதில் இச்சொல்லாடல்கள் மிக இயல்பானது என்ற கூற்றும், இச்சொல்லின் வீரியம் புரியாமல் இயல்பானதாக போய்விடும்.
(தொடரும்)
— கார்த்திகா கவின்குமார், எழுத்தாளர், கதைசொல்லி






Comments are closed, but trackbacks and pingbacks are open.