பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. உடன்படவில்லை! – கே.என்.நேரு
திருச்சி தி.மு.க. முதன்மைச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களிடம் சந்திப்பில்,
தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால், திமுக முப்பெரும் விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும். தலைவரே அறிவிப்பார்.
நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்பட்டுள்ளது. அவரிடமிருந்து செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் தி.மு.க. பா.ஜ.க.வுடன் மறைமுகக் கூட்டணியில் இருந்தது எனத் திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு:-
பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. தலைவர் உடன்படவில்லை. சமூக நீதி, சனாதனம், முஸ்லிம்கள் குடியுரிமைச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் நாங்கள் உடன்படவில்லை. தற்போது த.வெ.க. கூட்டணியில் இருப்பவர்கள் தான் மறைமுகமாக பா.ஜ.க.வுடன் உறவில் உள்ளனர் என்றார்.
200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறியவர்கள், முன்பு ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்களை இப்போது ஐயாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை செலுத்த வைக்கின்றனர். கிராமப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மின்வெட்டுப் பிரச்சனை உள்ளது. மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு கிடைக்கவில்லை; இருமுனை மின்சாரத்தை வைத்து எப்படி விவசாயம் செய்வது? மின்வெட்டு காரணமாகப் பொதுமக்களே மறியல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவருக்கு மக்கள் பிச்சை போடவில்லை எனத் துரை வைகோ கூறியது குறித்த கேள்விக்கு:-
அவரைப் பற்றி பேச விரும்பவில்லை. சின்னப் பிள்ளை ரொம்ப அதிகமாகப் பேசுகிறார். எங்க அப்பா கோபக்காரர்; கொஞ்ச நாள் பொறுங்கள், என்னால் கட்சி நடத்த முடியாது, நான் தி.மு.க.வுடன் வந்து விடுகிறேன் எனக் கூறியவர் தான் துரை வைகோ. அவர் எப்போது என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. எங்களுடைய வளர்ச்சி நின்று போய்விட்டதாகக் கூறுகிறார்; வெற்றிபெற்ற வேட்பாளர் எங்களுடன் வந்திருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா என்று தெரியவில்லை. அவர் கடுமையாகத்தான் பேசுகிறார்; அப்படிப் பேசுவது நியாயம் இல்லை. சமூக வலைதளங்களில் அவர்களைப் பற்றி எல்லாம் வருகிறது. தளபதியை விட வயதில் சின்னவர்; எங்கள் தளபதியைப் பற்றி எல்லாம் பேசலாமா? தளபதி பிறந்த காலத்தில் அவர் பிறந்திருக்கவே மாட்டார், என்ன செய்வது? என தெரிவித்தார்.
பேட்டியின் போது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ,மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், குடமுருட்டி சேகர், துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி, மண்டி சேகர், கதிர்வேல், துர்கா தேவி, ஜெயநிர்மலா, கலைச்செல்வி, சிந்தாமணி பாலமுருகன், எம்.ஆர்.எஸ்.குமார், தஸ்தபாய் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.